வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (16/05/2018)

கடைசி தொடர்பு:20:21 (17/05/2018)

’’ ‘ஆத்தாடி என்ன உடம்பீ’ ஒரு வருஷத்துக்கு முன்னாடி பண்ணினது; இப்போ வைரல் ஆகுது..!’’ - ராமர்

’’ ‘ஆத்தாடி என்ன உடம்பீ’ ஒரு வருஷத்துக்கு முன்னாடி பண்ணினது; இப்போ வைரல் ஆகுது..!’’ - ராமர்

’’ ‘ரொம்ப அழகா பண்ணிட்டமா’, ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’, ’ஆத்தாடி என்ன உடம்பீ’, ’ரோசாப்பே சின்ன ரோசாப்பே’னு நான் என்ன சொன்னாலும் ஹிட்டாகுது. அது ஏன்னு எனக்கே தெரியலை. கடவுள் கொடுத்த பரிசுனு தான் சொல்லணும். ஹிட்டாகணும்னு நினைச்சு அதுக்காக ஹார்ட் வொர்க் பண்றது இல்லை. எந்த கெட்டப்பா இருந்தாலும் அந்த கேரக்டர் எப்படி பண்ணும்னு பண்ணுவேன். அதை மக்கள் ரசிக்கிறாங்க...’’ என தன்னடக்கத்தோடு பேச ஆரம்பித்தார் ராமர். 

ராமர்

`` `ஆத்தாடி என்ன உடம்பீ’ எபிசோடு எப்படி உருவாச்சு..?''

``சின்ன வயசுல இருந்து கோயில் திருவிழாக்களுக்கு போவேன். அங்க நடக்குற கூத்து, கரகாட்டம்னு ஒண்ணுவிடாம எல்லாத்தையும் பார்த்திருக்கேன். அதுனால அந்த கலைஞர்கள் எப்படி பெர்ஃபார்ம் பண்ணுவாங்க; அவங்களோட பாடிலாங்வேஜ் எப்படி இருக்கும்னு எல்லாமே எனக்கு தெரியும். `ஆத்தாடி என்ன உடம்பீ’ எபிசோடு ப்ளான் பண்ணும்போதே, அதை எப்படியெல்லாம் பண்ணலாம்னு யோசிச்சேன். பாட்டு பாடிட்டு இருக்கும்போது வரி மறந்து போச்சுன்னா டக்கு டான்ஸ் ஆடப் போயிடுவாங்க; மறுபடியும் வந்து பாடுன வரியையே பாடுவாங்க; அவங்க பாடுற மாடுலேஷனே வேற மாதிரி இருக்கும்; அதையெல்லாம் நான் பண்ணியிருந்தேன். ஆனால், இதைப் பண்ணி ஒரு வருஷம் ஆச்சு. அது இப்போ வைரல் ஆகுது. 'Shape of you' பாட்டையும் ’ஆத்தாடி என்ன உடம்பீ’ பாட்டையும் வச்சு வந்த நிறைய மீம்ஸை பார்த்தேன். சந்தோஷமா இருந்துச்சு.’’

``உங்க பெர்ஃபார்மென்ஸில் டபுள் மீனிங், கெட்ட வார்த்தைகள் எல்லாம் அதிகமா இருக்கே..?''

``அது எதுவுமே நான் ப்ளான் பண்ணி பேசுறது இல்லை. என்னையும் அறியாம அது ஒரு ஃப்ளோல வந்திடுது. ஆனால், அதை நிறைய பேரு ரசிக்கிறாங்க. மியூட் பண்ணினாலும் அந்த இடத்துல என்ன வார்த்தை நான் பேசியிருப்பேன்னு கண்டுபிடிச்சிடுறாங்க. ஆனால், அதை எல்லாம் குறைக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.’’

