வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (07/05/2018)

கடைசி தொடர்பு:12:16 (08/05/2018)

``நீங்க நினைக்கிற மாதிரியான அம்மாவா நடிக்கலைங்க!" 'கல்யாணமாம் கல்யாணம்' ஸ்ரித்திகா

`நாதஸ்வரம்' சீரியல் மூலம் நம் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர் ஸ்ரித்திகா. அதில் பாசமான மகளாகவும், அமைதியான மருமகளாகவும் மக்களை ஈர்த்தவர், தற்போது வித்தியாசமான அவதாரம் எடுத்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `கல்யாணமாம் கல்யாணம்' சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரிடம் பேசினோம். 

ஸ்ரித்திகா

``என்ன திடீர்னு அம்மா கதாபாத்திரம்..?" 

``இந்த சீரியலுக்கான ஆடிஷனில் கலந்துகிட்டப்போ, `அம்மா' கதாபாத்திரம்னு சொன்னதால் வேண்டாம்னு சொல்லிட்டேன். அதுக்கப்புறம் தொடர்ந்து அந்த சீரியல் டீமிலிருந்து கூப்பிட்டாங்க. இந்தியில் ஒளிபரப்பான சீரியலோட தமிழ் ரீமேக்தான் இது. நான் அந்த இந்தி சீரியலைப் பார்த்திருக்கேன். அதனால கன்வின்ஸ் ஆகிட்டேன். இது நீங்க நினைக்கிற மாதிரியான அம்மா கதாபாத்திரம் இல்லை. இந்த சீரியல் முழுக்க என்னைச் சுத்திதான் நடக்கும். என்னுடைய ரோல்தான் இந்தக் கதையையே நகர்த்தப்போகுது. இது ரொம்பவே போல்டான கேரக்டர்.''

``இளமையான தோற்றத்தில்தான் சீரியலில் வருவீங்களா?" 

``நிச்சயமா. இதுவரை என்னை எப்படிப் பார்த்தீங்களோ அப்படியேதான் பார்ப்பீங்க. இந்த கேரக்டருக்கான என் காஸ்ட்யூம்ஸ், கொஞ்சம் ஹை லுக்காக இருக்கும்." 

ஸ்ரித்திகா

``சீரியலில் உங்க கதாபாத்திரம் பற்றிச் சொல்லுங்களேன்..?"

``ஒரு பெரிய கம்பெனியை நிர்வகிக்கிற அளவுக்குத் திறமையான பெண். சின்ன வயசில் தவறான ஒருத்தரைக் காதலிச்சு, கல்யாணம் பண்ணி, அவர் தப்பானவர்னு தெரிஞ்சு, அவர்கிட்ட இருந்து விலகி, பின்னர் தன் பையன்தான் உலகம்னு வாழுற ஒரு பெண். அண்ணன், அப்பா, தங்கச்சினு பெரிய குடும்பத்துல இருந்தாலும் எல்லோரிடமும் கொஞ்சம் கோபமாகவே நடந்துக்கிற கேரக்டர். கோபப்பட்டா யாரும் நம்மகிட்ட நெருங்க மாட்டாங்கன்னு நினைக்கிறவ. அதே சமயம், தன்னைவிட்டு யாரும் பிரிந்து போயிடக் கூடாதுன்னு நினைக்கிற பொசஸிவ் குணம். உண்மையிலேயே இது ரொம்ப ஸ்வீட்டான கேரக்டர். இந்த மாதிரி ஒரு கேரக்டர் பண்ணனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. ஆனா, என் முகத்துக்கு செட்டாகுமான்னு ஒரு தயக்கம் இருந்துச்சு. இப்போ விலகிடுச்சு. இதுவரைக்கும் ரொம்ப சாதுவான கதாபாத்திரத்தில்தான் நடிச்சிருக்கேன். `இந்த கதாபாத்திரம் மட்டும்தான் உனக்கு செட்டாகும்'னு சொல்லிடாத அளவுக்கு, இந்தக் கோபக்கார கேரக்டர்லயும் பேர் எடுக்கணும்." 

ஸ்ரித்திகா

 

``மெளலி சார்கூட மீண்டும் நடிக்கிற அனுபவம்..?"

``இதுவரை நான் நடிச்ச ரெண்டு சீரியல்களிலும் மெளலி அப்பா இருந்தாங்க. `நாதஸ்வரம்' சீரியலில் எனக்கு மாமனார், `குலதெய்வம்' சீரியலில் எனக்கு அப்பா; இப்போ மறுபடி இந்த சீரியலில் எனக்கு அப்பாவாக நடிக்கிறார். ரொம்ப ஹாப்பியா இருக்கு. அவர் நான் சாதுவான கேரக்டர்களில் நடிச்சுதான் பார்த்துருக்கார். இந்தக் கதாபாத்திரத்தில் நான் நடிக்கப்போறேன்னு கேள்விப்பட்டதும், சரியா பண்ணிடுவேனா என்ற சந்தேகம் அவருக்கும் இருந்துருக்கு. முதல் நாள் ஷூட்ல நான் நடிச்சதும் பார்த்துட்டு, `எப்படி நடிக்கப்போறீயோன்னு நினைச்சேன், பொருத்தமா நடிச்சிட்டே'ன்னு பாராட்டினார். அவர் வார்த்தைகள், நிச்சயம் இந்த ரோல் எல்லோருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை தந்தது.''

``சமூக வலைதளங்களில் பலர், நீங்கள் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லையே..?"

``மறுபடியும் சொல்றேன், இது நீங்க நினைக்கிற அம்மா கதாபாத்திரம் இல்லை. ரொம்ப வித்தியாசமான கதைக்களம். தொடர்ந்து நிறைய எபிஸோடு பார்க்கப் பார்க்க உங்களுக்கே புரியும். என்னை சாதுவாகவே பார்த்த ஆடியன்ஸுக்கு இது ஷாக்காகத்தான் இருக்கும். போகப்போக இந்தக் கதாபாத்திரத்தை மக்கள் ஏற்றுக்கொள்வாங்கங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. கூடவே, டைரக்டர் பிரம்மா எனக்கு பலமா இருக்கார். எனக்குக் கொஞ்சம், கொஞ்சமா நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தார். நிச்சயம் இது வெற்றிக் கூட்டணியா அமையும்!"

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்