Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''கொஞ்ச நாளா என் பொண்ணை ரொம்பவே மிஸ் பண்றேன்!'' - 'வாணி ராணி' சங்கீதா பாலன்

''சீரியலில் என்னை ரெளடியாகவும், வில்லியாகவுமே பார்த்திருப்பீங்க. உண்மையில் நான் பக்கா காமெடி பீஸூங்க'' எனச் சிரிப்புடன் இன்ட்ரோ கொடுக்கிறார் சங்கீதா பாலன். 23 மூன்று ஆண்டுகளாகத் தன் நடிப்பால் அனைவரையும் ஈர்த்தவர். அவருடன் ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு. 

சங்கீதா பாலன்

''அப்பா, தாத்தா எனக் குடும்பமே சினிமாவைச் சேர்ந்தவங்களா இருந்தாலும் எனக்கு சினிமா எண்ணமே இல்லாமல் இருந்துச்சு. என் அப்பாவான 'டேப்' பாலன், இளையராஜா சாரின் குரூப்ல இருந்தவர். ஒரு விபத்தில் அவர் இறந்துடவே, பொருளாதார நெருக்கடியினால் சின்னத்திரைக்குள் வந்தேன். முதல் சீரியலில் நர்ஸ் கேரக்டர். கடவுள் ஆசிர்வாதத்தில் தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைத்தன. இதோ, 23 வருஷமா இந்த பீல்டுல இருந்தாச்சு'' என்கிறார் சங்கீதா பாலன். 

ஆனால், இந்த இடத்தை அவர் அவ்வளவு சுலபமாகப் பிடித்துவிடவில்லை. அதற்குப் பின்னால் பல சவால்கள் உள்ளன. ''கேமராமேன் பாலனை காதலிச்சு திருமணம் செய்துக்கிட்டேன். எங்க காதல் பயணம் சந்தோசமா போயிட்டிருந்தது கடவுளுக்கே பிடிக்கவில்லையோ என்னவோ, எங்ககிட்டயிருந்து பிரிச்சுட்டார். அவர் இறந்து பல வருஷங்கள் ஆகிடுச்சு. சிங்கிள் மதரா என் பொண்ணை வளர்க்க நிறைய சவால்களை சந்திச்சேன். இப்போ, என் பொண்ணு ஒன்பதாவது படிக்கிறாங்க. நான் ஷூட்டிங் போயிடறதால அம்மாகிட்ட ஒப்படைச்சிருக்கேன். அவங்கதான் பார்த்துக்கிறாங்க. கிடைக்கும் கொஞ்ச நேரம் அவளோடு செலவழிப்பேன். என் பொண்ணை ரொம்பவே மிஸ் பண்றேன்'' என்றவரின் குரலில் தாயின் ஏக்கம். 

சங்கீதா பாலன்

''என்னை நிறைய சீரியல்களில் நெகட்டிவ் ரோலில்தான் பார்த்திருப்பீங்க. ஆனா, எனக்குள்ளே பயங்கர ஹியூமர் இருக்கு. ஆரம்பத்தில் காமெடி ரோலில்தான் நடிச்சுட்டிருந்தேன். சன் டிவியின் 'அத்திப்பூக்கள்' சீரியல் புது இடத்தை உருவாக்கிக் கொடுத்துச்சு. அதில் வந்த சொர்ணாக்கா கேரக்டரை ரசிகர்கள் ரொம்பவே ரசிச்சாங்க. என் திறமையில் நம்பிக்கை வெச்சு எனக்கு புது அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தில் ரேடான் நிறுவனத்துக்கும் சரிகம நிறுவனத்துக்கும் பெரிய பங்கு இருக்கு. தொடர்ந்து நெகட்டிவ் ரோல் பண்ண ஆரம்பிச்சேன். இப்போவரை அப்படியான கேரக்டரே வருது. ஆனால், எனக்கு மறுபடியும் காமெடி ரோல் பண்ண ஆசை. ஒரு சில படங்களில் நடிச்சிருக்கேன். மிஸ்கின் சார் என் குரு. 'அஞ்சாதே' படத்தில் வாய்ப்பு கொடுத்தார். கொஞ்ச இடைவேளைக்கு அப்புறம் 'சவரக்கத்தி' படத்துக்கு என்னைக் கூப்பிட்டார். 'இந்தப் படத்தின் ஒரு சீனில் உனக்கு நிச்சயம் கைதட்டல் விழும் பாரு'னு சொன்னார். நான் தியேட்டரில் போய் பார்த்தேன். அவர் சொன்ன மாதிரியே அந்த சீனுக்கு நிறைய கைதட்டல் கிடைச்சது. சந்தோசத்துல கண் கலங்கிடுச்சு. அவர் ஒரு கேரக்டரை ஃபீல் பண்ணினால், அது ரசிகர்களிடம் சரியா போய்ச் சேரும். எதிர்பார்த்ததுக்கு மேலே ஒரு சீன்கூட எக்ஸ்ட்ரா எடுக்க மாட்டார். அதுதான் அவருடைய ப்ளஸ். 

நான் பொதுவாவே ரொம்ப தைரியமான பொண்ணு. எந்தப் பிரச்சனையா இருந்தாலும் ஃபேஸ் பண்ணிடுவேன். ஒவ்வொரு சூழ்நிலையிலும் என்னை நானே பாசிட்டிவா வெச்சுப்பேன். சீரியலில் பெரிய பொட்டு வைச்சு, ரெளடியாதான் மக்கள் என்னைப் பார்த்திருக்காங்க. நேரில் பார்க்கிறவங்களுக்கு சந்தேகம் வந்துடும். 'சீரியலில் நடிக்கிறது உங்க அக்காவா?'னு கேட்பாங்க. அப்புறம், இன்றைய சீரிய நிறுவனங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்... ஆசைக்காக நடிக்க வர்றவங்க ஒரு ரகம். நடிப்பையே நம்பி இருக்கிறவங்க ஒரு ரகம். புதுப்புது முகங்கள் வேணும்னு நினைச்சு தேர்ந்தெடுக்கிறதில் தப்பில்லை. ஆனால், இதை மட்டுமே நம்பி இருக்கும் ஆர்ட்டிஸ்டுகளுக்கும் தகுந்த வாய்ப்பைத் தொடர்ந்து கொடுத்தா நல்லா இருக்கும்'' எனக் கோரிக்கையுடன் முடிக்கிறார் சங்கீதா பாலன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்