வெளியிடப்பட்ட நேரம்: 16:14 (25/07/2018)

கடைசி தொடர்பு:16:38 (25/07/2018)

``மகள் மாதிரி நடத்தினதுக்கு இப்ப என் மேல புகார் பண்ணியிருக்கா..!'' - `பொன்மகள் வந்தாள்' இயக்குநர்

``மகள் மாதிரி நடத்தினதுக்கு இப்ப என் மேல புகார் பண்ணியிருக்கா..!'' - `பொன்மகள் வந்தாள்' இயக்குநர்

`பொன்மகள் வந்தாள்' சீரியல் ஹீரோயின் ஆயிஷா, அதிலிருந்து விலக்கப்பட்டது குறித்து, இயக்குநர் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தார். அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், அந்த சீரியலின் இயக்குநர் நம்பிராஜா நம்மிடம் பேசினார்.

இயக்குநர் நம்பிராஜா

``அன்று கல்யாண ஷூட் எடுக்கணும். மிட் நைட்ல ஷூட்டிங் வெச்சுக்கலாம்னு பிளான். அன்று ஆயிஷாவுக்கு ஏதோ டான்ஸ் ஒத்திகை இருக்கிறதா சேனலில் சொல்லிருக்கிறாங்களாம். அதை ஷூட்லதான் சொன்னாங்க. அந்த செட்டில் இரண்டு பேருக்குக் கல்யாணமாகிற மாதிரி காட்சி. ஆயிஷாவும் அவங்க அக்கா கேரக்டரும் கல்யாணப் பெண்களாக ரெடி ஆகணும். அந்த சீன் எடுத்துட்டிருக்கும்போதே, `நான் டான்ஸ் ஒத்திகைக்குப் போகணும். என்னை சீக்கிரம் விட்டுருங்க'னு சொன்னாங்க. புரொடக்‌ஷன் ஹவுஸிலிருந்து எந்தத் தகவலும் எனக்குச் சொல்லலை. கொஞ்ச நேரம் கழிச்சு, `ஆயிஷா புரொடக்‌ஷன் ஹவுஸில் அனுமதி கேட்டாங்களா?'னு மேனஜரிடம் கேட்டேன். அதுக்கு அவர், `ஆமா சார் கேட்டாங்க. கொஞ்சம் கஷ்டம்தான். டிரை பண்றோம்னு சொல்லியிருக்கேன்' எனச் சொன்னார். சரி, சேனலிலிருந்து ஒத்திகைக்குக் கூப்பிட்டு இருக்கிறாங்களேன்னு அந்தப் பொண்ணுக்கு முதல்ல எல்லா குளோசப் ஷாட்டும் எடுத்துட்டேன். 

பொதுவா, ஒரு காட்சியில் எல்லா ஆர்ட்டிஸ்ட்டுக்குமே குளோசப் ஷாட்டை வரிசையாக ஷூட் பண்ணிட்டுத்தான், அடுத்த காட்சிக்குப் போவோம். இவங்க சீக்கிரம் போகணும்னுதான் அவசர அவசரமா கேமராமேனிடம் சொல்லி எடுத்தேன். அப்புறம்தான், `கல்யாண கெட்டப்பில் சீக்கிரம் கிளம்பி வா. ஒரு மணி நேரம் டைம் கொடுக்க முடியாது. அரை மணி நேரத்தில் வந்துடு'னு சொன்னேன். அவங்களுக்கான அடுத்த சீனுக்காக லைட்டிங் செட் பண்ணியாச்சு. நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் ஆகியும் அந்தப் பொண்ணைக் காணோம். மற்ற ஆர்ட்டிஸ்ட் காஸ்டியூம் மாற்றவேண்டிய அவசியமில்லாததால் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டிருந்தாங்க. இதுக்கு மேலே பொறுமையா இருக்க முடியாதுன்னு போய் கதவைத் தட்டினேன். டிரெஸ் மாத்திட்டிருக்கேன்னு சொன்னாங்க. `என்னம்மா உனக்காகத்தானே மற்ற ஷாட் எதுவும் எடுக்காமல் வெயிட் பண்ணிட்டிருக்கேன். இவ்வளவு லேட் பண்றியே. இந்நேரத்துக்கு மூணு பேரின் குளோசப் ஷாட்டை எடுத்திருப்பேன். எல்லோரின் டைமும் வேஸ்ட் ஆகுது'னு கோபப்பட்டேன். அந்த இடத்தில் எந்த டைரக்டர் இருந்திருந்தாலும் இயல்பான கோபம் வரும்'' என்றபடி தொடர்கிறார் நம்பிராஜா.

