சினிமா
Published:Updated:

யார் வாழ்க்கையில் யாரு?

பயோபிக்
பிரீமியம் ஸ்டோரி
News
பயோபிக்

ஓவியங்கள்: பி.ஆர்.ராஜன்

பயோபிக்தான் இப்போதைய ஹாட் டாபிக். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது எனப் பல தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் வர, பின்னர் அந்தப் படத்திலிருந்து வி.சே விலகிவிட்டார். ‘நீங்கள் ஒரு பயோபிக் எடுப்பதாக இருந்தால் யாரை வைத்து யாருடைய வாழ்க்கையைப் படமாக எடுப்பீர்கள்?’ என்று தமிழ் சினிமா இயக்குநர்களிடம் கேட்டோம்.
யார் வாழ்க்கையில் யாரு?

பாலாஜி சக்திவேல் ``எனக்கு யாருடைய பயோபிக்கும் படமா எடுக்குற ஐடியா இல்ல. ஆனா, சே குவேரா பயோக்பிக்ல சூர்யா நடிச்சா நல்லாருக்கும். இந்த எண்ணம் எனக்குள்ள தோணுறதுக்கு காரணம் செல்வராகவன். ஏன்னா, ‘என்.ஜி.கே’ படத்தோட பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸானப்போ சே குவேரா கெட்டப்ல சூர்யா இருந்தது மாதிரி எனக்குத் தோணுச்சு. ‘சே குவேரா கதையைப் படமா எடுக்குறாங்கபோல’ன்னு நினைச்சேன். அதுக்குப் பிறகுதான், ‘என்.ஜி.கே’ படத்தோட கதை வேறன்னு தெரிஞ்சது. ஆனால், சூர்யாவுக்கு அந்த கெட்டப் நன்றாக இருந்தது. அதனால, சே குவேரா வாழ்க்கை வரலாற்றுப் படம் சூர்யாவுக்கு சரியா பொருந்தும்னு நினைக்குறேன்.’’

யார் வாழ்க்கையில் யாரு?

லிங்குசாமி ‘`ரஜினி சாரை வெச்சு இதுவரைக்கும் நான் படம் எடுக்கலை. ஆனா, அவரோட பயோபிக் படத்தை எடுக்கணும்னு ஆசையிருக்கு. ஏன்னா, நான் ரஜினியோட தீவிர ரசிகன். அவர் ஸ்டைல், நடிப்பு எல்லாம் ரொம்பப் பிடிக்கும். இந்த பயோபிக்ல நடிகர் தனுஷ் நடிச்சா நல்லாருக்கும். ரஜினி கேரக்டருக்கு தனுஷ் தோற்றம் சரியா இருக்கும்னு தோணுது. ரஜினி சாரோட ஸ்டைலும் தனுஷுக்கு நல்லா வரும்.’’

யார் வாழ்க்கையில் யாரு?

வசந்தபாலன் ``எம்.ஆர்.ராதா வாழ்க்கையைப் படமா எடுக்கணும். தன்னை எதிர்த்து நிக்குறவர் யாரா இருந்தாலும் தைரியமா கருத்துகளை முன்வைத்தவர். தன்னுடைய நாடகங்கள், படங்கள் வழியா அரசியல் நையாண்டிகளைக் கொண்டு வந்தவர். படத்துல இவரைத் தாண்டி வேற யாரையும் பார்க்க முடியாத அளவுக்கு வெரைட்டியான நடிப்பைக் கொடுத்திருக்கார். சீர்திருத்தக் கருத்துகள் மற்றும் கடவுள் மறுப்புக் கொள்கையைப் பேசியிருக்கார். பெரிய கலகக்காரரின் குரலா இவரைப் பார்க்குறேன். இவரோட வாழ்க்கை சுவாரசியம் நிறைந்ததா இருக்கும். எல்லாக் காலங்களிலும், எல்லாத்துக்கும் மாற்றுப் பார்வையைச் செலுத்தியிருக்கார். இவரோட ‘ரத்தக்கண்ணீர்’ இன்னுமே கண்ணுல நிக்குது. வில்லனை ரசிக்க வைத்த முதல் நடிகன் எம்.ஆர்.ராதா. இவரோட வாழ்க்கையில விஜய் சேதுபதி நடிச்சா நல்லாருக்கும்.’’

