“சின்னத்திரையில இதெல்லாம் கஷ்டமப்பா” - ‘அழகு’ சீரியலில் நடிக்கும் விஜேக்கள்

சன் டி.வியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் 'அழகு'. நீண்ட இடைவேளைக்குப் பின்னர் நடிகை ரேவதி சின்னத்திரைக்கு வந்துள்ள சீரியல் இதுவாகும்.  இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தவிர, இதுவரை வீஜேவாக நம்மை கவர்ந்த இரண்டு பேர், சின்னத்திரை நடிகைகளாக இந்த சீரியலில் அவதாரம் எடுத்துள்ளார்கள். அவர்களின் முதல் முயற்சிக்கு வாழ்த்துகள் கூறிவிட்டு அவர்களிடம் சீரியல் அனுபவம் குறித்துக் கேட்டோம்.  கேட்ட உடனே, கலகலவென வீஜே டு சின்னத்திரை அனுபவம் குறித்து மகிழ்வுடன் பகிர்ந்தார்கள்... 

'சன் மியூசிக்' சங்கீதா:

சங்கீதா - அழகு சீரியல்

“சன் மியூசிக் வழியே மக்கள் மனதில் வீஜேவா இடம்பிடிச்சேன். இதுவரை ஒரு சீரியல்கூட நான் பார்த்ததில்லே. ஆனால், இப்போ சீரியலில் நடிக்கறதை நினைக்கும்போது எனக்கே கனவு மாதிரி இருக்கு. என் நண்பர்கள்தான் 'அழகு' சீரியல் ஆடிஷனில் கலந்துக்க சொன்னாங்க. 'சரி,டிரை செஞ்சுப் பார்க்கலாமே'னு கலந்துக்கிட்டேன். என் பர்ஃபார்மன்ஸ் பார்த்துட்டு உடனே செலக்ட் பண்ணிட்டாங்க. சீரியலில் ரேவதி மேடமின் மூத்த மருமகள் நான். ஆரம்பத்தில் என் டீமுடன் செட் ஆகறது கஷ்டமா இருந்துச்சு. இப்போ, டீமுடன் ரொம்பவே குளோஸ் ஆகிட்டேன். ஒரு ஃபேமிலி மாதிரி ஃபீல் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். அந்த சீரியலில் ஒரு காட்சியில் கொஞ்சம்கூட மேக்கப் இல்லாமல் நடிச்சிருப்பேன். அந்தக் காட்சியில் நடிச்சு முடிச்சதும், நான் இருந்த இடத்துக்குத் தேடிவந்த ரேவதி மேம், 'ரொம்ப நல்லா நடிக்கறே. மேக்கப் இல்லாமல் எதார்த்தமா இருக்கு'னு பாராட்டினாங்க. அவ்வளவு பெரிய நடிகையின் பாராட்டு, பெரிய எனர்ஜியைக் கொடுத்துச்சு. தொடர்ந்து சீரியலில் நடிப்பேனானு தெரியாது. ஆனால், இந்த சீரியலில் நிச்சயம் என் முழு திறமையையும் வெளிப்படுத்துவேன்.'' 

'சன் டிவி' ஃபரீனா ஆசாத்: 

ஃபரீனா ஆசாத் - அழகு சீரியல்

“சீரியல், சினிமாவா? நோ... நோ... நான் நடிக்கவே மாட்டேன் என மேடையிலேயே பேசினவள் நான். ஆனா, இப்போ 'அழகு' சீரியலில் நானும் ஓர் அங்கம். என்ன சொல்றது? நாம் நினைக்கிறது எதுவும் நிரந்தரம் இல்லைன்னு மனசுல சொல்லிக்கிட்டேன். என் ஃப்ரண்ட் சங்கீதா அந்த சீரியலில் கமிட் ஆனதும், நடிச்ச அனுபவத்தை சொன்னாள். எனக்கும் நடிக்கும் ஆசை வந்துடுச்சு. அவள் சொல்லி ஆடிஷனுக்குப் போனேன். வீஜே செட்டுல எப்பவும் ஒண்ணா சேர்ந்து ஜாலியா இருப்போம். ஆனா, சீரியல் செட்டுல ஒவ்வொருத்தரும் ஒவ்வோர் இடத்தில் இருப்பாங்க. அந்தந்த சீன் வரும்போது சேர்ந்துப்பாங்க. வீஜேவா இருக்கும்போது, என் நிகழ்ச்சியை நான்தான் தொகுத்து வழங்குவேன். எனக்கு என்ன தோணுதோ அதைப் பேசுவேன். ஆனா, சீரியலில் அப்படி கிடையாது. டயலாக்கை மனப்பாடம் பண்ணி, கரெக்டா பேசணும். டைரக்டர்தான் பாவம்... என்னை நடிக்கவைக்க ரொம்பவே கஷ்டப்படறார். ரெண்டு நாளாதான் ஷூட்டிங் போய்ட்டிருக்கேன். சீக்கிரமே பிக்கப் பண்ணி நடிப்பில் அசத்துவேன். காலையில் எழுந்து வீட்டையும் கவனிச்சுட்டு ஷீட்டிங்குக்கு ஓடும் என் பரபரப்பை பார்த்து என் கணவர் திகைச்சுப்போறார். அதுவே செம அனுபவமா இருக்கு.''

வீஜேவாக நம்மை கவர்ந்தவர்கள் தற்போது சின்னத்திரை நடிகைகளாக நம்மை ஈர்ப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்..

Do you like the story?

Please Appreciate the Author by clapping!