நாங்க மிமிக்ரி பாய்ஸ்! | மிமிக்ரி, டிவி, tv

வெளியிடப்பட்ட நேரம்: 11:42 (20/02/2014)

கடைசி தொடர்பு:11:42 (20/02/2014)

நாங்க மிமிக்ரி பாய்ஸ்!

விஜய் டி.வி-யின் 'கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர் திவாகர். 99-ல் ஒளிபரப்பான 'எல்லாமே கலாட்டா’வின் மூலமாக சின்னத்திரைக்கு வந்தவர் ஜெயசந்திரன். குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கவைக்கும் இருவரையும் டைம்பாஸுக்காக  சந்தித்தோம்.

''2003-ல் நியூ காலேஜில் மிமிக்ரிதான் என் அடையாளம். பின்னர் கலக்கப்போவது யாருவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போ வரைக்கும் ஜோராப் போய்க்கிட்டு இருக்கு.'' என்றார் திவாகர்.

'இருப்பா, இந்த நேரத்தில் உன்னைப் பற்றி ஒரு உண்மையைச் சொல்லணும்'  என்று இடைமறித்த ஜெயசந்திரன், ''முக்கியமான மேட்டர், திவாகருக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. இதை தயவுசெய்து டைம்பாஸில் போடுங்க. பேஸ்புக்ல இன்னும் சிங்கிள்னே போட்டிருக்காரு'' என்று கலாய்த்தார்.

''ஒரு நெருங்கிய நண்பர் கிளப்ல ஸ்டாண்ட் அப் காமெடி பண்ணக் கூப்பிட்டார். லயன்ஸ் கிளப் மாதிரி ஃபேமிலியா இருப்பாங்கனு நெனச்சுப் போனேன். அங்கே போய் பார்த்தா ஓப்பன் கிரவுண்டுல பெரிய டாஸ்மாக் பாரே நடந்துக்கிட்டு இருக்கு. அதுவும் ஏற்கெனவே எல்லோரும் ஃபுல் டைட் வேற. என்னை அழைச்சிட்டுப் போனவரும் போய் ஜோதியில் ஐக்கியம் ஆகிட்டாரு.  ஊறுகாயா நான் சிக்கிட்டேன். ஒவ்வொருத்தரும் ஒரு வாய்ஸை மிமிக்ரி செய்யச் சொல்லி ஆர்டர் வேற. தல மாதிரி பேசச் சொல்ல அவரைப் போல பேசினா, இது அவரு மாதிரி இல்லையேன்னு 'எங்கே இன்னொரு தடவை சொல்லு’னு திருப்பித் திருப்பி 50 தடவை பேசச் சொல்லி  சிதைச்சுட்டாங்க. இதில் எம்.ஜிஆர் வாய்ஸ் பேசினா கலைஞர் வாய்ஸ் பேசுனு பாலிடிக்ஸ் பஞ்சாயத்தும் சேர்ந்துக்கிச்சு. ஒரு புண்ணியவான் வந்து ராகுல் மாதிரி பேசுனு சொல்ல, எனக்கு இந்தி தெரியாதுனு சொன்னதுக்கு, 'ராகுல் காந்தி தமிழ்ல பேசினா எப்படிப் பேசுவாரோ அப்படிப் பேசுங்க’ன்னாரு. இதாவது பரவாயில்லை. கடைசியில் மத்திய அமைச்சர் நாரயணசாமி மாதிரி பேசுனு சொல்லவும் எனக்கு சரக்கடிக்காமலே மயக்கம் வந்திருச்சு'' என்றார் திவாகர்.

''5-வது படிக்கும்போதே மிமிக்ரி ஆரம்பிச்சிட்டேன். ராக்கெட் ராமநாதன் நிகழ்ச்சிக்கு என் மாமா ஒருத்தர் அழைச்சிட்டுப் போயிருந்தார். அதைப் பார்த்திட்டு வந்து ஒரு வாரம் பார்ப்பவர்களிடமெல்லாம் செய்து காட்டினேன்.  8-ம் வகுப்பில் வீட்டுப் பாடம் செய்யவில்லை. கிளாஸ் வாசலில் முட்டி போடச் சொன்னார் வாத்தியார். கொஞ்ச நேரமாகவும் வலி தாங்க முடியவில்லை. வலியில் துடிப்பதை வாத்தியார் பார்த்து இனிமே இப்படி செய்யக் கூடாதுனு சொல்லி மன்னிச்சாரு. வகுப்புக்குள் நுழையும்போது ஒட்டு மொத்த வகுப்பும் எழுந்து 'சார் இவன் பயங்கரமா நடிப்பான் சார்’னு சொல்ல மறுபடி முட்டி போடச் சொல்லிட்டார். அப்புறம் என்னவாகும்? திரும்பவும் முதல்ல இருந்துதான்! அவ்வ்வ்வ்... ஆனா அன்னைக்கி ஆண்டு விழா நாடகத்தில் கதாநாயகன் வாய்ப்பு வழங்கிட்டார். எப்படி இவனை செலக்ட் செஞ்சீங்கனு ஹெட்மாஸ்டர் கேட்டார். 'வலிக்கிற மாதிரி நல்லா நடிக்கிறான்’னு சொன்னார். இது எப்படி இருக்கு?'' என்கிறார் ஜெயசந்திரன்.

சூப்பர் பாய்ஸ்!

- செந்தில் குமார்,
படம்: ப.சரவணகுமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close