Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

“8 வருஷ பிரேக்-அப்... கலைச்சது முருகன்!” ‘கம்பேக்’ பிரியதர்ஷினி

டந்த எட்டு வருஷமா நான் சீரியல்ல நடிக்காமலேயே இருந்துட்டேன். ஆனால், 'தமிழ்க் கடவுள் முருகன்' சீரியலுக்காக நானே விரும்பி ஆசையோடு ஆடிஷனில் கலந்துகிட்டேன் தெரியுமா?” என்கிறார் பிரியதர்ஷினி. 'தமிழ்க் கடவுள் முருகன்' சீரியலில் கங்கா தேவியாக நடிக்கும் உற்சாகம் குரலில் பாய்கிறது.


பிரியதர்ஷினி

“புராணக் கதைகளை மக்கள் அதிகமா விரும்புறாங்க. கடவுளா நினைச்சுட்டிருக்கும் வடிவங்களை, நம் உருவத்தோடு பொருத்திப் பார்த்து பரவசப்படறதை வார்த்தைகளில் சொல்லிட முடியாது. நான் இந்த சீரியலை ஆடியன்ஸ் பார்வையில் கவனிக்கிறேன். நான் டான்ஸ் டீச்சர் என்பதால், நடனத்துக்கு முக்கியத்துவம் இருக்கும் இதிகாசத் தொடரில் நடிக்கணும்னு முடிவு பண்ணினேன். ஆல்ரெடி ஷூட்டிங் ஆரம்பிச்சு போயிட்டிருந்துச்சு. இடையில்தான் கலந்துக்கிட்டேன். இந்த ரோல்தான் வேணும்னு எதையும் எதிர்பார்க்கலை. இந்த சீரியலில் என் சின்ன பங்களிப்பு இருந்தால் போதும்னு நினைச்சேன். கங்கா தேவியா நடிக்கச் சொன்னாங்க. முருகனுக்கும் கங்கைக்கும் என்ன தொடர்பு எனக் குழம்பிட்டேன். 

முருகன் கதையை 'கந்தன் கருணை' போன்ற படங்களில்தான் பார்த்திருக்கோம். அதில் கங்கை வரவே மாட்டாங்களேனு நினைச்சேன். ஷூட்டிங் ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் புரிய ஆரம்பிச்சது. இதில், கந்த புராணத்தை மையமாவெச்சு ஸ்கிரிப்ட் பண்ணியிருக்காங்க. ஸ்கிரிப்ட் டீம் மட்டுமே ஒரு பெரிய ரிகர்சலில் இறங்கியிருக்கு. இதுவரை காங்கேயம் எனச் சொன்னால், காளை ஞாபகம் வந்துட்டிருந்துச்சு. இப்போதான் முருகனுக்குக் காங்கேயன் என்கிற ஒரு பெயர் இருக்குன்னு தெரியுது. இதுமாதிரி நாம் கேள்விப்படாத பல சுவாரஸ்யமான தகவல்கள் இந்த சீரியல்மூலம் கிடைக்கப்போகுது” என்று பரவசமாகச் சொல்லும் பிரியதர்ஷினி, ஷூட்டிங் ஸ்பாட் அனுபவத்தைப் பகிர்கிறார்.

தமிழ்க்கடவுள் முருகன் பிரியதர்ஷினி

“ஷூட்டிங் ஸ்பாட்ல ஸ்கிரிப்ட் எழுதுறவங்களைத்தான் நான் அதிகம் கவனிப்பேன். எனக்கான ஸ்கிரிப்ட் மட்டுமல்லாம, மத்தவங்க கேரக்டரின் ஸ்கிரிப்ட்டையும் வாங்கிப் படிப்பேன். எழுத்துன்னா எனக்கு அவ்ளோ பிடிக்கும். ஆறு தீப்பொறிகளைக் குழந்தைகளா மாற்றிய அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியாது. என் முன்னாடி ஆறு குழந்தைகள் இருந்தாங்க. அவங்களுக்குப் பேரு வெச்சுட்டு கங்கா தேவியான நான் கிளம்பிடுவேன். அப்புறம் அந்தக் குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் வளர்ப்பாங்க. குழந்தை முருகனை விட்டுப் பிரியும் காட்சியில் அந்த ஆறு பெண்களும் நிஜமாவே அழுதுட்டாங்க. இப்படி நெகிழ்ச்சியும் உற்சாகமுமாக ஷூட்டிங் போய்ட்டிருக்கு. இன்னொரு விஷயம், மும்பையில் ஊரே மூழ்கும் அளவுக்கு மழை பெய்துட்டிருந்தபோதுதான், அங்கே இந்த ஷீட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. எட்டு வருஷத்துக்கு அப்புறம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கேன். என்னை கங்கையாகப் பார்த்த எல்லோருக்கும் ஆச்சர்யம். ஃப்ரெண்ட்ஸ், ரிலேஷன்ஸ், தங்கை என எல்லோரும் 'சூப்பரா பண்ணிருக்கே'னு பாராட்டு மழையால் நனைச்சுட்டாங்க. கங்கையான எனக்கே திக்கு முக்காடிப் போச்சு” என வாய்கொட்டிச் சிரிக்கும் பிரியதர்ஷினியிடம் மீடியா பயணம் எப்போது ஆரம்பித்தது எனக் கேட்டோம்.

