Published:Updated:

``ஒரு சராசரி பெண்ணுக்கான பிரச்னைகள் எனக்கும் உண்டு!" - தேவிபிரியா

கு.ஆனந்தராஜ்

``நிறைய கஷ்டங்களைச் சந்திச்சிருக்கேன். ஆனா, `இதுக்கு மேல வாழ்க்கையில என்ன இருக்கு?'னு தவறான முடிவுகளை எடுக்கிற ஆள் நானில்லை."

``ஒரு சராசரி பெண்ணுக்கான பிரச்னைகள் எனக்கும் உண்டு!" - தேவிபிரியா
``ஒரு சராசரி பெண்ணுக்கான பிரச்னைகள் எனக்கும் உண்டு!" - தேவிபிரியா

சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றிவருகிறார். தேவிபிரியா என்றாலே அவருடைய அகன்ற விழிகளும், போல்டான பிசிரில்லாத குரலுமே நம் ஞாபகத்துக்கு வரும். `சீமராஜா' திரைப்படத்தில் சிம்ரனுக்கு டப்பிங் பேசியிருந்தார். தன் நடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் குறித்துப் பேசுகிறார், தேவிபிரியா.

``இப்போது டப்பிங் பணிகள்லயும் அதிகம் கவனம் செலுத்துறீங்களா?"

``ஆமாம்!  `புதுப்பேட்டை' படத்துல சினேகாவுக்கும், `தாமிரபரணி' படத்துல நதியா மேடத்துக்கும் டப்பிங் பேசினேன். பெரிசா ரீச் கிடைச்சுது. தொடர்ந்து `பொல்லாதவன்', `ஆடுகளம்', `கிடாரி'னு உட்படப் பல படங்கள்ல டப்பிங் பேசினேன். `வடசென்னை' படத்துல ஆண்ட்ரியாவுக்குக் கொடுத்தாலும், அது செட் ஆகலை. `போல்டான கிராமத்துப் பெண்கள் கேரக்டருக்கு என் குரல் நல்லா பொருத்தமா இருக்கு'னு பலரும் பாராட்டுவாங்க. அது உண்மைதான்!"

``முதல் டப்பிங் வாய்ப்பு எப்படிக் கிடைச்சுது?"

``சீரியல்ல நடிக்க ஆரம்பிச்ச தருணத்துலயே, சின்னத்திரை நடிகைகளுக்கு டப்பிங் கொடுக்க ஆரம்பிச்சேன். `டைம்' என்ற மலையாளப் படத்தில் நடிகை மீனா மேடத்துக்குத்தான் முதலில் டப்பிங் பேசினேன். அது எனக்கே வித்தியாசமான அனுபவம். தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வரும்னு நினைச்சேன். ஆனா, வரலை. ஒருகட்டத்துல டப்பிங் வாய்ப்புகள் வராதுனு நினைச்சேன். இந்நிலையில `புதுப்பேட்டை' படத்துல இருந்து மறுபடியும் டப்பிங் வாய்ப்புகள் அதிகம் வர ஆரம்பிச்சுது."

``சின்னத்திரையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான நடிப்பு அனுபவம் எப்படி இருக்கு?" 

``ஶ்ரீப்ரியா மேடத்தின், `மறக்க முடியுமா?' சீரியலில் ஹீரோயினா நடிச்சிருக்கேன். அப்படித் தொடங்கி, நிறைய சவால்களைக் கடந்துதான் இப்போவரை நடிச்சுகிட்டு இருக்கேன். நடுவுல சின்னச் சின்ன இடைவெளியும் எடுத்திருக்கேன். ஆனா, நான் ஃபீல்டைவிட்டு காணாமல் போகலை; ஃபீல்ட் அவுட்டும் ஆகலை. இன்றைக்கு சீரியல் தயாரிப்புல இருந்து, ரசிகர்களின் ரசனைவரை நிறைய மாற்றங்கள் வந்திடுச்சு. வெளிமாநில நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுது. அதேசமயம் சீனியர் கலைஞர்களுக்கான முக்கியத்துவமும் கொடுக்கப்படுது. இதனால், நடிகர்கள் நிறைய சாதக, பாதக அனுபவங்களை எதிர்கொள்வது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கு. வயசுக்கு ஏத்த போல்டான கேரக்டர்களில் நடிக்க ரொம்ப ஆசைப்படறேன். தொடர்ந்து நடிப்பேன்."

``நீண்டகால நடிப்பு அனுபவம் சோர்வைக் கொடுத்திருக்கிறதா?"

``நிச்சயம் இல்லை. `சொர்க்கம்' சீரியல்ல போலீஸ் ரோல்ல நடிச்சேன். அப்போ அந்த கேரக்டரைப் பத்தியே அதிகம் பேசினாங்க. நிஜ போலீஸாரே என்னைப் பாராட்டியிருக்காங்க. பிறகு சென்டிமென்ட் மற்றும் நெகட்டிவ் ரோல்கள்னு மாறி மாறி நடிக்கிறேன். ஒரு சீரியல் கேரக்டரின் தாக்கம் இன்னொரு சீரியல்ல இல்லாதமாதிரிதான் நடிப்பேன். தொடர்ந்து இடைவெளியே இல்லாம நடிக்கிறது என் பழக்கம் இல்லை. ஆனா, என் நடிப்பை மக்கள் மறந்திடக் கூடாது. எனக்கு இது போதும். நடிப்புதான் எனக்கான அடையாளம். இதைவிட எனக்கு விருப்பமில்லை. வாய்ப்பு வரும்வரை நடிச்சுகிட்டே இருப்பேன்."

``எதிர்காலத் திட்டமிடல் பற்றி..."

``பர்சனல் வாழ்க்கையில இப்போ எந்தப் பிரச்னையும் இல்லை. ஒரு சராசரி பெண்ணின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் என்னென்ன பிரச்னைகள், சிக்கல்கள், சந்தோஷங்கள் இருக்குமோ அதையெல்லாம் நானும் அனுபவிச்சிருக்கேன். நிறைய கஷ்டங்களைச் சந்திச்சிருக்கேன். ஆனா, `இதுக்கு மேல வாழ்க்கையில என்ன இருக்கு?'னு தவறான முடிவுகளை எடுக்கிற ஆள் நானில்லை. தைரியமான குணத்துடன் பிரச்னைகளை எதிர்கொள்வது என் பழக்கம். வாழ்க்கைப் போகிற போக்கில், நம்பிக்கையோடு வாழ்ந்துட்டு இருக்கேன்."

கு.ஆனந்தராஜ்