``கும்பகோணம் தீ விபத்து... சுனாமி... தாத்தாவின் மரணம்... மறக்க முடியாத செய்தி வாசிப்புகள்!" - ஜெயஶ்ரீ | News Reader Jayashree talks about her working experience

வெளியிடப்பட்ட நேரம்: 17:49 (08/01/2019)

கடைசி தொடர்பு:17:49 (08/01/2019)

``கும்பகோணம் தீ விபத்து... சுனாமி... தாத்தாவின் மரணம்... மறக்க முடியாத செய்தி வாசிப்புகள்!" - ஜெயஶ்ரீ

``அந்தச் சோகச் செய்தியை கலர்ஃபுல் மேக்கப் மற்றும் காஸ்டியூம் உடன் வாசிக்கக் கூடாது. அதனால தலையில் இருந்த பூவையெல்லாம் எடுத்துட்டு, சட்டுனு ரொம்ப நார்மல் மேக்கப்ல அச்செய்தியை வாசிக்கத் தயாரானேன்."

செய்தி வாசிப்பாளராகி, 25 அண்டுகளை நிறைவு செய்திருக்கிறார், ஜெயஶ்ரீ சுந்தர். பிரபலமான செய்தி வாசிப்பாளராக இருந்தவர், தன் பணி அனுபவங்களை சுவாரஸ்யமாகப் பேசுகிறார்.

ஜெயஶ்ரீ

``1990-களில் பிரபலமான செய்தி வாசிப்பாளராக இருந்த அனுபவம் பற்றி..."

``1993-ம் ஆண்டு `தூர்தர்ஷன்'ல செய்தி வாசிப்பாளராகப் பணியில் சேர்ந்தேன். பிறகு, 1998-ம் ஆண்டு சன் டிவியில் சேர்ந்து, அங்க நீண்டகாலம் வேலை செய்தேன். அந்தக் காலகட்டத்துல செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் ஆர்வமாப் பார்ப்பாங்க. செய்தியைத் தாண்டி, பெண் செய்தி வாசிப்பாளர்கள் பயன்படுத்தும் புடவை, அக்சசரீஸையும் மக்கள் கவனிப்பாங்க. கடைக்குப் போய் பேரம் பேசினால்கூட, `நீங்க எல்லாம் பேரம் பேசலாமா?'னு கேட்பாங்க. ஒருமுறை காய்கறி மார்க்கெட் போனப்போ, `நீங்க சமைப்பீங்களா?'னு ஒரு கடைக்காரம்மா கேட்டாங்க. `ஏம்மா, நீங்க சாப்பிடுவீங்களா?னு கேட்காம விட்டுட்டீங்களே. நாங்களும் சாதாரண மனுஷங்க தானே'னு சொன்னேன். அந்த அளவுக்கு அப்போ சின்னத்திரையில வேலை செய்றவங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்துச்சு." 

ஜெயஶ்ரீ

``பணி அனுபவத்தில் மறக்க முடியாத சில நினைவுகள் பற்றி..."

``நிறைய இருக்கு. குறிப்பா, கும்பகோணம் தீ விபத்து நடந்த தினம். மதியம் 1 மணிச் செய்தி. வழக்கம்போல விளையாட்டுச் செய்திகளைத் தொடர்ந்து, மற்றும் முக்கியச் செய்திகளை வாசிச்சு முடிச்சுட்டேன். கடைசி நேரத்துல தீ விபத்து செய்திகள் வருது. செய்தியைக் கேட்டதுமே பேரதிர்ச்சி. பிறகு அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து, வாசிக்க முடிவாச்சு. அந்தச் சோகச் செய்தியை கலர்ஃபுல் மேக்கப் மற்றும் காஸ்டியூம் உடன் வாசிக்கக் கூடாது. அதனால தலையில் இருந்த பூவையெல்லாம் எடுத்துட்டு, சட்டுனு ரொம்ப நார்மல் மேக்கப்ல அச்செய்தியை வாசிக்கத் தயாரானேன். செய்தியை வாசிக்க வாசிக்க... வீடியோ காட்சிகளைப் பார்த்து மனசுக்குள்ள பெரிய வலி. அதை வெளிக்காட்டிக்காம செய்தியை வாசிச்சு முடிச்சேன். பிறகு அன்றைய மற்ற செய்திகளிலிருந்து, கிட்டத்தட்ட ஒருவாரத்துக்கு அந்தத் தீ விபத்தின் ஃபாலோ அப் செய்திகளை வாசிச்சதெல்லாம் ரொம்ப வலியா இருந்துச்சு. அதேபோல விவரிக்க முடியாத சோகத்துடன், சுனாமி செய்திகளை வாசிச்சேன். என்னுடைய தாத்தா, `முத்தமிழ் காவலர்' கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை 1994-ம் ஆண்டு காலமானார். டிசம்பர் 19-ம் தேதி திருச்சியில் நடந்த அவரின் இறுதிகாரியத்தில் கலந்துக்கிட்டேன். பிறகு 20-ம் தேதி அவர் மறைவுச் செய்தியை நானே வாசிச்சேன்." 

ஜெயஶ்ரீ

``உங்க அண்ணன் ஶ்ரீகாந்த் உடன் இணைந்து பணியாற்றியது மற்றும் தொகுப்பாளர் அனுபவம் பற்றி..."

``நானும் அண்ணனும் தாத்தாகிட்டதான் தமிழ் கத்துக்கிட்டோம். ஆனா, நான்தான் முதலில் செய்தி வாசிப்பாளரானேன். அண்ணனும் இதே துறைக்கு வருவார்னு நினைக்கலை; வந்தார். சன் டிவியில நாங்க இருவரும் சேர்ந்து நிறைய நாள்கள் செய்திகள் வாசிச்சிருக்கிறோம். ஆங்கிலப் பெயர் மற்றும் உச்சரிப்புகளைச் சரியாக உச்சரிப்பவர். அதுபற்றி எனக்கும் சொல்லிக்கொடுத்திருக்கிறார்." 

கலைஞர் செய்திகள் சேனலுக்கு வந்த பிறகு, செய்தி வாசிப்பைத் தாண்டி, அரசு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் வேலை செய்தேன். அந்தப் பணி எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலும் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சிகளில் நான்தான் அதிக முறை தொகுப்பாளராக வேலை செய்தேன். அவர் என் தொகுப்பாளர் பணியைப் பத்தி அதிகம் பேசுவார்; கருத்துகள் சொல்வார்; பாராட்டுவார்." 

ஜெயஶ்ரீ

``சக செய்தி வாசிப்பாளர்களுடனான நட்பு பற்றி... " 

`` `என் சின்ன வயசுல உங்க செய்தி வாசிப்பைப் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறேன்'னு என்னுடன் செய்தி வாசிக்கும் இளைய தலைமுறையினர் சிலர் சொல்வாங்க. அதைக்கேட்டு மகிழ்ச்சியா இருந்தாலும், அடுத்தத் தலைமுறைக்கு வழிவிடணும்னு நினைச்சேன். அதனாலதான் சன் டிவியில இருந்து விலகினேன். நான் சன் டிவியில வேலை செய்த காலகட்டத்துல உடன் பணியாற்றிய செய்தி வாசிப்பாளர்கள் பலருடனும் இப்போவரை நல்ல நட்புடன் இருக்கிறேன். எங்க வாட்ஸ்அப் குரூப்பில் தொடர்ந்து பேசிக்கிறோம்."

``உங்க பார்வையில், இன்றைய செய்திகளுக்கான வரவேற்பு எப்படி இருக்கு?"

``எங்க காலத்துல தமிழ் உச்சரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். அப்போ, பெரும்பாலான மக்கள் வீட்டுல உட்கார்ந்து செய்தி பார்க்கிறதை வழக்கமா வெச்சிருந்தாங்க. `முக்கியச் செய்தி'க்கு முக்கியத்துவம் இருந்துச்சு. ஆனா, இப்போ அப்படியில்லையே. செல்போன்ல இருந்த இடத்துல செய்தியைத் தெரிஞ்சுக்கிறாங்க. அதனால செய்தி வாசிப்பாளர்களுக்குக் குறிப்பிட்ட அடையாளம் குறைஞ்சுடுச்சுனு தோணுது. இப்போ, ஶ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்றேன். தனியார் சேனல்கள் மற்றும் வெப் சேனல்கள்லயும் செய்தி வாசிக்க வாய்ப்புகள் வருது. இன்னும் முடிவெடுக்கலை."


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close