“நீ சிங்கா இருக்கலாம், போட்டினு வந்துட்டா நான் சிங்கம்!” ‘சரிகமப’ ‘ராக் ஸ்டார்’ ரமணியம்மாள்

சரிகமப ரமணியம்மாள் ஃபைனல் செல்வது குறித்துப் பேசுகிறார்

“நீ சிங்கா இருக்கலாம், போட்டினு வந்துட்டா நான் சிங்கம்!” ‘சரிகமப’ ‘ராக் ஸ்டார்’ ரமணியம்மாள்

ரஜினிக்கு தமிழ் சினிமா கொடுத்த பட்டம் சூப்பர் ஸ்டார். ரமணியம்மாளுக்கு ஜீ தமிழ் டிவியின் ‘சரிகமப’ ரியாலிட்டி ஷோ கொடுத்த பட்டம் ராக் ஸ்டார். ‘சரிகமப’ இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ரமணியம்மாளை சந்தித்தேன். 

“ஆமாம்பா... போர் தொடங்கிடுச்சு’' - ரஜினிகாந்த் போலவே பேசுகிறார். அறுபது வயதைக் கடந்தும் கணீர் குரலில் பாடும் ரமணியம்மாள். ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் 'சரிகமப' நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியிருக்கும் ஐந்து பாடகர்களில் ஒருவர். ஏப்ரல் 14 நடக்கும் இறுதிப் போட்டியில் பாட தீவிரமாகத் தயாராகிக் கொண்டிருந்தவரிடம் பேசினோம். 

ரமணியம்மாள்

“ஊரே என் ஷோவை பார்த்துட்டு இருக்கு. டி.வி-யில பிரபலமானபிறகு வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பண உதவி செய்தாங்க. அந்தப் பணத்தை வெச்சு என் கடனையெல்லாம் அடைச்சிட்டேன். போட்டியில் இன்னும் இரண்டு நாளில் ஃபைனல் நடக்குது. என்னோட போட்டி போடற அந்த பஞ்சாப் புள்ள பன்னிரண்டாவது படிக்குது. அந்தப் புள்ளகிட்ட 'நீ 'சிங்’கா இருக்கலாம். போட்டியின்னு வந்துட்டா நான் சிங்கம்'னேன். புரிஞ்சுதோ புரியலையோ சிரிச்சது. 

அதேபோல மத்தவங்களும் 20 , 25 வயசுக்குள்ள இருக்கறவங்க. எனக்கோ 63 வயசு. இருபதுக்கும் அறுபதுக்கும் போட்டி. இதைத்தான் போர்னு சொல்றேன். அதாவது பாட்டிக்கும் பேரன் பேத்திகளுக்கும் இடையே போர்’' எனச் சிரிக்கிறார் ரமணியம்மாள். 

'''காதல்' படத்துல சந்தியாப் பொண்ணு சடங்காகிற சீன் மூலம்தான் சினிமாவுல முதன்முதலா என் குரல் ஒலிச்சது. அப்புறம் பல படங்கள்ல சின்னச்சின்னதா பாடியிருக்கேன். இளையராஜா இசையிலகூட, 'கட்டம் போட்ட சட்டை'ங்கிற படத்துக்குப் பாடியிருக்கேன். அந்தப் படம் இன்னும் ரிலீசாகலை. ஆனா பத்து வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்ச்சுக்கிட்டிருந்த இந்த ரமணியம்மாளை வெளி உலகத்துக்குக் காட்டியது என்னவோ டி.வி-யில வர்ற இந்தப் பாட்டு நிகழ்ச்சிதான். 

முதல்ல குழந்தைகளுக்கு நடத்தினார்களே, அப்பவே அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பேன். பெரியவர்களும் கலந்துக்கலாம்னு சொன்னார்கள். அப்பக்கூட அதுல கலந்துக்க எனக்குக் கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்திச்சு. 'எல்லாம் சின்னச் சின்னப் பிள்ளைகளா கலந்துக்கிடுவாங்க. நாமப் போய் எப்படிப் பாடுறதுனு தயக்கமா இருந்துச்சு. 'வயசானவங்களுக்குன்னு தனியா நடத்தப் போறாங்களா'ன்னு நினைத்துப் பார்த்த நிமிஷம் போய்ப் பார்க்கலாம்னு தோணுச்சு. டி.வி ஆபீஸ் போயிட்டு வந்த பத்துப் பதினைந்து நாளைக்குப் பிறகே கலந்துக்க சம்மதம் தந்தாங்க. 

ரமணியம்மாள்

பாட ஆரம்பிச்ச பிறகு பெரியபெரிய ஆளுக எல்லாம் பாராட்டிட்டாங்கய்யா. கண்ணதாசன் பாட்டுன்னா எனக்கு நிறைய பிடிக்கும். அந்தக் குடும்பத்துக்காரங்க முன்னாடியே பாடிட்டேன். நான் பாவாடை சட்டை போட்டுட்டுத் திரிஞ்ச காலத்துல கடையில் பாட்டுப் புத்தகம் கிடைக்கும். அதுல எம்.ஜி.ஆர் படப் பாட்டுப் புத்தகமா வாங்கி பாடிப்பாடிப் பழகியே என்னோட பாட்டு ஞானத்தை வளர்த்துக்கிட்டேன். அவரோட பாடல்களை லட்சக்கணக்கான மக்கள் பார்க்கவும் பாடிட்டேன். 

இப்ப இருக்கிறவங்கள்ல சொல்லணும்னா நான் ரஜினி ஃபேன். ஃபைனல்லகூட ரஜினி படத்தில் இருந்துதான் எனக்குப் பாட்டு தருவாங்கன்னு நினைக்கிறேன்'' என்ற ரமணியம்மாளிடம், 'என்னைத் தேர்ந்தெடுக்க விரும்பறவங்க இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்க'ன்னு மக்களிடம் ஓட்டு கேட்டீர்களா' என்றேன். 

'கையில மாடல் மாடலா போன் வெச்சிருக்கிற இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு எல்லாம் தெரியும். எனக்கு என்னய்யா தெரியும்? அதெல்லாம் டி.வி-யில இருக்கறவங்க பார்த்துக்கிடுவாங்க. என்னைப் பொறுத்தவரை, சம்பாதிச்சுப்போடாத புருஷனை வெச்சுக்கிட்டு ஏழெட்டுப் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க உதவினது நான் பார்த்துட்டு இருந்த வீட்டு வேலைதான். இன்னமும் பழசை மறக்காமதான் இருக்கிறேன். நாளைக்கு இந்த ஷோவுல ஜெயிச்சு சினிமாவுல இன்னும் பிஸியானாக்கூட அப்பவும் இந்த வேலையை மறக்க மாட்டேன். அதை மட்டும் சொல்லிக்க விரும்பறேன்' என்கிறார் ரமணியம்மாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!