Published:Updated:

``சண்முகராஜன் பிரச்னையை குஷ்பு அக்கா பார்த்துப்பாங்க!" - நடிகை ராணி

அய்யனார் ராஜன்

நடிகர் சண்முகராஜன் புகார் தந்தது தொடர்பாக தனக்கு எந்தவொரு கடிதமும் நடிகர் சங்கத்திலிருந்து வரவில்லை என்கிறார், நடிகை ராணி.

``சண்முகராஜன் பிரச்னையை குஷ்பு அக்கா பார்த்துப்பாங்க!" - நடிகை ராணி
``சண்முகராஜன் பிரச்னையை குஷ்பு அக்கா பார்த்துப்பாங்க!" - நடிகை ராணி

சில மாதங்களுக்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த `நந்தினி' சீரியலின் ஷூட்டிங் சென்னைக் கொரட்டூர் பகுதியில் நடந்து கொண்டிருந்தபோது, ஷூட்டிங் ஸ்பாட்டில் அதில் நடித்து வரும் நடிகர் சண்முகராஜனுக்கும், நடிகை ராணிக்கும் இடையே மோதல் உண்டாகி, பிரச்னை காவல் நிலையம் வரை சென்றதை அறிவீர்கள்.

சண்முகராஜனும், ராணியும் `நந்தினி' சீரியலில் கணவன் மனைவியாக நடித்து வந்தனர். சண்முகராஜனை ராணி அடிப்பதுபோல் ஒரு காட்சி சீரியலில் வைக்கப்பட்டபோது, ராணி நிஜமாகவே அடித்து விட்டதாகச் சொல்லப்பட்டது. இந்தச் சம்பவத்தால் கோபமான சண்முகராஜன், மறுநாள் ராணியையும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அவரது கணவரையும் தாக்கியதாகச் சொன்னார்கள். சிலரோ, `சீரியல் இயக்குநருக்கும், சண்முகராஜனுக்கும் இடையே பிரச்னை. ஆக்சுவலா, அந்த கேரக்டர்ல இயக்குநரே நடிக்கலாம்னு இருந்தார். சண்முகராஜன் வேற ஒரு ரூட்ல இந்த சீரியலுக்குள்ளே வந்துட்டார். அதனால, ரெண்டு பேருக்குமே ஆகாம இருந்து வந்தது. கடுப்புல இருந்த டைரக்டர், சமயம் பார்த்து சண்முகராஜன் அடி வாங்குற மாதிரி ஒரு காட்சியை வெச்சுப் பழி தீர்த்துக்கிட்டார்' என்றும் பேசினார்கள்.

செங்குன்றம் காவல்நிலையத்தில், போலீஸாரும், சீரியல் தயாரிப்புத் தரப்பும் பேச்சுவார்ததை நடத்தியதைத் தொடர்ந்து, இந்தப் பிரச்னை சுமுகமானதாகச் சொன்னார்கள். பிறகு, சண்முகராஜனுக்கும், ராணிக்கும் இடையே சமரசம் ஏற்பட்டாதாகச் சொல்லப்பட்டு, புகாரும் வாபஸ் பெறப்பட்டது.

ஆனால், பிறகு ஒரு பேட்டி ஒன்றில், `சண்முகராஜன் எனக்குப் பாலியல் தொந்தரவு தந்தார்' என ராணி `மீடூ' குற்றச்சாட்டைக் கூற, அதை மறுத்த சண்முகராஜன் அதற்காக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ராணி மீது புகார் அளித்திருந்தார்.

நடிகர் சங்கத்திலிருந்து இரு தரப்பு விளக்கத்தையும் கேட்டதாகச் சொல்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து கடிதம் மூலம் ராணியிடம் விளக்கம் கேட்கப்பட்டதாம். சண்முகராஜன், சமீபத்தில் நடந்த சங்க செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு விளக்கமளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, தலைவர் நாசர் கையெழுத்திட்டு, நடிகர் சங்கத்திலிருந்து கடிதம் ஒன்று சண்முகராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதில், `தாங்கள் திரைத்துறையிலும், நாடகத்துறையிலும் இதுவரையில் தனிப்பட்ட முறையில் நற்பெயரில் உள்ளதை நடிகர் சங்கம் கருத்தில் கொண்டு, இந்த அசம்பாவிதத்துக்கு நடிகர் சங்கம் வருந்துகிறது. தங்கள் மீது பாலியல் தொடர்பான புகார் காழ்ப்பு உணர்ச்சியில் கொடுக்கப்பட்டது என்பதைத் தாங்கள் அளித்த விளக்கம் மூலம் தெரிந்துகொண்டோம். அதேநேரம், இனி வரும் காலத்தில் நடிகை ராணி திரைப்படத் துறையிலோ, அல்லது தொலைக்காட்சித் தொடரிலோ நடிக்க வரும்பொழுது, தங்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டால் மட்டுமே தொடர்ந்து நடிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் தொடர்பாக ராணியிடம் கேட்டபோது,

`என்ன கடிதம்ங்க' எனக் கேட்டவர், `அதுல என்ன இருக்கு' எனவும் கேட்டுக்கொண்டார். கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விஷயங்களை அவருக்குச் சொன்னதும், `எனக்கு எந்தவொரு கடிதமும் நடிகர் சங்கத்திலிருந்து வரவில்லை. நடிகர் சண்முகராஜன் சங்கத்துல புகார் தந்திருக்கார் என்ற விஷயமேகூட சங்கத்துல இருந்து எனக்குத் தெரிவிக்கப்படலை' என்றார்.

`மன்னிப்பு கேட்டால் மட்டுமே தொடர்ந்து சீரியலிலோ, சினிமாவிலோ நடிக்க முடியும்' எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவரத்தைச் சொன்னோம். அதற்கு, `அதையெல்லாம் குஷ்பு அக்கா பார்த்துப்பாங்க' என்று முடித்துக்கொண்டார், ராணி. 

இந்த விவகாரம் எங்கு போய் முடியும் என்பது சில தினங்களில் தெரியும்!

அய்யனார் ராஜன்