Modern Priyadharshini

“சின்ன வயசுலேயே ரொம்ப நல்லா டான்ஸ் ஆடுவேன். பூர்ணிமா மேடம்தான் 'தாவணிக் கனவுகள்' படத்தில் குழந்தை நட்சத்திரமா நடிக்க அழைச்சுட்டுப் போனாங்க. அப்போ எனக்கு ஏழு வயசு. கோபிசெட்டிப்பாளைத்தில் ஷூட்டிங். படத்தில் எனக்கு அஞ்சு சிஸ்டர்ஸ். அவங்களோடு அரட்டை அடிச்சுட்டே இருப்பேன். சிவாஜி சார், பாக்யராஜ் சார்கூட நடிக்கிறோம் என்கிற ஃபீலிங் எதுவும் அப்போ தெரியலை. எனக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சதும், 'அடடா... நாம சிவாஜி சாரோடு நடிச்சிருக்கோமே'னு பெருமைப்பட்டுக்கிட்டேன். அதுக்கு அப்புறம், ராமநாராயணன் சாரின் நாலு தெலுங்குப் படங்களில் நடிச்சேன். 'உயிரே உனக்காக', மணிரத்னம் சாரின் 'இதயக் கோயில்' என எட்டாவது படிக்கிற வரை வருஷத்துக்கு ஒரு படம் பண்ணிட்டு இருந்தேன். ஆறு வயசிலிருந்தே முறையா டான்ஸ் கத்துக்கிட்டதால், டான்ஸ் புரோகிராமுக்காக பல இடங்களுக்குப் போனேன். அப்படித்தான் தூர்தர்ஷனில் டான்ஸ் ஆடினேன். அங்கே கீதா என்கிற புரொடியூசர், 'உன் வாய்ஸ் ரொம்ப நல்லாருக்கு. நீ ஆங்கர் பண்ணலாம்'னு சொன்னாங்க. 'மலரும் மொட்டும்' என்கிற ஷோ பண்ணினேன். அப்புறம் 'விழுதுகள்' தொடர்மூலம் சீரியலில் என்ட்ரி கொடுத்தேன். சன் டி.வி, கலைஞர் டி.வி என நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் டிராவல் பண்ணிட்டிருக்கேன்'' என்று புன்னகைக்கும் பிரியதர்ஷினியின் தங்கைதான் டி.டி என்கிற திவ்யதர்ஷினி. 

Priyadharshini

''நான் ஷீட்டிங் போகும்போதெல்லாம் தங்கச்சியையும் கூட்டிட்டுப் போவேன். ரொம்ப துறுதுறுப்போடு, எல்லோர்கிட்டேயும் ஒட்டிப்பா. அப்படித்தான் சன் டிவியின் குழந்தைகள் புரோகிராமில் அவளை நடிக்கக் கூப்பிட்டாங்க. அப்போ ஐந்தாம் வகுப்புதான் படிச்சுட்டிருந்தாள். அதுதான் டி.டியோட மீடியா என்ட்ரி. இப்போ, பெரிய லெவலுக்குப் போயிட்டாள். சின்ன வயசிலிருந்தே மீடியாவில் இருக்கிறதால், பாப்புலாரிட்டி பற்றி கவலைப்பட்டுக்கிட்டதே இல்ல. இத்தனை வருஷமா இந்த ஃபீல்டுல நிலைச்சு நிற்கிறதே பெரிய விஷயம். அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, நான் எனக்குப் புடிச்ச மாதிரி இருக்கேன். எனக்கு எது செட் ஆகும்னு தெளிவா யோசிச்சு அதைச் செய்துட்டிருக்கேன்'' என்கிறார் அமைதியான குரலில். 

Actress Priyadharshini

''சரி, தீபாவளியை எப்படிக் கொண்டாடினீங்க?'' எனக் கேட்டால், ''தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடி வரை ஷூட்டிங் இருந்துச்சு. அதையெல்லாம் முடிச்சுட்டு நேற்றுதான் ஃப்ரீயா இருந்தேன். வழக்கம்போல புது டிரெஸ் போட்டுக்கிட்டு ஃபேமிலியோடு என்ஜாய் பண்ணினேன்'' என்று புன்னகையுடன் சொல்கிறார் பிரியதர்ஷினி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement