``ரியாலிட்டி நிகழ்ச்சியால், மூணாவது படிக்கிற மகளின் படிப்பு எப்படிப் பாதிக்கும்?!" - ஜெயஸ்ரீ | `super mom' show jayashree talks about her contestant experience

வெளியிடப்பட்ட நேரம்: 13:04 (16/01/2019)

கடைசி தொடர்பு:15:35 (16/01/2019)

``ரியாலிட்டி நிகழ்ச்சியால், மூணாவது படிக்கிற மகளின் படிப்பு எப்படிப் பாதிக்கும்?!" - ஜெயஸ்ரீ

``வெற்றி, தோல்வியைப் பத்திக் கவலையில்லை. இந்நிகழ்ச்சியில வின்னராகிதான், நான் `சூப்பர் மாம்'னு பெயர் எடுக்கணும்னு இல்லையே!"

சூப்பர் மாம் ஜெயஶ்ரீ

சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ ஈஸ்வர், ஜீ தமிழ் `சூப்பர் மாம்' நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கிறார். தன் மகளுடன் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சி அனுபவங்கள் குறித்துப் பேசுகிறார்.

`` `சூப்பர் மாம்' நிகழ்ச்சியின் போட்டியாளர் அனுபவம் பற்றி..." 

``சின்னதிரை பெண் பிரபலங்கள் தங்கள் குழந்தையோடு பங்குபெறும் விளையாட்டு நிகழ்ச்சி இது. என்னைப் போட்டியாளராகக் கூப்பிட்டபோது முதலில் தயங்கினாலும், பிறகு ஒப்புக்கிட்டேன். இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் அம்மாக்களான நாங்க பலரும் பல வருடத் தோழிகள். ஆனால், எங்க குழந்தைகளுக்குள் பெரிசா நட்பு கிடையாது. இந்நிகழ்ச்சியின் மூலம் எங்க எல்லோரின் குழந்தைகளும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க. சின்னதிரையில் நீண்ட காலமா வேலை செய்றேன். ஆனா, சீரியல், ரியாலிட்டி நிகழ்ச்சி ஷூட்டிங்லதான் சக மீடியா நண்பர்களுடன் பழக முடியும். அப்புறம் ஒருவரையொருவர் மீட் பண்ணிக்கிறது அரிதாகிடும். `சூப்பர் மாம்' நிகழ்ச்சி மூலமாக எங்களுள் நட்பு அதிகமாகியிருக்கு. நாங்க மீட் பண்ணிக்கிற தருணம், எங்களுக்குள் இருக்கும் எல்லாக் கவலைகளும் பறந்திடும்." 

சூப்பர் மாம்

``இந்த நிகழ்ச்சி எந்த வகையில் உங்களுக்கு ஸ்பெஷலானது?"

``இதுவரை பல நிகழ்ச்சிகளில் போட்டியாளரா கலந்துகொண்டிருக்கிறேன். `மானாட மயிலாட' நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகியிருக்கிறேன். பிறகு பதினொரு வருஷமா எந்த ரியாலிட்டி நிகழ்ச்சியிலயும் நான் கலந்துக்கலை. பிறகு, `சூப்பர் மாம்' நிகழ்ச்சியில என் மகள் ரித்வா ஈஸ்வரோடு கலந்துக்கிறேன். இதுதான் ரொம்ப ஸ்பெஷலானது. ஹோம்வொர்க், டான்ஸ்னு என் குழந்தையோடு வீட்டில் நேரம் செலவிடுவேன். ஆனா, ஷூட்டிங் மற்றும் மற்ற வேலையினு ஓடிகிட்டு இருப்பதால, என் மகளோடு விளையாட நான் நேரம் செலவிடுறது ரொம்பக் குறைவுதான். அந்தக் குறையை, `சூப்பர் மாம்' நிகழ்ச்சியின் மூலம் நிவர்த்தி செய்துக்கிறேன். இந்நிகழ்ச்சியில நானும் என் பொண்ணும் தோழிகளாக விளையாடுறோம். இந்த அனுபவம் வேறு எங்கு கிடைக்கும். அந்த வகையில இந்த நிகழ்ச்சி, எனக்கு மட்டுமல்ல... எல்லா அம்மாக்களுக்கும் ரொம்ப ஸ்பெஷல்தான்."

சூப்பர் மாம்

``இந்நிகழ்ச்சியில் மறக்க முடியாத சுவாரஸ்யங்கள் பற்றி..."

``தொகுப்பாளர் அர்ச்சனா, எல்லோரையும் கலாய்ப்பாங்க. எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்போம். சமீபத்தில் முதியோர் இல்லத்திலிருந்து சில அம்மாக்கள் எங்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தாங்க. அந்த அம்மாக்களின் நெகிழ்ச்சியான பேச்சு, எல்லோரையும் கண்கலங்க வெச்சது. உறவின் அன்பு மற்றும் ஆழத்தை நாங்க எல்லோரும் உணர்ந்த தருணம். மற்றொரு எபிசோடில் கலந்துக்கிட்ட தெருக்கூத்து கலைஞர்களின் பேச்சும் நெகிழ்ச்சியாக இருந்தது. இதனால், பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்துல, எங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைச்சுது." 

``பொண்ணோட படிப்பு பாதிக்கலையா?"

``ஆரம்பத்தில் நானும் அப்படி நினைச்சு பயந்தேன். ஆனா, இந்நிகழ்ச்சியின் ஷூட்டிங் மாதத்தில் ரெண்டு நாள்தான் நடக்குது. அதனால் மூணாவது படிக்கிற மகளின் படிப்பு பாதிக்காது. தவிர, குழந்தைகளுக்குப் படிப்பு முக்கியம்தான். அதுக்காக எந்நேரமும் படிப்பு, எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் கிளாஸ்னு மட்டுமே அனுப்புற அம்மா நானில்லை. படிப்புக்கான நேரம் போக, மத்த நேரங்களில் நண்பர்களுடன் விளையாடி, சந்தோஷமா இருக்கவே மகளை வலியுறுத்துவேன். இந்நிகழ்ச்சியால், குழந்தைகளின் நடிப்பு, விளையாட்டுத்திறனும் வளரும். நான்காம் வகுப்புக்கு உட்பட்ட குழந்தைகள்தான் இந்நிகழ்ச்சியில கலந்துக்கிறாங்க. அதனால, இந்த நிகழ்ச்சியால குழந்தைகளின் படிப்பு பாதிக்கும்னு பயப்படவேண்டிய அவசியமே இல்லை." 

ஜெயஶ்ரீ

``நீங்க ஃபைனல் வரை போகும் வாய்ப்பு இருக்கா?"

``இதுவரை பத்து எபிசோடு முடிச்சிருக்கு. இதுவரை எலிமினேட் ஆகலை. இன்னும் சில எபிசோடுகளில் நிகழ்ச்சி முடியப்போகுது. வெற்றி, தோல்வியைப் பத்திக் கவலையில்லை. இந்நிகழ்ச்சியில வின்னராகிதான், நான் `சூப்பர் மாம்'னு பெயர் எடுக்கணும்னு அவசியமில்லையே! ஒவ்வொரு அம்மாவுமே `சூப்பர் மாம்'தான்! என் மகளும் நானும் ஒவ்வொரு சுற்றுலயும் ஜாலியா விளையாடுறோம். இப்போ கேம் ரொம்பக் கடினமாகிட்டே இருக்கு.  ஃபைனல் வரை வந்தால் சந்தோஷம். வராவிட்டால் கவலைப்படமாட்டேன்."


டிரெண்டிங் @ விகடன்