Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘‘ஜெயலலிதா அம்மா அவங்களுக்குப் பிடிச்ச பாடல்கள் லிஸ்ட் கொடுப்பாங்க!” - ‘தேன்கிண்ணம்’ ஶ்ரீதேவி

ஶ்ரீதேவி

‘தேன்கிண்ணம்' நிகழ்ச்சிதான் என் பிரதான அடையாளம். சின்ன வயசிலிருந்து கிளாஸிக் படங்களையும் பாடல்களையும் கேட்டு வளர்ந்தவள். அதைச்சார்ந்தே என் மீடியா பயணத்தையும் தொடர்ந்துட்டிருக்கேன்" - உற்சாகமாகப் பேசுகிறார் ஶ்ரீதேவி. ஜெயா டிவி 'தேன்கிண்ணம்' நிகழ்ச்சித் தொகுப்பாளினி. 

"மீடியா பயணம் எப்படித் தொடங்கியது?" 

“சின்னக் குழந்தையா இருந்தபோது 'ஹார்லிக்ஸ்' உள்ளிட்ட நிறைய விளம்பரங்களில் நடிச்சிருக்கேன். 1999-ம் வருஷம், ஆறாவது படிச்சுட்டிருந்தேன். தன் நண்பர் ஒருத்தரை மீட் பண்றதுக்காக ஜெயா டிவிக்கு எங்கம்மா போறப்போ என்னையும் அழைச்சுட்டுப் போனாங்க. அங்கே நிகழ்ச்சித் தயாரிப்பாளரா இருந்த 'நீயா? நானா?' கோபிநாத், 'நல்லாத் தமிழ் பேசுறியே. இந்த ஸ்கிரிப்டைப் படி'னு சொன்னார். படிச்சுக்காட்டினதும், அன்னிக்கு நைட்டே, 'உங்க பொண்ணு இனி ஆங்கரா வொர்க் பண்ணப்போறாங்க'னு அம்மாகிட்டே போனில் சொன்னாங்க. அப்படித்தான் 'கிட்ஸ் நியூஸ்' நிகழ்ச்சியில் சுட்டி தொகுப்பாளினியா என் மீடியா பயணம் ஆரம்பிச்சது. அந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மாலை அரை மணி நேரம்னு அஞ்சு வருஷம் தொடர்ச்சியா போச்சு."

தேன்கிண்ணம் ஶ்ரீதேவி

" 'கிட்ஸ் நியூஸ்' நிகழ்ச்சியில் மறக்கமுடியாத விஷயம் என்ன?'' 

"அந்த நிகழ்ச்சி அப்போ ரொம்பவே ஃபேமஸ். குழந்தைகள் சார்ந்த செய்திகளை வாசிக்கிறதோடு, பல செலிப்ரிட்டிகளை மீட் பண்ணி அவங்க குழந்தைப் பருவ சுவாரஸ்ய நிகழ்வுகளைப் பேட்டி எடுப்பேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மாவை ஒருநாள் பேட்டி எடுக்க இருந்தேன். கடைசி நேரத்துல கேன்சல் ஆகிட்டதால் ரொம்பவே வருத்தப்பட்டேன். ஆனா, 'இந்தப் பொண்ணு நல்லா ஆங்கரிங் பண்ணுது'னு அம்மாவின் பாராட்டுச் செய்தி மற்றவர்கள்மூலமா பலமுறை என் காதுக்கு வந்திருக்குது. அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளரான கோபிநாத் சார் எனக்கு ஃபுல் சப்போர்டிவா இருந்தார்."

தேன்கிண்ணம்

“ 'கதை கதையாம் காரணமாம்' நிகழ்ச்சி அனுபவம் பற்றி..." 

"பிளஸ் ஒன் படிக்கிறப்போ, பொதிகை டிவியில் 'கதை கதையாம் காரணமாம்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். தினமும் அரை மணி நேரம் என வாரத்துக்கு ஒரு கிளாஸிக் படத்தை ஒளிபரப்புவாங்க. அதுக்கு இடையிடையே படம் மற்றும் அதில் வொர்க் பண்ணினவங்க பற்றி சுவாரஸ்யமான விஷயங்களைச் சொல்வேன். அப்படி 100 படங்களுக்கும் அதிகமாகவும், 'திரைவிமர்சனம்' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினேன்.''

ஶ்ரீதேவி

“உங்களுக்குப் பெரிய அடையாளம் கொடுத்த 'தேன் கிண்ணம்' நிகழ்ச்சியின் வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?” 

