வெளியிடப்பட்ட நேரம்: 18:24 (01/08/2018)

கடைசி தொடர்பு:18:24 (01/08/2018)

’’என்னாது... திருவள்ளுவர் வாய்ஸா!?’’ - ‘சிரிச்சா போச்சு’ டீம்

"வெளியில நிறைய பேர் கிண்டல் பண்ணிட்டுத்தான் இருக்காங்க. கிண்டல் பண்றவங்க பண்ணட்டும். அது அவங்க வேலை; இது என் வேலை.’’

’’என்னாது... திருவள்ளுவர் வாய்ஸா!?’’  - ‘சிரிச்சா போச்சு’ டீம்

`2018 -19 ம் ஆண்டுக்கான விகடன் மாணவப் பத்திரிகையாளர்களாக தேர்வானவர்களோடு ஓர் உரையாடல் இருக்கு, வரீங்களா பாஸ்...’ எனக் கேட்டதும், `கண்டிப்பா’ என்றபடி ராமர், வடிவேல் பாலாஜி, தங்கதுரை, தீனா, நாஞ்சில் விஜயன், திவாகர் மற்றும் `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் இயக்குநர் தாம்ஸன் ஆகியோர் ஆஜரானார்கள். அடுத்தடுத்து மாணவப் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, `சிரிச்சா போச்சு’ டீம் சொன்ன பதில்களின் தொகுப்பு இதோ...

சிரிச்சா போச்சு

நீங்க நிறைய ஸ்டேஜ் ஷோ பண்ணியிருப்பீங்க... அதில் நடந்த மறக்கமுடியாத சம்பவம் ஏதாவது சொல்லுங்க..?

தங்கதுரை: ``நிறைய மேடை நிகழ்ச்சிகளில் `வாய்ஸ் உங்கள் சாய்ஸ்'னு, ஆடியன்ஸ்கிட்ட என்ன வாய்ஸ் பண்ணலாம்னு கேட்டு பண்ணுவேன். அப்போ சில பேர் அவங்களுக்குப் பிடிச்ச நடிகர்களோட வாய்ஸை பேசச் சொல்லி கேட்பாங்க. ஒரு நிகழ்ச்சியில ஒருத்தர் எந்திரிச்சு, `திருவள்ளுவர் வாய்ஸ்ல பேசுங்க’னு சொல்லிட்டார். என்னப் பண்றதுனு தெரியாம வந்துட்டேன்.’’

உங்க ஷோக்களில் பேசப்படுற வசனங்கள் சோஷியல் மீடியாக்களில் அடிக்கடி ட்ரெண்டாகும்... அதோட ரீச் எப்படியிருக்கும்னு முன்னாடியே உங்களுக்குத் தெரியுமா..?

டைரக்டர் தாம்ஸன்: ``எப்போதுமே இது ஹிட்டாகும்; வைரலாகும்னு யோசிச்சு யோசிச்சு பண்றது இல்லை. அப்படிப் பண்ணுனா வேலையைச் சரியா பண்ண முடியாது. நாங்க ஸ்கிரிப்ட் பண்ணும் போது மக்களை சிரிக்க வைக்கணும்னு மட்டும்தான் யோசிச்சோம். அப்புறம் `சிரிச்சா போச்சு' டீம்ல இருக்கிற எல்லாருக்கும் கடவுள் ஒரு வரம் கொடுத்திருக்கார்; அதுதான் அவங்க முகம். சில முகங்களை பார்த்த உடனே சிரிப்பு வரும். அப்படியான முகங்கள்தான் இவங்களுக்கு இருக்கு. நான் அடிக்கடி ராமர்கிட்ட, ‘உங்க முகத்தைப் படைக்கும் போது கடவுள் மூடு அவுட்ல இருந்திருப்பார் போல’னு காமெடியா சொல்லுவேன்.’’

இரட்டை அர்த்த வசனங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கிதுனு ஸ்கிரிப்ட்டில் அதை அதிகம் சேர்ப்பீங்களா..?

டைரக்டர் தாம்ஸன்: ’’ஸ்கிரிப்ட்டில் அதை நான் எழுதுறது இல்லை. இவங்களா ஆன் த ஸ்பாட்ல பேசிடுவாங்க. நான் எப்போதுமே ஃபேமிலி ஆடியன்ஸ் முக்கியம்னு நினைப்பேன். அதை மனசில் வைத்துதான் ஸ்கிரிப்ட் எழுதுவேன்.’’

சிரிச்சா போச்சு

உங்க எல்லாரோட பெயருக்கு முன்னாடியும் ஒரு அடைமொழி இருக்கு. அதை நீங்க முழு மனசோட ஏத்துக்கிட்டுதான் வெச்சீங்களா..?

வடிவேல் பாலாஜி: ’’என் பெயரைப் பார்த்துட்டு நான் வடிவேல் சார் மாதிரி மட்டும்தான் பண்ணுவேன்னு நினைக்கிறாங்க. அதுனாலேயே பட வாய்ப்புகள் வரதில்லை. அதனால இந்த பெயரை மாத்திடலாம்னு நான் நினைக்கலாம். ஆனால், அது முடியாது. மக்கள் மனசுல இந்தப் பெயர் பதிவாகிடுச்சு. அதை மாத்தவே முடியாது.’’

ஒரு ஆண், பெண் வேஷம் போட்டு நடிக்கிறது கஷ்டமான விஷயம்... ஒரு பெரிய மாஸ் மீடியாவில் அதைப் பண்ணும் போது உங்களுக்கு எதுவும் தயக்கம் இருந்ததா..?

நாஞ்சில் விஜயன்: ``ஒரு காமெடி ஷோவில் பெண் கேரக்டர் இல்லாமல் ஸ்கிரிப்ட் எழுதவே முடியாது. எங்க டீமை பொறுத்தவரைக்கும் மீசை பிரச்னை பெரும் பிரச்னையா இருக்கு. சிலரால மீசை எடுக்க முடியாது. அதுனால நான், வடிவேல் பாலாஜி அண்ணன், ராமர் அண்ணன்னு சில பேர் மட்டும் பெண் வேஷம் போட்டுட்டு இருக்கோம். அதுல நான் கொஞ்சம் மெனக்கெட்டு அதைப் பண்றதால பார்க்க அழகா இருக்கு. வெளியில நிறைய பேர் கிண்டல் பண்ணிட்டுத்தான் இருக்காங்க. கிண்டல் பண்றவங்க பண்ணட்டும். அது அவங்க வேலை; இது என் வேலை.’’

நீங்க நல்லா பாடுறீங்க... சூப்பர் சிங்கர்ல பாடலாம்ல..?

ராமர்: ``சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் ஆரம்பிச்சிருக்காங்க. அதுல குரலை மாத்திப் பாடலாம்னு இருக்கேன்.’’

இந்தச் சந்திப்பின் வீடியோவைக் காண...

...