Published:Updated:

பாரதிராஜா ராஜினாமா எதிரொலி... இயக்குநர் சங்கத் தேர்தல் தேதி மாற்றம்!

அலாவுதின் ஹுசைன்

சங்கத் தலைவர் பதவிக்கு ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிராஜா ராஜினாமா செய்தார்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல்

வார வாரம் படம் வருதுபோல், தமிழ் சினிமா சங்கங்களின் தேர்தல் அடுத்தடுத்து வருகிறது. நடிகர் சங்கத் தேர்தலை அடுத்து 'டான்டிஸ்' (TANTIS) தேர்தல் வரும் 14-ம் தேதி நடைபெறவிருந்தது. அதைத் தொடர்ந்து இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல் 21-ம் தேதி நடைபெறவிருந்தது. இந்நிலையில், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் 21-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பாரதிராஜா ராஜினாமா!
பாரதிராஜா ராஜினாமா!

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மே மாதம் நடைபெற்றது. அப்போது சங்கத்தின் தலைவராக பாரதிராஜா ஏகமனதாகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலை 14-ம் தேதி ஏனைய நிர்வாகப் பதவிகளுக்கும் செயற்குழுவுக்குமான தேர்தலை மட்டும் நடத்த திட்டமிட்டிருந்தது இயக்குநர் சங்கம்.

ஒரு சில நாள்கள் கழித்து திடீரென கடந்த வாரத்தில், `தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன்' என்று கூறி இயக்குநர் பாரதிராஜா தன் பதவியை ராஜினாமா செய்தார்.

பாரதிராஜா ராஜினாமா எதிரொலி... இயக்குநர் சங்கத் தேர்தல் தேதி மாற்றம்
பாரதிராஜா ராஜினாமா எதிரொலி... இயக்குநர் சங்கத் தேர்தல் தேதி மாற்றம்

தலைவர் பதவிக்கும் தேர்தல் நடத்த வேண்டியிருப்பதையடுத்து, அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் தேர்தல் 21-ம் தேதிக்கு மாற்றப்படுகிறது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் வருகிற 10-ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற 12-ம் தேதி கடைசி நாள். ஜூலை 13-ல் வேட்பாளர் இறுதிப்பட்டியல் அறிவிக்கபடும் எனவும் தெரிவித்துள்ளனர். வேறுபதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்கள் தலைவர் பதவிக்கும் வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் எனவும் கூறியுள்ளனர்.