கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

இது ஒரு அழகிய நிலாக்காலம்!

மனைவியோடு கவிஞர் சினேகன்
பிரீமியம் ஸ்டோரி
News
மனைவியோடு கவிஞர் சினேகன்

உயிரைக் கையில் பிடிச்சுக்கிட்டு என் கல்யாணக் கோலத்தைப் பார்க்கணும்னு கண்ணில் ஈரத்தை வச்சுக்கிட்டு இருக்கிற அப்பனைப் பார்த்தேன்.

புதிதாய்க் கட்டிய மாவிலைத் தோரணங்கள் பசுமை மாறாமல் இருக்க, மாக்கோலம்கூடக் களையாமல் இருக்கிறது. புத்தம் புது மனைவியோடு கவிஞர் சினேகன். காதல் கூடிய உன்மத்த நிலையை சினேகனின் பேரன்பும், அன்பு கூடிய அழகைக் கன்னிகாவின் கண்களும் உணர்த்திக் கொண்டேயிருக்கின்றன. நீண்டநாள் காதல் கைகூடியிருக்கிறது.

“எங்கேயோ ஒரு காட்டுக்குள் கிடக்கிற கல் திடீரென ஒரு வீட்டுக்கு முதல்‌ கல்லாவதுபோல, கோடிப் பூக்கள் கொட்டிக் கிடக்கும் வனத்தில் ஒரு பூவைத் தேர்ந்தெடுக்கிற மனசு காதலுக்குத்தான் வாய்க்கும். காதல்ங்கிறது அழகிய பித்துநிலை. கன்னிகாவை 2014-ல் முதன் முதலில் பார்த்தபோது அப்படி ஒரு நிலையை அடைஞ்சேன். கன்னிகாவுக்குச் சில கடமைகள் இருந்தன. சினிமாவில் சாதிக்கணும்னு விருப்பம் இருந்தது. குடும்பத்தைத் தூக்கி நிறுத்த வேண்டிய கடமைகளும் இருந்தன. அதனால் கொஞ்சம் தள்ளி இருந்தபடி இருவரின் சுகதுக்கங்களில், அக்கறையில் உண்மையாக இருந்தோம்.

இது ஒரு அழகிய நிலாக்காலம்!

ரொம்ப நல்லா பேசுவாங்க. எல்லாத்துக்கும் மேலே கன்னிகா குடும்பம் உள்ளங்கையில் வச்சுத் தாங்கலாம்போல நல்லதொரு குடும்பம். நான் என் வேலைகள், பாடல்கள், மக்கள் நீதி மய்யம்னு இருக்க; அவங்க சினிமா, சீரியல்னு இருந்தாங்க. ஆனால், விடாமல் பேசிக்கொண்டே இருந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து பேசி, மனம் புரிஞ்சு, குறை தெரிஞ்சு, பழக முடிஞ்சு, சமயங்களில் என்னைக் கண்ணாடியில் பார்த்துப் பேசுற மாதிரி இருந்தது. இப்போது நான் வார்த்தையை முடிக்கிறதுக்கு முன்னாடி பதிலை அவளால் சொல்ல முடியுது. இப்ப பார்வையிலே ‘அய்யாவுக்கு இது வேணும்’னு அவளுக்குத் தெரியும். காதல் நிறைஞ்சு கிடக்குற இடத்துல வேற எதுக்கும் இடம் கிடையாதுன்னு சும்மாவா சொன்னாங்கன்னு புரியுது.

இது ஒரு அழகிய நிலாக்காலம்!

