Published:Updated:

``ஹிரித்திக் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி!" `சூப்பர் சிங்கர்' ஹிரித்திக் வெற்றியால் மகிழும் அம்மு

கு.ஆனந்தராஜ்

"எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. ஆனா, நான் பெத்த குழந்தை வெற்றியாளரா ஆனதுபோல எனக்குள் பெருமித உணர்வு."

``ஹிரித்திக் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி!" `சூப்பர் சிங்கர்' ஹிரித்திக் வெற்றியால் மகிழும் அம்மு
``ஹிரித்திக் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி!" `சூப்பர் சிங்கர்' ஹிரித்திக் வெற்றியால் மகிழும் அம்மு

விஜய் டிவி `சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ்' நிகழ்ச்சியின் வெற்றியாளராகியிருக்கிறார் ஹிரித்திக். இவரின் திறமையை அடையாளம் கண்டு, `சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொள்ள வைத்து ஊக்கப்படுத்தியிருப்பவர், சின்னத்திரை நடிகை அம்மு. ஹிரித்திக்கின் வெற்றி குறித்து அம்முவிடம் பேசினோம்.

``சென்னை வேலம்மாள் ஸ்கூல்ல ஹிரித்திக் படிக்கிறான். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த ஸ்கூல்ல நடந்த கல்சுரல் ஈவன்ட் மற்றும் ஆண்டு விழாவில் நான் நடுவரா கலந்துகிட்டேன். அந்நிகழ்ச்சியில் ஹிரித்திக், `காற்றோடு குழலின்' பாடலைப் பாடினான். அதைக் கேட்டு ரொம்பவே இம்ப்ரஸானதுடன் அழுதுட்டேன். ஹிரித்திக்குக்கு, அனைவரும் எழுந்து நின்னு கைதட்டினோம். மீண்டும் அதே பாடலைப் பாடச் சொல்லி எல்லோரும் கேட்க, ஹிரித்திக் பாடினான். அவனோட திறமையை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுபோகணும்னு எனக்குத் தோணுச்சு. எல்லோருக்குள்ளும் ஏதாச்சும் ஒரு திறமை இருக்கும். அதைச் சரியா கண்டுபிடிச்சா, எல்லோருமே அடுத்தகட்டத்துக்குப் போக முடியும். ஹிரித்திக் பாடும் திறமையை சும்மா கைதட்டி ரசிச்சு, பாராட்டுவதோடு நிறுத்திக்க நான் விரும்பலை. அவனோட வளர்ச்சிக்குச் சின்ன ஊக்கம் கொடுக்க நினைச்சேன். ஹிரித்திக் பெரிய அளவில் புகழ் பெறணும்னு நினைச்சேன். அப்போதான் `சூப்பர் சிங்கர் ஜூனியர்' நிகழ்ச்சியைத் தொடங்கியிருந்தாங்க. அதில் அவனைக் கலந்துக்கச் சொல்லி அவனோட பெற்றோர்கிட்ட வலியுறுத்தினேன். ஸ்கூல் நிகழ்ச்சியில ஹிரித்திக் பாடின பாடலை வீடியோ எடுத்துவெச்சிருந்தேன். அதை, `சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி டீமுக்கு அனுப்பினேன். ஆடிஷன்ல அவன் கலந்துகிட்டு, எல்லாக் கட்டத்துலயும் தேர்வாகிப் போட்டியாளரா அந்நிகழ்ச்சிக்குள் போனான்.

குறிப்பா, ஹிரித்திக் முறைப்படி இசை கத்துக்கிட்டு இருந்ததால, அவனால அந்நிகழ்ச்சியில தொடக்கம் முதலே நல்லா பாட முடிஞ்சது. ஹிரித்திக்கின் பெற்றோர், ஸ்கூல் நிர்வாகம், ஆசிரியர்கள், நண்பர்கள் என அனைவரும் ரொம்பவே அவனை ஊக்குவிச்சாங்க. அதனால அவன் எந்தப் பயமும் இல்லாமல் பாடினான். தான் போட்டியாளரா இருக்கிற மேடையின் புகழை, ரித்விக் சரியா புரிஞ்சுகிட்டான். ஒவ்வொரு ரவுண்டிலும் சூப்பரா பாடினான். அதைப் பத்தியெல்லாம் தொடர்ந்து ஹிரித்திக்கும் அவன் பெற்றோரும் எனக்கு அப்டேட் பண்ணிட்டே இருந்தாங்க" என்கிறார் மகிழ்ச்சியுடன்.

``ஹிரித்திக்கும் அவன் பெற்றோரும் பலமுறை என்னை வலியுறுத்தியும், பல மாதங்கள் நடந்த அந்நிகழ்ச்சியில் நான் கலந்துக்கலை. அவன் இறுதிப்போட்டிக்குக் கட்டாயம் வருவான். வெற்றியாளரா ஆவான்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. அதனால, இறுதிப்போட்டிக்கு மட்டும்தான் நான் போகணும்னு உறுதியா இருந்தேன். அப்படித்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப்போட்டியில கலந்துகிட்டேன். அதில், ரொம்பக் கஷ்டமான பாடல்களைத் தேர்வு பண்ணி அவன் நல்லா பாடினான். வெற்றியாளரா வாகை சூடினான். அப்போ எனக்கு அளவில்லா சந்தோஷம். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. ஆனா, நான் பெத்த குழந்தை வெற்றியாளரா ஆனதுபோல எனக்குள் பெருமித உணர்வு. ஹிரித்திக் வெற்றிக்கோப்பை வாங்குறப்போ, மேடைக்குப் போனேன். என்னையும் சில வார்த்தைகள் பேசச் சொன்னாங்க. அப்போதான், அவன் போட்டியாளரா கலந்துகிட்ட விதம் பற்றிச் சொன்னேன்.

என்னுடைய நல்ல முயற்சிக்கு வெற்றி கிடைச்சதில் பெருமிதம். தொடர்ந்து இதுபோல என்னால முடிஞ்சவரை, எனக்குத் தெரிஞ்சவங்களின் திறமையை அடுத்தகட்டத்துக்குப் போக உதவுவேன். மற்றவங்களும் அப்படிச் செய்தால், பெரிய மாற்றம் ஏற்படும். ஹிரித்திக்குக்கு ஐஸ்க்ரீம் ரொம்பப் பிடிக்கும். ஆனா, குரல்வளத்தில் பாதிப்பு ஏற்படக் கூடாதுனு எட்டு மாதமா அவன் ஐஸ்க்ரீம் சாப்பிடலை. அதனால சீக்கிரமே அவனுக்கு பார்ட்டி கொடுக்கணும். ஐஸ்க்ரீம் வாங்கித் தரணும். அடுத்து அவன் பின்னணிப் பாடகராகவும் ஜொலிக்கணும்னு ஆசைப்படறேன்" என்று புன்னகைக்கிறார் அம்மு.

கு.ஆனந்தராஜ்