வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (11/06/2018)

கடைசி தொடர்பு:12:07 (12/06/2018)

``40 வருஷமா நடிச்சிட்டு இருக்குறவங்களை ஆடிஷனுக்குக் கூப்பிட்டா எப்படிங்க..!" - `பொன்மகள் வந்தாள்' விஜயலட்சுமி

1970-ம் ஆண்டுகளின் பிரபல நடிகைகளில் ஒருவர் விஜயலட்சுமி. ஒரு சில பாடல்களுக்கும் நடனம் ஆடியிருக்கிறார். தமிழில் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். பிறகு, ஐம்பதுக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது, `றெக்கை கட்டி பறக்குது மனசு', `பொன்மகள் வந்தாள்' சீரியல்களில் நடித்துவருகிறார். அவரைப் பற்றிய குட்டி பயோவுடன் ஒரு பேட்டி...

விஜயலட்சுமி

பெயர்: விஜயலட்சுமி

அறிமுகமான படம்: ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது

தற்போது நடிப்பது: `பொன்மகள் வந்தாள்', `றெக்கை கட்டி பறக்குது மனசு' சீரியல்

குடும்பம்: ரெண்டு பசங்க.

பிடித்த கதாபாத்திரம்: சாவித்திரி நடித்த மாதிரி ஒரு ஏழை தாய் கதாபாத்திரம்

``என் சின்ன வயசிலிருந்தே எனக்கு டான்ஸ் ரொம்ப பிடிக்கும். எப்பவும் டான்ஸ் ஆடிட்டே இருப்பேன். எங்க ஃபேமிலி சென்னையில்தான் இருந்தோம். நடிப்புத் துறைக்குள் போக விருப்பம்னு சொன்னதும் ஆரம்பத்தில் வீட்டில் தயக்கம் காட்டுனாங்க. அப்புறம் கிரீன் சிக்னல் கொடுத்துட்டாங்க. நான் நடிப்பு இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்தேன். தமிழ்நாட்டுல நடிப்பு கத்துக்கொடுக்க முதன்முதலா ஆரம்பிச்ச இன்ஸ்டிட்யூட் அது. அதுல என்னோடு ரஜினியும் படிச்சார். அப்புறம் கமல் சாருடன் `ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' படத்தில் நடிச்சேன். அதுதான் என் முதல் படம். 1976-ம் வருஷம் நடிக்க ஆரம்பிச்சேன். 1983 வரைக்கும் நிறைய படங்களில் நடிச்சேன். எனக்கு ஹீரோயின் கதாபாத்திரம் அமையல. நானும் அதை எதிர்பார்க்கலை. எனக்குக் கொடுத்த கதாபாத்திரங்களை சந்தோஷமா செஞ்சேன். 83-ம் வருஷம் பிரேக் எடுத்துட்டு 1998-ல் சீரியலில் கம்பேக் கொடுத்தேன். ஏவிஎம் புரொடக்‌ஷனின் `லேடிஸ் ஹாஸ்டல்' சீரியல்'' என்ற விஜயலட்சுமி, ரீ-என்ட்ரி சவால்களைச் சொல்கிறார்.

விஜயலட்சுமி

``நான் நடிச்ச `கிருஷ்ணதாசி' சீரியல் பயங்கர ஃபேமஸ் ஆச்சு. அந்த சீரியலில் என் கதாபாத்திரம் நிறைய பேருக்குப் பிடிச்சிருந்தது. தொடர்ந்து சில சீரியல்களில் நடிச்சுட்டு இருந்தப்போ, நடுவில் ஆறு வருஷம் எந்த வாய்ப்பும் கிடைக்கலை. புது ஆர்ட்டிஸ்ட் வரும்போது பழைய ஆர்ட்டிஸ்ட்டை ஒதுக்குவது எனக்கும் நடந்துச்சு. எனக்கோ சாகும் வரை நடிக்க ஆசை. பொதுவா, நானாக வாய்ப்பு கேட்டு எங்கேயுமே போறதில்லே. அதனாலேயே வாய்ப்புகள் என்னை விட்டுப் போயிடுச்சு. 40 வருஷங்களாக மீடியாவில் இருக்கும் என்னையும் ஆடிஷனுக்குக் கூப்பிட்டால், எப்படிம்மா போவேன்?'' என்றவர், ரஜினி மற்றும் கமலுடன் நடித்த அனுபவம் குறித்து மலர்ச்சியுடன் பகிர்கிறார்.

``எனக்கு கமல் குளோஸ் ஃப்ரெண்ட். அவருடன்தானே முதல் படம் நடிச்சேன். ரஜினி அண்ணன் மாதிரி. ஒரே இன்ஸ்டிட்யூட்ல படிச்சதால் ரெண்டு வருஷம் பழக்கம். நடிப்பில் நிறைய விஷயங்களைப் பகிர்ந்திருக்கார். ஆனால், சினிமாவுக்கு பிரேக் கொடுத்த பிறகு அவங்களோடு காண்டாக்ட் விட்டுப்போச்சு. இப்போ ரெண்டு பேருமே அரசியலுக்கு வர்றது ஹேப்பியா இருக்கு. ரெண்டு பேரில் யார் ஜெயிச்சாலும் சந்தோஷம்தான். இப்போ, ரெண்டு சீரியல்களில் நடிக்கிறேன். ரெண்டுமே நெகட்டிவ் கேரக்டர். நிஜத்தில் நான் ரொம்பவே ஜாலியான பர்சன். ஆனால், சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரமே தேடி வருது. பல்வேறு கேரக்டர்களில்  நடிக்கவே ஆசை. அந்த மாதிரியான வாய்ப்பு எனக்கு அமையல. அம்மா கதாபாத்திரத்தில் நடிச்சுட்டிருந்தேன். இப்போ பாட்டி கதாபாத்திரத்துல நடிக்கிறேன். அந்தக் காலத்தில் டான்ஸூம் ஆடியிருக்கேன். மறுபடியும் சொல்றேன், சாகும் வரைக்கும் நடிச்சுட்டே இருக்கணும். அதுதான் என் ஆசை'' எனப் புன்னகைக்கிறார் விஜயலட்சுமி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்