Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``முதல் பட்டிமன்ற தலைப்பு, `பாலிசி எடுக்கத் தேவை பணமா மனமா?’ '' `பட்டிமன்றம்’ ராஜா #25YearsOfSunTV

தமிழர்களின் வாழ்வோடு இரண்டரக் கலந்துவிட்ட சன் டிவி இன்று (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு நாளில் தன் 25வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இந்தக் கால் நூற்றாண்டு பயணத்தில் அது அழுந்தப் பதித்த முக்கியமான 25 நிகழ்ச்சிகளைப் பற்றி அதனுடன் தொடர்புடையவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். 

விசேஷ நாள்கள் என்றால் சன் டிவியின் பட்டிமன்றங்களைத் தமிழக மக்கள் தவறவிடுவதில்லை. `அட என்னய்யா சொல்றீங்க...' என்கிற சாலமன் பாப்பையா பேசத் தொடங்கிவிட்டால், நிகழ்ச்சி முடிகிறவரை ரிமோட் கை மாற வாய்ப்பே இல்லை. சாலமன் பாப்பையாவின் இந்தப் பட்டிமன்றங்களில் தவிர்க்க முடியாத நபர் ராஜா. அவரிடம் சன் டிவியில் தொடரும் இந்தப் `பட்டிமன்ற’ அனுபவம் குறித்து பேசினோம். 

ராஜா

``தூர்தர்ஷனில் மட்டுமே ஒளிபரப்பாகிட்டு இருந்த காலத்தில் பாப்பையா சார் பட்டிமன்றங்களுக்கு மிஸ் பண்ணாமப் போயிடுவேன். பேசறதுக்கு இல்லீங்க. ஆடியன்ஸ் சைடுல உட்கார்கிறதுக்கு. க்ளோஸ் அப்ல இரண்டு செகண்டாவது நம்ம முகம் டிவியில வந்துடுமே! பிறகு அணியில ஒருத்தரா பேசத்தொடங்கின சமயம் சன் டிவியும் தொடங்கப்பட்டு இருந்திச்சு. ஆனா சில மணி நேரங்கள் மட்டுமே ஒளிபரப்பு இருக்கும். அது 94-ம் வருஷமென்று நினைக்கிறேன். மதுரையில எல்.ஐ.சி. சார்பா எல்.ஐ.சி தினக் கொண்டாட்டம். ஐயா பட்டிமன்றம். தலைப்பு `பாலிசி எடுக்கிறதுக்குத் தேவை பணமா மனமா?'. 

உட்கார்ந்து பேச ஆரம்பிக்கிறோம். குறுக்கும் நெடுக்குமா நாலஞ்சு பேர் வீடியோ கேமராவை வெச்சுகிட்டு போயிட்டே இருக்கிறார்கள். வீடியோ கேமரா எடுக்கிறதை ஆச்சர்யமா பார்த்த காலமில்லையா? எங்களுக்கு ஆளாளுக்கு ஒரே பெருமை. பேசறப்ப வீடியோ எடுக்கறவங்களையும் அப்பப்ப பார்த்துக்கிடுறேன். ஆனா எதுக்கு எடுக்கிறாங்கன்னு சத்தியமா தெரியாது. இரண்டு மணி நேரம் பேசிட்டு வந்தோம். 

ஒரு மாசம் இருக்கும். திடீரென ஒருநாள், `நீங்கப் பேசினது டிவியில வரப் போகுகிறது'ன்னு சொன்னார்கள். அடுத்த நாளே அது வந்தது. சன் டிவியில் ஒளிபரப்பான முதல் பட்டிமன்றம் அதுதான். மறுஒளிபரப்பும் பண்ணினாங்க. பட்டிமன்றத்துக்கு மக்கள் மத்தியில இருக்கிற வரவேற்பைத் தெரிஞ்சுகிட்ட சன் டிவி அடுத்த சில வருடங்களில் தாங்களாவே பட்டிமன்றங்களைத் தயாரிக்கத் தொடங்கிட்டாங்க. அதுல இருந்து வருஷத்துக்கு நாலு அல்லது அஞ்சு பட்டிமன்றங்கள் ஒளிபரப்பாகிட்டு வருது. இன்னைக்கு வரைக்கும் மக்களிடம் வரவேற்பு கொஞ்சமும் குறையலை. 

பட்டிமன்றம்

பேங்கல வேலை பார்த்துட்டிருந்த நான் பிரபலமானது, சினிமாவுல நடித்தது எல்லாத்துக்குமே சன் டிவியோட ட்ராவல் பண்ற இந்த நீண்ட நெடிய பயணம்தான் காரணம். பட்டிமன்றம் போக, `வாங்கப் பேசலாம்'னு ஒரு ஷோ நானும் பாரதி பாஸ்கரும் சேர்ந்து பண்ணினோம். என்னைப் போலவே பாப்பையா சாரும் 14 வருஷம் தொடர்ந்து திருக்குறள், இன்னா நாற்பது, இனியவை நாற்பது போன்ற இலக்கியங்களிலிருந்து நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லி வந்திருக்கார். 

பெரும்பாலும் பட்டிமன்ற ஷூட்டிங் சென்னையில்தான் இருக்கும். வெளியிடங்களில் சிங்கப்பூர், திருச்சி, பெங்களூரில் ஒரு முறை இருந்திச்சு. ஆனா ஆச்சர்யப்படுத்தற ஒரு விஷயம் என்னன்னா, சன் டிவியில ஒளிபரப்பான முதல் பட்டிமன்றமும் மதுரையில்தான் நடந்தது. 25வது வருஷ சிறப்புப் பட்டிமன்றமும் மதுரையில்தான் நடந்திருக்கு. இந்த வருஷம் முதல்ல சென்னையில்தான் ஷூட் இருக்குதுன்னு சொன்னாங்க. என்ன காரணம்னு தெரியலை, கடைசி நேரத்தில் அது கேன்சலாகி மதுரைன்னு சொன்னாங்க. மீனாட்சி செயலென்றுதான் இதை நான் சொல்வேன். 

சன் டிவி பட்டிமன்றத்துக்குனு ஒரு கூட்டம் இருக்குன்னு தெரிய வந்ததுமே வேற மாதிரியான சில பிரச்னைகள் எங்களுக்கு வந்திருக்கு. வேற சில சேனல்களுக்கு எங்களைக் கூப்பிட்டாங்க. அன்பாகவோ அதட்டியோ ஆசை காட்டியோ யார் எப்படிக் கூப்பிட்டாலும் மறுத்துடணும் என்பதுல நாங்க உறுதியா இருந்தோம். இருந்திட்டிருக்கோம். எங்களுக்கு முகவரி தந்தது சன் டிவி. அதனால மனசாட்சியைக் கேட்டு நாங்க எடுத்த முடிவு இது'' என்கிறார் ராஜா. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்