கொரோனா காலத்தில் இரண்டு பேரும் அவங்கவங்க வீட்டில் சொன்னோம். உயிரைக் கையில் பிடிச்சுக்கிட்டு என் கல்யாணக் கோலத்தைப் பார்க்கணும்னு கண்ணில் ஈரத்தை வச்சுக்கிட்டு இருக்கிற அப்பனைப் பார்த்தேன். ‘இதுதான் உன் மருமக, இதற்காகத்தான் நீ பார்த்த பொண்ணுங்களைப் பார்க்கவே வராம இருந்தேன்’னு சொன்னேன். ‘நல்லா இரு’ன்னு திருநீறு பூசி அனுப்புனாரு. அவங்க குடும்பத்தைப் பார்த்து ‘இவளைப் பிடிச்சிருக்கு. என் வாழ்க்கை இவளை மணந்தால்தான் நல்லாருக்கும்’னு சொன்னேன். அவங்க காது கொடுத்துக் கேட்டாங்க.

அப்புறம் கமல் சார் கிட்டே வந்து ‘இவங்க கன்னிகா, நீங்கதான் கல்யாணத்தை நடத்தி வைக்கணும்’னு சொன்னேன். அவர் ‘நம்ம மாநாட்டில் பிரமாதப்படுத்தி நடத்துவோம்’னு மலர்ந்து சொன்னார். அப்புறம் தேர்தல் தேதியை அறிவிக்க, மாநாட்டு தேதியும் அருகிருக்க, பிரசாரத்திற்குக் கிளம்பிட்டோம். அவரே இப்போது கல்யாணத்தை நடத்திவைக்க, திடீரென உலகமே அழகாயிட்ட மாதிரி இருக்கு.

கன்னிகா என் அழகையும் அசிங்கத்தையும் ஒரே மாதிரி பார்க்கிற பொண்ணு. என்னைக் குறை சொல்லியோ குற்றம் கண்டுபிடிச்சோ செய்தி வந்தால் ‘போய்யா, நான் இருக்கேன்’னு தட்டிக்கொடுத்து அனுப்புகிற தேவதை. பத்து ரூபாய் கொடுத்தாலும் அழகா குடும்பம் நடத்தும். 10 லட்சம் கொடுத்தாலும் அதை பத்திரப்படுத்தி வச்சு குடும்பம் நடத்துகிற பொண்ணு. உங்க தங்கச்சிகிட்டயும் பேசுங்க” என்றதும், கனிகிறார் கன்னிகா.

இது ஒரு அழகிய நிலாக்காலம்!

“அவருடைய பாடல்களை அவர் எழுதினதுன்னு தெரியாம ரசிச்சு வந்திருக்கேன். அன்பு தெரிகிற இடத்தில் மனசு ஆட்டுக்குட்டி ஆகி அடைக்கலம் தேடும்னு சொல்வாங்க. நான் அப்படிப்பட்ட இடத்தில் இப்ப இருக்கேன். கமல் சார் எவ்வளவு பெரிய கலைஞன். ‘தேர்தல் முடியட்டும்... மதுரையில் கல்யாணம்னா திருமலை நாயக்கர் மஹால்கூட பாருங்க. எனக்கு மகன் இல்லை, அதனால் சினேகன் திருமணத்தை நானே செலவு பண்ணி நடத்துறேன். சென்னையில்னா பெரிய கல்யாண மண்டபமாப் பாருங்க. நானே தமிழ் முறைப்படி கல்யாணம் பண்ணி வைக்கிறேன்’னு பாட்டெழுதி, இசையமைத்துக் கொடுத்தார். இதெல்லாம் கமல் சார் செய்றார்னா இவரின் இடம் பாருங்க. அப்புறம் எளிமையாக இங்கே கல்யாணம் முடிச்சோம்.

எனக்கு சினேகன் கணவருக்கும் மேலே. அவர் இல்லாமல் இருக்கிறது கஷ்டம்னு தோணுச்சு. முழுமையான சமர்ப்பணம். முழுமையான தன்னிறைவு. யாருக்கும் புரிவதுதான் இது” அன்பு பெருக்கெடுக்கப் பேசுகிறார் கன்னிகா.

வீட்டிற்குள்ளே கவிஞருக்குப் போட்டி போல!