ராமர்

```நீங்க லேடி கெட்டப் போடுறதுக்கு உங்க  வீட்டுல என்ன சொல்றாங்க..?''

``இதுவரை நான் லேடி கெட்டப் போட்ட எபிசோடுகள்தான் செம ஹிட்டாகியிருக்கு. ’கலக்கப்போவது யாரு சீசன் 3’ முடிஞ்சதுக்கு அப்பறம் ’சாம்பியன்ஸ்’ ஆரம்பிச்சாங்க. அதுல ’பருத்திவீரன்’ படத்துல வர பாட்டி கெட்டப் போட்டேன். அதுதான் நான் போட்ட முதல் லேடி கெட்டப். அது நல்லா ரீச்சாச்சு. அதுக்கப்பறம் ’கிங்ஸ் ஆஃப் காமெடி’ நிகழ்ச்சிக்காக கலா மாஸ்டர் மாதிரி கெட்டப் போட்டேன். அதெல்லாம் ஹிட்டாக ஆரம்பிச்சதும், அடுத்தடுத்து ’என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’, ’ஆத்தாடி என்ன உடம்பீ’, இப்போ ’ராமர் வீட்டு கல்யாணம்’ வரை நிறைய லேடி கெட்டப் போட்டுட்டேன். இதெல்லாம் எனக்கு நல்ல ரீச்சைக் கொடுத்தாலும், எனக்கு வர பட வாய்ப்புகளும் லேடி கெட்டப்பாகவே வருது. ’டார்லிங்’, ’காஞ்சனா’ படங்களிலும் லேடி கெட்டப் போட்டுத்தான் நடிச்சிருப்பேன். அதுக்கப்பறம் ஏழு, எட்டு படங்கள் அதே மாதிரி வந்திச்சு. இதையெல்லாம் பண்ணுனா நான் ஒரே இடத்தில் இருக்கிற மாதிரி இருக்கும். ஆடியன்ஸுக்கும், ’என்ன ஒரே லேடி கெட்டப்பா பண்றார்’னு ஒரு ஃபீல் வந்திரும். அதுனாலதான் நானும் பண்றது இல்லை. என் பசங்க என்னை ஒரு ஹீரோ மாதிரிதான் பார்க்க ஆசைப்படுவாங்க. எல்லா வீட்டுலேயும் பசங்களுக்கு அப்பாத்தானே ஹீரோ. அப்படி இருக்கும்போது என் பசங்க. ’இனிமேல் லேடி வேஷமெல்லாம் போடாதீங்கப்பா’னு சொல்லும்போது மனசு கஷ்டமா இருக்கு. இதை நான் டைரக்டர் தாம்ஸன் சார்கிட்ட சொன்னதுக்கு அப்பறம், எனக்கு அவர் லேடி கெட்டப்ஸ் கொடுக்குறது இல்லை.’’

`` `ராமர் வீட்டு கல்யாணம்’ எபிசோடுக்கு கிடைச்ச ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு..?''

``அந்த காமெடி பார்த்துட்டு எக்கச்சக்க பேர் பேசுனாங்க. அன்னையர் தினத்துக்கு நிறைய பேர் அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸா வச்சிருந்தாங்க. ’என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ எபிசோடுக்கு அப்பறம் இது செம ஹிட்டாச்சு. இவ்வளவு பெரிய ஹிட்டாகும்னு நினைக்கலை. இந்த ஸ்கிரிப்ட்ல என்னோட மனைவி, குழந்தையை நடிக்க வச்சு, என் மனசுக்கு நெருக்கமான எபிசோடா மாத்திட்டாங்க.

சோஷியல் மீடியாவுல எவ்வளவு ரெஸ்பான்ஸ் இருக்கோ அதே மாதிரி நேர்ல பார்க்கிறவங்களும் ரொம்ப பாராட்டுவாங்க. ’உங்களைப் பார்த்தாலே சிரிப்பு வருது’, ’ரொம்ப நல்லா பண்றீங்க’னு ஒரு நடிகருக்கு கிடைக்கிற ரெஸ்பான்ஸ் எனக்கு மக்கள்கிட்ட இருந்து கிடைக்கிது. நான் டயலாக்கை மறக்குறது, என் பாடிலாங்வேஜ்னு நான் பண்ற எல்லாத்தையும் நோட் பண்ணி சொல்லும்போது பெருமையா இருக்கு.’’

ராமர்

``உங்களோட கெட்டப், பாடி லாங்வேஜ், வாய்ஸ் மாடுலேஷன் மாதிரி உங்க டான்ஸும் செம ரீச். டான்ஸுக்கான க்ளாஸ் போனீங்களா..?''

``டான்ஸ் நான் கத்துக்கிட்டதும் கிடையாது; எனக்கு டான்ஸும் தெரியாது. என் தாத்தா, அப்பா எல்லாரும் கலைத்துறையில்தான் இருந்தாங்க. என் தாத்தா ஒயிலாட்டக் கலைஞர். என் ஜீன்லேயே டான்ஸ் இருக்குனு நினைக்கிறேன். இவங்ககிட்ட இருந்து எனக்கு டான்ஸ் வந்த மாதிரி, எங்க அம்மாகிட்ட இருந்து மிமிக்ரி வந்துச்சுன்னு சொல்லலாம். அக்கம்பக்கத்தில் இருக்கிற பெண்கள் மாதிரி மிமிக்ரி பண்ணுவாங்க. அதையெல்லாம் பார்த்துத்தான் எனக்கு மிமிக்ரி ஆர்வம் வந்துச்சு. அதுபோக சின்ன வயசுல இருந்து கலை மேல எனக்கு அதிக ஆர்வம் இருந்துச்சு. எங்க கோயில் திருவிழா நடந்தாலும் கலை நிகழ்ச்சிகள் பார்க்கப் போயிருவேன். இதெல்லாம்தான் இப்போ நான் இருக்கிற நிலைமைக்கு காரணம்.’’

`` `சிரிச்சா போச்சு’, ’கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’, விஜய் டி.வி ஸ்பெஷல் ஷோனு நிறைய பண்ணிட்டு இருக்கீங்க... குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க முடியுதா..?''

`` `கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ ஆரம்பிச்சதுக்கு அப்பறம் ரொம்ப பிஸியாகிட்டேன். வெளியில் இருந்து நிறைய ஷோக்கள் வருது. நேரம் இல்லாதனால அதை எல்லாம் வேணாம்னு சொல்லிட்டேன். மாசத்துல 5 நாள்கூட குடும்பத்தோட இருக்க முடியலை. நான் வெளியூருக்கு கிளம்பிட்டாலே என் பசங்க மூணு பேரும்,’எங்கக்கூட இருப்பா’னு சொல்லுவாங்க. இதையெல்லாம் தாண்டிதான் மக்களை என்டர்டெயின் பண்ணிட்டு இருக்கேன். தொடர்ந்து பண்ணிட்டும் இருப்பேன்.’’ 


டிரெண்டிங் @ விகடன்