``அவங்களுக்குப் பதிலா இப்ப நான்!"- `பொன்மகள் வந்தாள்' ரீஎன்ட்ரி மேக்னா

விஜய் டிவியின் `பொன்மகள் வந்தாள்' சீரியலில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த ஆயிஷா விலகிய நிலையில், புதிய நாயகியாக நுழைந்திருக்கிறார், மேக்னா வின்சென்ட். `தெய்வம் தந்த வீடு' சீரியலில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்தவர். அந்த சீரியலுக்கு ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இப்போது, `பொன்மகள் வந்தாள்' ரோகிணியாக, களம் இறங்கியிருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் பிஸியாக இருந்தவரை, இடைவேளையில் பேசினோம்.

மேக்னா

``என்னுடைய நாலு வயசிலேயே மீடியாவுக்கு வந்துட்டேன். மலையாளத்தில் நிறைய சீரியலில் நடிச்சேன். தமிழில் `தெய்வம் தந்த வீடு', என் முதல் சீரியல். தமிழில் நடிச்ச முதல் சீரியலுக்கே மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டு கிடைச்சது ரொம்பவே பெருமையா இருந்துச்சு. அந்த சீரியல் முடிஞ்சதும், திருமணத்துக்காக பிரேக் எடுத்தேன். இப்போ, என்னை அறிமுகப்படுத்திய சேனலிலேயே ரீ-என்ட்ரி கிடைச்சது  ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என்கிறார் மேக்னா வின்சென்ட்.

``நான் பரதநாட்டிய டான்ஸர். மலையாளத்தில் ரியாலிட்டி ஷோக்களில் நடனம் ஆடியிருக்கேன். அதைப் பார்த்துட்டு, ஜீ தமிழின் 'டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0' நிகழ்ச்சியில் கூப்பிட்டாங்க. டான்ஸ் என் பேஷன். அந்த நிகழ்ச்சி மூலமா பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஒத்திகைப் பார்க்கும்போது, காலில் அடிபட்டுருச்சு. தொடர்ந்து ஆட முடியாமல் பிரேக் எடுத்தேன். இந்த நிகழ்ச்சி ஸ்வீட்டான அனுபவங்களைக் கொடுத்திருக்கு'' என்றார்.

`பொன்மகள் வந்தாள்' சீரியலில் `ரோகிணி' கதாபாத்திரத்தில் நடித்த ஆயிஷா, டைரக்டர் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதற்கு இயக்குநர், அவர் தரப்பு நியாயத்தையும் குறிப்பிட்டிருந்தார். `கணவன் - மனைவி நெருக்கமான காட்சிகளில் நடிப்பதற்கு ஆயிஷா சம்மதிக்கவில்லை' எனக் கூறியிருந்தார். ஆயிஷா கதாபாத்திரத்தில் தற்போது நடிக்கவிருப்பவர் மேக்னா என்பதால் அவரிடம் இதுகுறித்து கேட்டோம்.

மேக்னா

``யெஸ்... அவங்களுக்குப் பதிலா இப்ப நான் ரோகிணி கதாபாத்திரத்துல நடிக்கிறேன். இந்த செட்டுல எனக்கு பர்சனலா எந்த பிராப்ளமும் இல்லை. நான் கம்பர்டபிளா ஃபீல் பண்றேன். மனைவியா நடிக்கிறதுதான் என் கதாபாத்திரம். `தெய்வம் தந்த வீடு' சீரியலில் மனைவியா நடிச்சிருக்கேன். அதனால், எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நடிக்கிறது என் தொழில். என் டைரக்டர் என்ன சொல்றாரோ அதை நான் நடிச்சுக் கொடுப்பேன் அவ்வளவுதான். `சீதா' கதாபாத்திரத்தை மக்கள் எப்படி விரும்பினாங்களோ, அதே மாதிரி இந்த ரோகிணியையும் ஏத்துப்பாங்கன்னு நம்புறேன்.

என் கணவர்தான் என் பலம். அவர்தான் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துக்க என்னை உற்சாகப்படுத்தினார். இப்போ, சீரியலில் ரீ- என்ட்ரி கொடுக்கவும் உற்சாகப்படுத்தினார். என் மாமியார் என்னை மகள் மாதிரி ட்ரீட் பண்ணுவாங்க. நான் நடிக்கப்போறேன்னு சொன்னதும் அவங்களுக்கு அத்தனை மகிழ்ச்சி. என் நாத்தனாரும் நானும் நல்ல தோழிகள். அவங்க ஆலோசனையும் கிடைச்சது. இப்படி எல்லோருடைய சப்போர்ட் மூலமே சீரியலில் மறுபடியும் என்னைப் பார்க்க முடியுது. இப்போகூட ஷூட்ல என் அம்மாவுடன் இருக்கேன். நான் ரீ-என்ட்ரி கொடுக்கவும் ரசிகர்கள் நிறைய பேர் ஜாலியாகிட்டாங்க. ஷூட் ஆரம்பிச்ச கொஞ்ச நாளிலேயே நான் நடிச்ச காட்சிகளுக்கு நல்லா நடிக்கிறீங்கன்னு பாராட்டுறாங்க. அவங்களுடைய சப்போர்ட்தான் எனக்கு எப்பவும் வேணும். பர்சனலா என்னைப் பாராட்டி மெசேஜ் பண்ற எல்லோருக்கும் ரொம்ப நன்றி'' என்கிறார் மேக்னா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!