ஆயிஷா

``ஒரு கல்யாண மண்டபத்தில் வெச்சு ஷூட் பண்ணிட்டிருக்கோம். அந்தக் கதவை உடைச்சுட்டு எல்லாம் உள்ளே போகமுடியாதுங்க. வெளியில் நின்னு சத்தம் போட்டப்போ அவங்களாகத்தான் கதவைத் திறந்தாங்க. ஹேர் டிரஸரிடம், `ஏன்மா இவ்வளவு லேட் பண்றீங்க?' திட்டிட்டிருந்தேன். இந்தப் பொண்ணு பாதி டிரெஸ்ஸில் இருக்கிறது எனக்குத் தெரியாது. எனக்கு 49 வயசு ஆகுதும்மா. ஆயிஷாவை நான் பொண்ணுன்னுதான் சொல்வேன். ஆயிஷாவும் அப்பான்னுதான் சொல்வாங்க. தப்பான எண்ணத்தோடு அந்த ரூமுக்குள்ளே போகலை. சொல்லப்போனால், அந்தப் பொண்ணுக்கு நடிக்கவே தெரியாது. புதுசா நடிக்கிறதால, கேமரா முன்னாடி வந்ததுமே பதற்றப்படுவாங்க. சின்னப் பொண்ணுதானேனு பொறுமையா பல விஷயங்களைச் சொல்லிக்கொடுத்து நடிக்க வெச்சிருக்கேன். என் பொண்ணு மாதிரி நிறைய அட்வைஸ் பண்ணியிருக்கேன். ஆனால், என் மேலேயே புகார் சொல்வாங்கன்னு எதிர்பார்க்கலை. சன் டிவியில் ஆறு வருடங்கள் சீரியல் எடுத்திருக்கேன். விஜய் டிவிக்கு இதுதான் என் முதல் சீரியல். என்னைப் பற்றி சேனலுக்கும் என்கிட்ட வொர்க் பண்ற ஆர்ட்டிஸ்டுகளுக்கும் நல்லாவே தெரியும். எனக்கு நாலு தங்கச்சிகள் இருக்காங்க. பெண்களிடம் எப்படி நடந்துக்கணும்னு எனக்குத் தெரியும். என் பொண்ணா நினைச்சதுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துட்டாங்க'' என வேதனையுடன் தொடர்கிறார்.

``இந்த விஷயம் நடந்ததுக்கு அப்புறமும், கேஷூவலாகத்தான் ஒன்றரை மாசம் ஷூட் நடந்துச்சு. அந்தப் பொண்ணுக்கு நடிக்க வரலை. கணவன் - மனைவிக்கு இடையிலான ரொமான்டிக் சீன்களில் நடிக்க மாட்டேன்னு சொன்னாங்க. சீரியலில் இனி நிறைய ரொமான்ஸ் சீன்ஸ் இருக்கு. ஹீரோ கையவே பிடிச்சு நடிக்க மாட்டேன்னு சொன்னால், எப்படித் தொடர்ந்து எடுக்க முடியும்? ஸ்கிரிப்ட்ல எப்படி சீன் இருக்கோ, அதை ஒரு நடிகை நடிச்சுத்தானே ஆகணும். `அந்த மாதிரியான காட்சிகளில் என்னால் நடிக்க முடியாது'னு சொன்னாங்க. அவங்களை நீக்கியதுக்குக் காரணம் இதுதான். நான் சொல்லி எந்த ஆர்ட்டிஸ்டையும் நீக்கிட மாட்டாங்க. சேனலும் புரொடக்‌ஷன் ஹவுஸூம்தான் முடிவு பண்ணும். இப்பவும் அந்தப் பொண்ணு மேலே எனக்கு எந்தக் கோபமும் இல்லை. என் தரப்பு நியாயத்தைச் சொல்லணும் இல்லியா. அதுக்குத்தான் இந்த விளக்கம். இப்பவும் அவர் என் பொண்ணுதான்'' என்றார் நம்பிராஜா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க