Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'' தெய்வமகள் டீம் வாட்ஸ்அப் குரூப்ல நடக்குற சேட்டைலாம்..!?'' - 'அண்ணியார்' ரேகா

ரேகா குமார்

`தெய்வமகள்' சீரியலில் `காயத்ரி'யாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ரேகா குமார். தற்போது சன் டிவி `நந்தினி' சீரியலில் மந்திரவாதியாக நெகட்டிவ் ரோலில் கலக்கிவருகிறார்.

`` `காயத்ரி'யின் தாக்கத்திலிருந்து வெளியில் வந்துட்டீங்களா..."

(பலமாகச் சிரிக்கிறார்) ``என் கரியர்ல மறக்க முடியாத சீரியல், `தெய்வமகள்'. ஒரு சீரியல்ங்கிறதைத் தாண்டி, பாசமான ஒரு ஃபேமிலி கிடைச்சுது. அந்த சீரியல் முடிஞ்சதுமே, `நந்தினி' சீரியல்ல கமிட் ஆகிட்டேன். அதனால மெள்ள மெள்ள காயத்ரியின் தாக்கத்திலிருந்து வெளிய வந்துட்டேன். ஆனா, மக்கள் காயத்ரியை இன்னும் மறக்கலை போல. எங்க போனாலும், காயத்ரினுதான் என்னைக் கூப்பிடுறாங்க. முன்பு என்னைத் திட்டின மக்கள், `உங்களை மிஸ் பண்றோம்'னு சொல்றாங்க."

`` `தெய்வமகள்' டீம் நண்பர்கள் தொடர்ந்து நட்பில் இருக்கீங்களா?" 

``எங்க டீமுக்கு தனி வாட்ஸ் அப் குரூப் இருக்கு. அதில் தினமும் பேசிப்போம். எந்த நிகழ்ச்சியா இருந்தாலும் அதில் உடனுக்குடன் அப்டேட் பண்ணிடுவோம். 'தெய்வமகள்' செட்ல எப்படி இருந்தோமோ, அப்படிதான் வாட்ஸப் குரூப்லயும்... செம சேட்டை செஞ்சிட்டிருக்கோம்.  அதனால் எங்களுக்குள் பிரிவு என்பது கிடையாது. அந்தச் சீரியல்ல கிருஷ்ணாவின் அம்மாவா நடிச்ச வெண்ணிறாடை நிர்மலா அம்மா போன் பண்ணி,  `ஒருநாள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டுப் போ. உன்னை மிஸ் பண்றேன்'னு அன்பாகப் பேசினாங்க. சமீபத்தில் சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் `தெய்வமகள்' டீம் உறுப்பினர்கள் கலந்துகிட்டோம். அடுத்த சில நாள்கள்லயே, கனடாவிலிருந்து `தெய்வமகள்' ஃபேன்ஸ் எங்களைப் பார்க்க வந்தாங்க. அவங்களோடு எங்க சீரியல் டீம் சிலரும் ஹோட்டலுக்குப் போனோம். சிரிச்சுப் பேசி பழைய மெமரீஸைப் பற்றிப் பேசி மகிழ்ந்தோம்."

ரேகா குமார்

`` `நந்தினி' சீரியல்லயும் மந்திரவாதியா நெகட்டிவ் ரோல்..."

``ஆமாம். அந்த சீரியலின் பாதியிலதான் என் என்ட்ரி இருந்துச்சு. தொடக்கத்திலேயே என்னை ரோப் கட்டித் தூக்குகிற மாதிரியும், சண்டை போடுறது, கல் மற்றும் முள் மேல நான் விழுற மாதிரியும் காட்சிகள் இருந்துச்சு. அதனால, ரொம்ப சிரமப்பட்டேன். குடும்பச் சண்டை மாதிரி இல்லாம, மந்திரவாதியா எனக்குப் புது ரோல். இதுலயும் மிரட்டிட்டு இருக்கேன். மக்களும் இந்தக் கேரக்டரை கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. சமீபத்தில் செங்கல்பட்டுப் பக்கத்துல ஒரு மலைக்குகையில ஷூட்டிங் நடந்துச்சு. கஷ்டமான, மறக்க முடியாத அனுபவம். இந்தச் சீரியல்ல நடிக்க ஆரம்பிச்ச கொஞ்சக் காலத்திலேயே எல்லோருடனும் மிங்கிள் ஆகிட்டேன்." 

`` `தெய்வமகள்' சீரியலில் நீங்க மிஸ் பண்ணும் ஒரு நபர் யார்?"

``குமரன் சார் (இயக்குநர்). காரணம், வாழ்நாளில் மறக்க முடியாத காயத்ரி கேரக்டரை எனக்குக் கொடுத்தார்."

`` `நந்தினி' சீரியலில் உங்க குளோஸ் ஃப்ரெண்ட் ஒருவர் யார்?" 

`` நித்யா ராம் (சீரியல் ஹீரோயின்)."

ரேகா குமார்

``எப்போது உங்களைப் பாசிட்டிவ் ரோலில் பார்க்கலாம்?" 

``எனக்கும் அப்படி நடிக்க ரொம்ப ஆசை இருக்கு. ரொம்பக் கொடுமையான வில்லியாவே மக்கள் என்னைப் பார்க்கிறதால, என் நிஜ கேரக்டர்கூட அப்படி இருக்கும்னு நினைக்கிறாங்க. இதெல்லாம் வெறும் நடிப்புதானே. என் முந்தைய நெகட்டிவ் இமேஜை மறக்கச் செய்ற மாதிரி பாசிட்டிவ் ரோல் கிடைச்சா அந்தக் கேரக்டராவே மாறவும் தயார். அப்படி ஒரு வாய்ப்புக்காக வெயிட்டிங்."

``சினிமாவில் நடிக்கிறீங்களா?"

``சின்னச் சின்ன வாய்ப்புகள் வருது. அதனால மறுத்துடுறேன். நல்ல அடையாளம் கிடைக்கிற வெயிட்டான ரோலுக்காகக் காத்திருக்கிறேன். ஆனா, சீரியல்ல ஃபேமஸாகிட்டால்... சின்னத்திரை நடிகைனு ஒரு முத்திரை குத்திடுறாங்க. எனக்கும் அப்படித்தான். சீரியலோ, சினிமாவோ... நல்ல வாய்ப்பு வந்தால், நிச்சயம் தூள் கிளப்பிடுவேன்."

``உங்க குழந்தை என்ன பண்றாங்க..."

``பொண்ணு பூஜா, பத்தாவது முடிச்சிருக்காள். இப்போ எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டியில் கவனம் செலுத்துகிறாள். பெங்களூரில் இருக்கிற என் வீட்டிலிருந்து மாதத்துக்குப் பத்து நாள் சென்னை வந்து நடிக்கிறேன். அப்போ விடுமுறையா இருந்தால், பொண்ணு என்கூடவே வந்திடுவாள்."

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்