Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''பன்னிரண்டு வருஷமா அதை நினைச்சு அழுதிருக்கேன்!'' - 'அழகி' சோனியா

'அழகி' சீரியலில் அமைதியான குடும்பப் பெண் திவ்யாவாக நடித்து, மக்கள் மனதில் இடம்பிடித்தவர் சோனியா. 'முந்தானை முடிச்சு', ' 'வெள்ளைத் தாமரை', 'வள்ளி', 'அழகி' எனப் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது,  திருமணமாகி மும்பையில் வசித்துவரும் அவருடன் செல்போன் வழியே சந்தித்தோம். 

'அழகி' சோனியா

''என் சொந்த ஊர் அந்தமான். அங்கே என்னைப் பார்த்த தயாரிப்பாளர் ஒருத்தர், சினிமாவில் நடிக்க கூப்பிட்டாங்க. நடிக்கிறதுக்கு என் வீட்டுல ஒத்துக்கலை. அப்புறம் கல்லூரிப் படிப்புக்காக சென்னைக்கு வந்தேன். என் நம்பர் எப்படி கிடைச்சதுன்னு தெரியலை. சீரியல் டைரக்டர் ஒருத்தர் நடிக்க கூப்பிட்டாங்க. எனக்கும் நடிப்பு ஆர்வம் இருந்துச்சு. வீட்டுல பலமுறைப் பேசி சீரியலில் நடிக்க சம்மதம் வாங்கினேன். அப்படித்தான் 'வெள்ளைத் தாமரை' என்ற சீரியலில் அறிமுகமானேன். தொடர்ந்து சன் டிவியின் பல சீரியல்களைப் பண்ணினேன். சில சமயம் ஒரே நாளில் ஐந்து ஷூட்டிங்கூட இருக்கும். 

 

கல்யாணத்துக்குப் பிறகும் என் கணவரும் குடும்பத்தினரும் நான் நடிக்கிறதுக்கு மறுப்பு தெரிவிக்கலை. ஆனால், எனக்குச் சொந்தமா பிசினஸ் பண்ண ஆசை. அதனால் நடிப்புக்குக் கொஞ்ச நாள் பிரேக் எடுத்தேன். இப்போ, 'அயர்ன் அண்டு  இம்பிரஸ்' என்கிற ஒரு லாண்டரி ஷாப்பைத் தொடங்கும் முயற்சியில் இருக்கேன். இன்னும் பத்து நாள்ல ஓப்பன் பண்ணிடுவேன். அந்த ஷாப் ஆரம்பிக்கும் நோக்கமே படிப்பறிவு இல்லாதவங்களுக்கும் ஒரு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் ஆசைதான். என் ஷாப்பில் மக்களுக்காகச் சேவை செய்யும் அமைப்புகளுக்கு ஃப்ரீ சர்வீஸ் செய்துகொடுக்கும் திட்டமும் இருக்கு'' என்று உற்சாகத் தொடர்கிறார் சோனியா. 

'அழகி' சோனியா

 

''இதுவரை எனது பெரும்பாலான சீரியல்களில் அமைதியான பொண்ணாவே நடிச்சிருக்கேன். நிஜத்திலும் நான் அப்படித்தான். என்னைச் சுற்றி இருக்கிறவங்களை எப்பவும் மகிழ்ச்சியா வெச்சுக்க நினைப்பேன். எல்லாவற்றையும் ஓகேனு ஈஸியா கடந்துடுவேன். எனக்கு ரெண்டு அண்ணன்கள். அதில், மூத்த அண்ணன் நான் ஸ்கூல் படிச்சுட்டிருக்கும்போதே எங்களை விட்டுப் பிரிஞ்சுட்டாங்க. சென்னையில் சொந்தக்காரங்க வீட்டுல தங்கி வேலை பார்த்தாங்க. ஒரு பெண்ணை காதலிச்சு திருமணம் செஞ்சு வீட்டை விட்டுப் போய்ட்டாங்க. எங்க சொந்தக்காரங்க அவங்களை காணோம்னு சொன்னதும், நிறைய இடங்களில் தேடினோம். வீடே தலைகீழா மாறிடுச்சு. அண்ணனை நினைச்சு நினைச்சு அம்மாவும் அப்பாவும் மனதளவில் உடைஞ்சுட்டாங்க. என்னாலயும் வீட்டிலிருந்தபடி படிக்க முடியலை. அதனால்தான் சென்னைக்கே வந்தேன். போன வருஷம்தான்  அண்ணன் எங்கே இருக்காங்கனு தெரிஞ்சது. 12 வருஷங்களுக்கு அப்புறம் அண்ணனை சந்திச்சதும், மனசுல இருந்த பாரம் காணாமல் போச்சு. இப்போ எங்க குடும்பமே ஹாப்பியா இருக்கு'' எனப் பாச வார்த்தைகளால் சில நிமிடங்கள் தழுதழுத்த சோனியா, மீண்டும் உற்சாகமாகிறார். 

'அழகி' சோனியா

 

''ஒரு தடவை குடும்பத்தோடு ஷீரடிக்குப் போயிருந்தேன். பக்கத்தில் ஒரு கிராமத்திலிருந்த ஒரு அம்மா, என்னைப் பார்த்ததும், 'நீங்க திவ்யாதானே. சூப்பரா நடிக்கறீங்க?'னு பாராட்டினாங்க. அவங்க நம்ம ஊர்காரங்களும் இல்லை. தெலுங்கு பேசும் ஒருத்தர் என்னை அடையாளம் கண்டுபிடிச்சு பாராட்டினது எவ்வளவு பெரிய விஷயம்?. அன்னிக்கு முழுக்க மனசு றெக்கை கட்டி பறந்துட்டிருந்துச்சு. சினிமாவில் நடிக்கும் ஆர்வம் எதுவும் இப்போதைக்கு இல்லை. 'அருவி' மாதிரியான கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு வந்தா நிச்சயம் ஓகே சொல்லிடுவேன். சைக்கோ மாதிரியான கேரக்டரில் நடிக்க எனக்கு அதிக ஆசை. அந்த மாதிரியான வாய்ப்புக்காகக் காத்துட்டிருக்கேன். சீக்கிரமே என்னை உங்க வீட்டுத் திரையில் மீண்டும் பார்க்கலாம். அதுவரை, நடிகையா உங்களுக்கு தெரிஞ்ச நான், பிசினஸ் வுமனாகவும் சாதிக்க வாழ்த்துங்க'' என்கிறார் சோனியா, நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கலந்த குரலில்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்