நலன் குமரசாமி

‘`பயோபிக்னு சொல்றதைவிட முக்கியமான சம்பவத்தைப் படமா எடுக்கணும்னு ஆசையிருக்கு. இந்தியாவுடைய அரசியலமைப்பு உருவானது பற்றிப் படம் பண்ணலாம். அமெரிக்கா மற்றும் இந்தியாவுலதான் எழுத்து பூர்வமான அரசியலமைப்பு உருவாகியிருக்கு. இந்தியா பெரிய நிலப்பரப்பு, மக்கள், சடங்குகள் மற்றும் நியாயதர்மம்னு எல்லாத்தையும் கொண்டிருக்கிறதனால, 350 பேர் கொண்ட குழுவுக்கு அம்பேத்கர் தலைமை தாங்கி அரசியலமைப்பை உருவாக்கியிருக்கார். இவர்களுக்குள்ள நிறைய பேச்சுவார்த்தை, கேள்வி, விவாதம் நடந்திருக்கு. இந்தக் குழு ரெண்டரை வருஷமா வேலை செஞ்சிருக்காங்க. இந்தியாவுக்குப் பெரிய ஆதாரமா இது இருக்கு. இதைப் பற்றிப் படம் எடுக்குறது முக்கியம்னு நினைக்குறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க படமா இருக்கிறதனால கதாநாயகன், நாயகின்னு இருக்க மாட்டாங்க. நிறைய கேரக்டர்ஸ் இருப்பாங்க. ஆனால், நடிகர்கள் எல்லாரும் இந்தியா முழுக்கத் தெரிந்த முகமாக இருந்தால் நல்லாருக்கும்னு தோணுது.’’

அமீர்

‘`தன் இனத்துக்கு எதிராக நடக்கும் அநீதிகளை ஒடுக்குவதற்காக ஒற்றை மனிதனாகச் சிந்திக்கத் தொடங்கி, அதுக்குப் பிறகு தன்னுடைய நண்பர்களோட களத்துல இறங்கியவர்; உலகமே வியக்கும் அளவுக்கு ராணுவத்தைக் கட்டமைத்து 35 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடியவர்; சிம்ம சொப்பனமாக இருந்து போரில் வீரமரணம் அடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மாவீரர் பிரபாகரன் வாழ்க்கையைப் படமா எடுக்க விரும்புவேன். `தன் இனத்துக்கு எதிராக நடக்கும் அநீதிகளை சர்வதேச உலகின் கவனத்துக்குக் கொண்டு போக படமாக எடுத்தால் சரியாயிருக்கும்’னு பிரபாகரனும் விரும்பினார். ஆனால், இவரோட கதாபாத்திரத்தில் நடிக்க புதுமுக நடிகரே சரியாகவும் இயல்பாகவும் இருப்பார்.’’

சுஹாசினி

‘`பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோஸ் போவ் (Jose Bove) வாழ்க்கையைப் படமா எடுக்கணும். ஏன்னா, 25 வருஷமா ஆர்கானிக் உணவு வகைகளைப் புழக்கத்துக்குக் கொண்டுவரணும்னு போராடிட்டிருக்கிறார். ஜங்க் புட்டைத் தவிர்க்கணும்னு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திட்டிருக்கிறார். நம்ம நாட்டுல இப்போ யோசிக்குற விஷயங்களைப் பல வருஷத்துக்கு முன்னாடியே இவர் செயல்படுத்தத் தொடங்கிட்டார். இப்போ இருக்குற சூழல்ல இவரோட பயோபிக்ல கமல் நடித்தால் நல்லாருக்கும்னு தோணுது.’’

யார் வாழ்க்கையில் யாரு?

வெங்கட் பிரபு

‘`இசைஞானி இளையராஜா வாழ்க்கையைப் படமாக எடுத்தால் நல்லாருக்கும். ஏன்னா, அவரோட வாழ்க்கையை இப்போ இருக்குற இளைய தலைமுறைக்குச் சொல்லணும். எண்பதுகளில் நடந்த எல்லாத்தையும் இதுக்காக நம்ம ரீ-கிரியேட் பண்ணுற மாதிரி இருக்கும். முக்கியமா படத்துல ரஜினி, கமல், பஞ்சு அருணாசலம், எஸ்.பி.பி, எங்க அப்பான்னு எல்லா கேரக்டர்களும் வருவாங்க. அதே மாதிரி இளையராஜா அப்பாவுடைய இளமை, நடுத்தரம், முதுமைன்னு ஒவ்வொரு கெட்டப்புக்கும் ஏற்ற மாதிரி நடிகர்களை ஆடிஷன் வெச்சு செலக்ட் பண்ணுனா நல்லா இருக்கும்னு தோணுது.’’