"சீரியல் வாய்ப்புகளை மறுக்கிறதுக்கு ஒரே ஒரு காரணம்தான்..!" - 'கல்யாணபரிசு' ஶ்ரீகலா

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில் நடித்துவருபவர், ஶ்ரீகலா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தற்போது, சன் டிவியின் 'கல்யாணப்பரிசு' சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார். பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு கதாபாத்திரங்களிலும் தன் நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர். இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அவரது வெள்ளி விழா பயணம் குறித்து குட்டி பயோடேட்டாவுடன் தொடர்வோம்!

ஶ்ரீகலா

பெயர்: ஶ்ரீகலா

முதல் படம்: தேவர் மகன் (குழந்தை நட்சத்திரம்)

முதல் சீரியல்: சொந்தம்

குடும்பம்: அன்பான கணவர், அழகான மகள்

தற்போது நடிப்பது: 'கல்யாணப்பரிசு' 

எதிர்கால திட்டம்: பிசினஸ் ஆரம்பிக்கணும்.

``பக்கத்து வீட்டு நண்பர் மூலம் சினிமா வாய்ப்பு வந்துச்சு. 'தேவர் மகன்' என்னுடைய முதல் படம். தொடர்ந்து நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்துச்சு. சீரியல்களில் பாசிட்டிவ், நெகட்டிவ் ரோல் என ஆல்ரவுண்டரா வலம்வந்தாச்சு. என்னோடு நடிச்ச பலரும் இப்போ பீல்டில் இல்லை. பலரும் ஃபேமிலில செட்டில்டு. என்னை வளர்த்துவிட்ட மீடியாவை சட்டென உதற மனசில்லைங்க'' என நெகிழ்கிறார் ஶ்ரீகலா.

``நான் பயங்கரமா சாமி கும்பிடுவேங்க. ரெண்டு மணி நேரத்துக்கும் மேலே பூஜை பண்ணினால்தான் மனசுக்கு திருப்தியா இருக்கும். பிறகு, என் அம்மாவும் அப்பாவும்கூட எனக்குக் கடவுள்தான். என்னோடுதான் அம்மா, அப்பா இருக்காங்க. என் கணவர் பிசினஸ் பண்றார். எங்க பொண்ணு ஹம்சவர்த்தினி. ரெண்டாம் கிளாஸ் படிக்கிறாள். என் கணவர், 'பாப்பாவைப் பார்த்துக்கிறது ரொம்ப முக்கியம்'னு சொல்லிட்டார். நிஜம்தானே. இந்த வயசுல நான் அவளோடு இருந்தாகணும். என்னோட கவனம் முழுக்க பாப்பாவை வளர்க்கிறதில் இருக்கு. அதனாலேயே, நிறைய புராஜெக்ட்ஸை மறுத்துட்டேன். இப்போதைக்கு ஒரே ஒரு சீரியல்தான் நடிச்சுட்டிருக்கேன். ஒருவேளை ரொம்ப நல்ல புராஜெக்ட் வந்தால் நடிப்பேன்'' என்ற ஶ்ரீகலா, தனது முதல் கேமரா அனுபவம் குறித்து பகிர்கிறார்.

 

ஶ்ரீகலா

 

`` `தேவர் மகன்' படத்தில் நடிக்கும்போது கமல் சார், கெளதமி மேம், ரேவதி மேம் எல்லோருக்கும் பெட் நான்தான். ஆனால், அந்தப் படம் முடிஞ்சு இத்தனை வருஷமாகியும் அவங்களை மறுபடி சந்திக்கும் வாய்ப்பு அமையல. எனக்குப் படங்களைவிட சீரியலில் நடிக்கவே பிடிச்சிருந்தது. அதனால்தான் படங்களைத் தவிர்த்துட்டேன். சீரியல் மூலமா நிறைய பேருக்கு என் முகம் பரீட்சையமாச்சு. நான் வாங்கியிருக்கும் அவார்டுகளை வைக்கவே வீட்டுல இடம் இல்லீங்க. அந்த அளவுக்கு என் நடிப்புக்கான அங்கீகாரம் நிறைய கிடைச்சிடுச்சு. ஆரம்பத்தில், பிஸியா நடிச்சுட்டிருந்ததால், பத்தாம் வகுப்புக்கு மேலே படிக்கலை.

நாங்க வருஷத்துக்கு ஒருமுறை ஃபேமிலி டூர் போவோம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி பேங்காக் போய்ட்டு வந்தோம். ஃபேமிலியோடு டைம் செலவழிக்கிறது எனக்குப் பிடிச்ச விஷயம். அதனால், ஷூட் இல்லாத சமயம் வீட்டில் பிஸியாகிடுவேன். இப்பவும் என்னைப் பார்க்கும் ரசிகர்கள், 'நீங்க ஏன் முன்ன மாதிரி நிறைய சீரியலில் நடிக்கிறதில்லை'னு கேட்கிறாங்க. இப்பவும் என்னை எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கிறதை நினைச்சா ரொம்ப ஹேப்பியா இருக்கு. எனக்கு பிஸினஸ் ஆரம்பிக்கணும்னு ஆசையும் இருக்கு. எதிர்காலத்துல என்னை ஒரு தொழிலதிபரா பார்க்கலாம்'' என முடிக்கிறார் ஶ்ரீகலா. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!