“பி.ஏ., சோஷியாலஜி படிச்சுட்டிருந்த நேரம், மறுபடியும் ஜெயா டிவியிலிருந்து 'தேன் கிண்ணம்' வாய்ப்பு வந்துச்சு. ஆரம்பத்தில், வாரத்தின் சில நாள்கள் மட்டும்தான் 'தேன் கிண்ணம்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். நிகழ்ச்சியை ரெகுலரா பார்க்கும் ஜெயலலிதா அம்மா, அவங்க பிறந்தநாளின் 'சிறப்புத் தேன் கிண்ணம்' நிகழ்ச்சியையும் என்னையே தொகுத்து வழங்கச் சொல்லியிருக்காங்க. நானும் தொகுத்து வழங்கினேன். அப்புறம் என்னையே நிரந்தரத் தொகுப்பாளினி ஆக்கிட்டாங்க. அடுத்த ஆறு வருஷத்துக்குத் தொடர்ச்சியா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். இப்போ வாரத்தின் சில நாள்களில் தொகுத்து வழங்கிட்டிருக்கேன். ரெகுலரா நிகழ்ச்சியைப் பார்க்கிறதோடு, ஸ்பெஷல் நாள்களில் ஒளிபரப்பவேண்டிய பாடல்கள் லிஸ்டையும் ஜெயலலிதா அம்மா கொடுப்பாங்க. அந்த அளவுக்கு 'தேன்கிண்ணம்' நிகழ்ச்சி அம்மாவின் ஃபேவரிட். தவிர, 'தகதிமிதா', பிரபலங்களைப் பேட்டி எடுக்கிறது என ஜெயா டிவியில் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கறேன்.'' 

ஶ்ரீதேவி

"கிளாஸிக் பாடல்களுடன் அதிக அளவில் பயணிச்சது எத்தகைய அனுபவத்தைக் கொடுத்தது?" 

"எனக்குத் தமிழ் ரொம்பப் பிடிச்சதால்தான், மீடியாவுக்குள்ளேயே வந்தேன். நல்ல தமிழில், இனிமையான கிளாஸிக் பாடல்களைத் தொகுத்து வழங்கும் வாய்ப்புகளால் மகிழ்ச்சி அடைந்தேன். நிகழ்ச்சிக்காக நிறைய கிளாஸிக் படங்களைப் பார்த்துப் பார்த்து அவற்றின் ரசிகை ஆகிட்டேன். நிறைய செலிப்ரிட்டிகளிடமும் 'ஸ்பெஷல் தேன் கிண்ணம்' நிகழ்ச்சிக்குப் பேட்டி எடுப்பேன். 'தினமும் ஶ்ரீதேவியின் தேன் கிண்ணம் நிகழ்ச்சியைப் பார்த்தா அந்த நாளே சிறப்பா தொடங்கும்'னு ஒரு நிகழ்ச்சியில் பி.சுசீலா அம்மா சொன்னாங்க. அது எனக்கு மறக்கமுடியாத நிகழ்வு. எக்கச்சக்க நிகழ்ச்சிகள் செய்திருந்தாலும், 'தேன் கிண்ணம்'தான் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.'' 

"டான்ஸ் பயணம் எப்படிப் போகுது?" 

"ஆங்கரா இருந்தாலும் டான்ஸ்தான் என் பிரதான வொர்க். 'பத்மஶ்ரீ' சுதாராணி ரகுபதிதான் என் குரு. எட்டாவது படிக்கிற போதே அரங்கேற்றம் பண்ணினேன். நிறைய மேடை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடியிருக்கேன். சின்ன வயசுல டான்ஸ் கத்துக்க ஆசைப்பட்ட என் அம்மாவுக்கு அது நிறைவேறலை. அதனால், அவங்களை மாதிரி டான்ஸ் ஆசை நிறைவேறாதவங்களுக்காக, மயிலாப்பூரில் என் ஃப்ரெண்டுடன் சேர்ந்து 'Tvarica' என்கிற பெயரில் டான்ஸ் கிளாஸ் எடுக்கறேன். அதில் 20 வயசுக்கு மேலான பலரும் டான்ஸ் கத்துக்கிறாங்க.'' 

தேன்கிண்ணம் ஶ்ரீதேவி

“சினிமா வாய்ப்புகள் வந்திருக்கிறதா?" 

" 'கனவு மெய்ப்பட வேண்டும்' படத்தில் மட்டும் டான்ஸரா நடிச்சிருக்கேன். சினிமா ஃபீல்டுல அதிக ஆர்வமில்லை. ஜெயா டிவி 'தேன் கிண்ணம்' தவிர, பெப்பர்ஸ் டிவியில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிட்டிருக்கேன். நிறைய விளம்பரப் படங்களில் நடிக்கறேன். வெளி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கறேன். வாழ்க்கை பயணம் சிறப்பா போகுது" எனப் புன்னகைக்கிறார் ஶ்ரீதேவி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

நீங்கள் கீழே விழுபவரா, கெட்டியாகப் பற்றிக்கொள்பவரா? - பாசிடிவ் வார்த்தைகளின் பலம் உணர்த்தும் கதை! #MotivationStory