Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''இல்லைங்க... நாங்க கூப்பிட்டது, 'ஜோடி' ஜூலியை!" - 'பிக்பாஸ்' ஜூலியைக் கன்ஃபியூஸ் ஆக்கிய ஆர்கனைஸர்கள்.

'ஜோடி' ஷோவில் ஆடிய ஜூலியை நினைவிருக்கிறதா? உடன் ஆடிய சாய் சக்தியுடன் செட் ஆகாததால், அரை இறுதிச் சுற்றோடு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியவர். பிறகு சில பல சீரியல்களில் நடித்தார். சினிமாவில் டெக்னிகல் சைடில் பணிபுரியும் மணிகண்டன் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியல் பக்கம் வந்தார். 'அபூர்வ ராகங்கள்' தொடரில் 50 எபிசோடுகள் வரை வந்தவரை, மீண்டும் காணவில்லை!. சீரியல் 700 எபிசோடுகளைக் கடந்துவிட்ட நிலையில், அதே சீரியலில் அதே வில்லி கேரக்டருக்கு மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். 

ஜூலி

'இவ்....ளோ கேப் விட்டா மக்கள் மறந்துட மாட்டாங்களா?' என்றே ஆரம்பித்தோம்.

''இந்த இடைவெளி நானா விரும்பி எடுத்துக்கிட்டதில்லை. வாழ்க்கையில நடக்கிற சில விஷயங்களை ஏத்துக்கிட்டுப் போகவேண்டியதுதான், இங்க மெஜாரிட்டியான மக்களுக்கு விதிச்சதா இருக்கு. சீரியல் நடிகை மட்டும் விதிவிலக்கா என்ன? சினிமாவுல ரிட்டயர்டு ஆகிட்டு சீரியலுக்கு வர்ற நடிகைகளுக்குக் கவலையில்லை. பணம், புகழ் சம்பாதிச்சாச்சு. அவங்ககிட்ட மிச்சமிருக்கிற பாப்புலாரிட்டியை வெச்சு டிவியிலேயும் வர்றது வரட்டும்னு நினைக்கிறாங்க. இன்னும் சிலர் சீரியல்ல பணம் கொட்டுற கணக்கு வழக்கு தெரிஞ்சுடுச்சுனா, சொந்தமாவே சீரியல் தயாரிக்கக் களமிறங்கிடுறாங்க. இவங்களையெல்லாம் சேனல்கள் எதுவும் சொல்றதில்லை. என்னை மாதிரி சீரியலை மட்டுமே வாழ்வாதாரமா நம்பி இருக்கிற டிவி நடிகர் நடிகைகள் நிறையப் பேர். ஒரேயொரு சீரியல்ல நடிச்சிட்டிருந்தா இன்னைக்கு இருக்கிற விலைவாசியில நாங்கெல்லாம் எப்படிக் குடும்பம் நடத்த முடியும்? சேனல்கள் இதைப் புரிஞ்சுக்கணும். என்ன சொல்ல வர்றேன்னா, சினிமா பிரச்னைகள் அவ்ளோ பேசுறோமோ.... டிவியில இன்னைக்கு முக்கியமான ஒரு பிரச்னையா இது இருக்கு. இதைப்பத்தி யாரும் பேசமாட்டேங்கிறாங்க. பேசினா கையில இருக்கிற அந்த ஒரு சீரியலும் போயிடும்னு பயப்படுறாங்க.

பெரிய நடிகைகளுக்கும் சின்ன நடிகைகளுக்கும் சம்பளத்துலதான் வித்தியாசம் இருக்குதே, அது போதாதா, மத்த விஷயங்கள்ல எதுக்கு? சில நடிகைகளை மட்டும் ஒரே நேரத்துல ஒன்றுக்கும் மேற்பட்ட சீரியல்கள்ல நடிக்க அனுமதிச்சுட்டு, மத்த சிலரை அப்படி நடிக்கக் கூடாதுங்கிறாங்க. நான் சுமார் மூணு வருடமா வேலை இல்லாம வீட்டுல இருந்ததுக்கு இதுதான் காரணம். ஒரு சீரியல்ல நடிச்சிட்டிருந்தப்போ, இன்னொரு சீரியல்லகூட இல்லை, இன்னொரு சேனலோட ரியாலிட்டி ஷோவுல ஒரு மணிநேர நிகழ்ச்சியில கலந்துக்கிட்டேன். அது பிரச்னை ஆயிடுச்சு! 

ஜூலி

இப்போ மறுபடியும் அதே சீரியல்ல நடிக்கிறேன். இந்த மூணு வருடமும் என் வாழ்க்கை எப்படிக் கடந்ததுனு எனக்கு மட்டும்தான் தெரியும். 'தேதிகள்ல பிரச்னை', 'ஷூட்டிங்ல ஒழுங்கா கலந்துக்கிறதில்லை' இப்படி ஏதாச்சும் காரணம் சொன்னா ஏத்துக்கலாம். இதெல்லாம் இல்லாம வேற எதையோ உள்ளே வெச்சுகிட்டு, ஒரு நேரத்துல ஒரு சீரியல்தான் பண்ணனும்னா என்ன சொல்றது'' என இத்தனை நாள் வீட்டில் இருந்த காரணத்தைத் தெளிவாக, அதேநேரம் வார்த்தைகளில் வலிகலந்து உணர்த்துகிறார், ஜூலி.

ஜூலி

'இதற்கிடையே, டிவியில் பிறகு வந்த 'பிக்பாஸ்' ஜூலியாலும் உங்களது வாய்ப்புகள் பறிபோனதாகப் பேசப்பட்டதே?' - கேட்டோம்.

'' 'பிக்பாஸ்' ஜூலி வந்தபிறகு என்னை மறந்துட்டாங்கன்னே சொல்லலாம். நான் முன்னாடி நடிச்ச சீரியல், ரியாலிட்டி ஷோ எல்லாமே மறக்கடிக்கப்பட்ருச்சுனும் சொல்லலாம். என்னோட ஒரிஜினல் பேரு விஷாலாட்சி. பேசாம, இந்தப் பெயரையே இனி கன்டினியூ பண்ணலாமானு யோசிட்டிருக்கேன். வாய்ப்பு எப்படிப் போச்சுனா, நான் நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டு வருவேன். நிகழ்ச்சிக்காக ஃபாரின்கூட போயிட்டு வருவோம். அதுக்காக என்னைக் கூப்பிடறதுக்குப் பதிலா, 'பிக்பாஸ்' ஜூலி நம்பருக்குக் கால் பண்ணிடுவாங்க. அவங்களும் 'ஆமாங்க நான்தான் ஜூலி'னு சில நிகழ்ச்சிகள்ல கலந்துருக்காங்க. அதேநேரம் சில ஒருங்கிணைப்பாளர்கள் தெளிவா, 'இல்லைங்க நாங்க கூப்பிடுறது 'ஜோடி' ஜூலியை'னும் சொல்லியிருக்க்காங்களாம்.' எனச் சிரிக்கிறார், விஷாலாட்சி என்கிற ஜூலி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்