Published:Updated:

மிதாலி ராஜ் பயோபிக்கில் நடிக்கிறார், டாப்ஸி!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறார், டாப்ஸி.

மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்

தமிழ், தெலுங்கு என நடித்துக்கொண்டிருந்த நடிகை டாப்ஸி, பாலிவுட் வாய்ப்புகள் வர ஆரம்பிக்க அதை மிகச் சரியாக பயன்படுத்திக்கொண்டார் என்றே சொல்லலாம். `பிங்க்', `முல்க்' என அவர் நடித்த இந்தி திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால், அவருக்கான மார்க்கெட் மதிப்பும் அதிகரிக்கத் தொடங்கியது. இவரும் கதைகள் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்.

டாப்ஸி
டாப்ஸி

இந்தியில் `பத்லா', தமிழில் `கேம் ஓவர்' என அவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் இரண்டும் நல்ல ஹிட். இதைத் தொடர்ந்து, 80 வயதைக் கடந்த சந்த்ரோ டோமர், பிரகாஷி டோமர் என்ற துப்பாக்கிச் சுடும் வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாற்றில் நடித்துள்ளார், டாப்ஸி. `சாந்த் கி ஆங்' எனப் பெயரிட்டப்பட்டுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. டாப்ஸியும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதால், அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. ஜோத்பூரில் பிறந்த மிதாலி ராஜ், அதிக போட்டியில் விளையாடிய கிரிக்கெட் வீராங்கனை, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை உள்ளிட்ட சாதனைகளுக்குச் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்

சென்ற ஆண்டு, இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங்கின் பயோபிக் வெளியானது. இந்தப் படத்துக்காக முறையான ஹாக்கி பயிற்சி மேற்கொண்டார், டாப்ஸி. அதேபோல, மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்காக கிரிக்கெட் பயிற்சியும் மேற்கொள்ளவிருக்கிறார்.

மிதாலி ராஜ் பயோபிக்கில் டாப்ஸியை தவிர வேறுயாராவது நடிக்கலாம் என்றால் உங்கள் சாய்ஸ் யார்? கமென்ட் இடுங்கள்....