Published:Updated:

"அவங்க ரியல் ஜோடியானா சந்தோஷம்தான்!" - 'திருமணம்' இயக்குநர் அழகர்

அய்யனார் ராஜன்
வே.கிருஷ்ணவேணி

'சரவணன் மீனாட்சி' தொடரை இயக்கியவரும் தற்போது 'திருமணம்' தொடரை இயக்குபவருமான அழகர் பேட்டி

சித்து -ஷ்ரேயா
சித்து -ஷ்ரேயா

விஜய் டிவி-யில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' முதல் சீஸனில் ஜோடியாக நடித்தவர்கள், 'மிர்ச்சி' செந்தில் - ஶ்ரீஜா. இவர்கள் இருவருக்கிடையிலான ரொமான்ஸ் காட்சிகளுக்காகவே இந்த சீரியல் வெகுவாக ரசிக்கப்பட்டது. 'சீரியலில் இருவரும் திருமணம் செய்வார்களா?' என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்க அதிகரிக்க, ஒருகட்டத்தில் நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இணைந்தால் நன்றாக இருக்கும்' எனப் பேசத் தொடங்கினார்கள் சீரியல் ரசிகர்கள். அவர்களின் அந்த ஆசையும் ஒருநாள் நிறைவேறியது. ஒரு நல்ல நாளில் திருப்பதி கோயிலில் செந்தில் - ஶ்ரீஜா திருமணம் நடந்தது.

அழகர்
அழகர்

அன்று 'சரவணன் மீனாட்சி' தொடரை இயக்கியவர், தற்போது 'திருமணம்' தொடரை இயக்கிவரும் அழகர். " 'சரவணன் மீனாட்சி' சீரியலுக்குப் பிறகு இப்போதான் மறுபடியும் என்ஜாய் பண்ணி வொர்க் பண்றேன்" எனச் சொல்பவர், "ஸ்ரேயா - சித்து இடையிலான ரொமான்ஸ் காட்சிகளை ஷூட் பண்றப்போ, அனுபவம் வேற லெவல்ல இருக்கு" என்றும் குறிப்பிடுகிறார். அழகரின் இந்த ஸ்டேட்மென்டைப் பார்த்ததும், 'அப்படின்னா, எப்போய்யா இந்த ஜோடி கல்யாணம் பண்ணிக்கப்போறாங்க' என சீரியல் ரசிகர்கள் கேட்கத் தொடங்கியிருக்கும் சூழலில், அழகரிடம் பேசினோம்.

''ஒவ்வொரு காலகட்டத்திலும் காதல் மாறாமதானேங்க இருக்கு. அப்படிப்பட்ட காதலை மக்களுக்குப் பிடிக்கிற மாதிரி கொடுக்கணும், அவ்வளவுதான். அதுலதான் இருக்கு சீரியலின் வெற்றி. வேற ஒண்ணுமில்ல. 'வயசாகிடுச்சு'னு நினைக்காம, ரிவர்ஸ்ல போகணும். இந்தக் காலத்து இளைஞர்களுக்கு என்ன பிடிக்கும்கிற பல்ஸ் தெரிஞ்சுக்கணும். 'சரவணன் மீனாட்சி' பண்ணி 6 வருடம் ஆகிடுச்சு. 'திருமணம்' அந்த சீரியலைவிட நல்லா இருக்கிறதா நண்பர்கள் சொல்றாங்க. கேட்கிறப்போ சந்தோஷமா இருக்கு" என்றவரிடம், "நீங்கள் இயக்கிய 'சரவணன் மீனாட்சி' ஜோடி, ரியல் ஜோடி ஆகிட்டாங்க. 'திருமணம்' ஜோடிக்கிடையிலும் 'செம'யான கெமிஸ்ட்ரி இருப்பதாக ரசிகர்கள் கமென்ட் செய்கிறார்களே?'' என்றோம்.

சித்து -ஷ்ரேயா
சித்து -ஷ்ரேயா

"நான் இந்த சீரியலின் இயக்குநர்; அவ்வளவுதான். சீரியல் ஜோடியான அவங்க ரியல் ஜோடியா மாறுவதும் மாறாததும் அவங்க கையிலதான் இருக்கு. நான் இயக்கிய முதல் சீரியல்ல அப்படி நடந்ததால, ரசிகர்கள் இப்படி எதிர்பார்க்கலாம். ஆனா, ஸ்ரேயா - சித்து விஷயத்துல அவங்க இணையிற வாய்ப்பு இருக்குன்னு சொல்ல மாட்டேன்; இல்லைன்னும் சொல்ல மாட்டேன். அதேநேரம், ஒரு ஜோடி கல்யாணம் பண்ணணும்னு நினைச்சுட்டு நாங்க சீன்ஸ் எடுக்கிறது இல்ல!" என்றவர், சித்து - ஷ்ரேயா இருவர் குறித்தும் இப்படிச் சொல்கிறார்...

"ரெண்டுபேருமே ஒரு சீன் எப்படி வரணும்னு நினைக்கிறோமோ, அதைச் சரியா பண்ணிக் கொடுக்கிறாங்க. சொல்லப்போனா, சமயங்கள்ல நாம எதிர்பார்க்கிறதைவிடவும் நல்லா பண்றாங்க. இந்த ஜோடி ரியல் ஜோடி மாதிரி இருப்பதா ரசிகர்கள் சொல்றாங்க. அப்படி ஒரு பேச்சு வருதுன்னாலே நாங்க ஜெயிச்சிட்டோம்னுதான் அர்த்தம்."

"ஒரு கதையில பாதியில உள்ளே வந்து இயக்குவது சவாலாக இல்லையா?"

"சீரியலைப் பொறுத்தவரை, போட்டிகள் இருக்கும். ரேட்டிங் வாங்க பார்வையாளர்கள் முக்கியம். மானிட்டர் முன்னாடி உட்காரும்போது, நான்தான் அந்த சீரியலுக்கு முதல் ரசிகனாக இருப்பேன். 'ஒரு ரசிகன் சீரியலை இயக்கினா எப்படி இருக்கும்'னுதான் யோசிப்பேன். இதுக்கு முன்னாடி இந்த சீரியலை இயக்கிய ஜவஹர், என் நண்பர்தான். அவருக்குப் பட வேலைகள் இருந்ததாலதான் நான் இதை இயக்குகிறேன்"

அய்யனார் ராஜன்

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.