கொஞ்சம் ஆங்கிலம்... கொஞ்சம் வெட்கம்! | சின்னத்திரை, ஆர்த்தி, ஜெனிப்ரியா, சென்னை ப்ரேவ் பவுன்சர்ஸ், chinnathirai, tv, arthi, jenipriya, chennai brave bouncers

வெளியிடப்பட்ட நேரம்: 17:16 (11/08/2014)

கடைசி தொடர்பு:17:16 (11/08/2014)

கொஞ்சம் ஆங்கிலம்... கொஞ்சம் வெட்கம்!

'மக்கள் வணக்கம்’ சொல்லிக்கொண்டிருந்த ஆர்த்தி, இப்போது 'சூரிய வணக்கம்’ சொல்லிக்கொண்டிருக்கிறார். ''பிரச்னைலாம் ஒண்ணுமில்லீங்க. எட்டு வருஷமா ஒரே சேனல்ல இருந்துட்டேன்ல... அதான்! நடுவில் லா எக்ஸாம்ஸுக்காக மூணு மாசம் பிரேக் எடுத்தேன். அரியர்ஸ் இல்லாம பாஸ். அந்த 'ஸ்டடி லீவ்’ கேப்ல நிறைய சினிமா, சீரியல் சான்ஸ்லாம் வந்தது. ஆனா, காம்பியரிங் மட்டும் போதும்னு சன் டி.வி-ல சேர்ந்துட்டேன். புடைவை, தமிழ்னு மட்டுமே இருந்துட்டு இப்போ சுடிதார், கலோக்கியல் தமிழ்னு இருக்கிறது கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு. மாதவரத்துல இப்போதான் வீடு வாங்கினேன். அடுத்து கல்யாணம்தான். வீட்ல பையன் பார்த்துட்டு இருக்காங்க!'' என்று அடியாத்தீ... வெட்கப்படுகிறார் ஆர்த்தி.

'சூப்பர்’ சொன்னார் சந்தானம்!

இசையருவி ஜெனிப்ரியாவுக்கு என்னாச்சு? ஆளையே காணோம்!? ''சினிமாவில் பிஸி பிஸி!'' என்று சிரிக்கிறார் ஜெனி. ''சிம்புவோட 'வாலு’ படத்துல சந்தானத்துக்கு நான்தான் ஜோடி. 'சின்ன ஆளு, பெரிய ஆளுனுலாம் கிடையாது. யாரா இருந்தாலும் நம்ம பெஸ்ட் கொடுத்தா சினிமாவுல ஈஸியா சாதிக்கலாம்’னு அவர் சொல்வார். அதுதான் இப்போ என் சினிமா பாலிசி. ஒரு சீன்ல நான் டயலாக் பேச, அவர் ரியாக்ஷன் மட்டும் தரணும். நான் படபடனு வசனம் பேசினதும் அவரே 'சூப்பர்’னு பாராட்டினார். ரொம்ப ஹேப்பி ஹேப்பியா இருந்தது. அப்புறம் ஒரு ஷோவுக்காக சிம்ரனைச் சந்திச்சேன். ரெண்டு மணி நேரம் பேசிட்டு இருந்தாங்க. கடைசியில என்ன ஆச்சு தெரியுமா..? சிம்ரன் தயாரிக்கிற படத்துல நான் நடிக்கப்போறேன்!'' கண் சிமிட்டிச் சிரிக்கிறார் ஜெனி.

ஆர்யாவின் ப்ளஸ் என்ன?

விஜய் அவார்ட்ஸ் திருவிழாவைத் தொடர்ந்து அடுத்த அதிரடிக்கு விஜய் டி.வி தயார். தென்னிந்திய சினிமாக்களுக்கான ஃபிலிம்ஃபேர் அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமை விஜய் வசம். செம நச், சூப்பர் ரிச் என, கடந்த வாரம் சென்னையில் அரங்கேறியது விழா. சின்சியர் பெருமிதமும் சென்ட்டிமென்ட் உருக்கமுமாக நட்சத்திரங்கள் பங்கு எடுக்க, மொத்த அரங்கத்தையும் ஒற்றை ஆளாகக் கலகலப்பு ஆக்கினார் ஆர்யா. நயன்தாராவுக்குப் பின்னால், நஸ்ரியாவுக்கு அருகில் அமர்ந்துகொண்டு ஜாலி கமென்ட் அடித்து இருவரையும் அடிக்கடி கூச்சத்துடன் சிரிக்கவைத்துக்கொண்டே இருந்தார். 'ராஜா ராணி’ படத்துக்காக 'சிறந்த நடிகை’ விருது பெற்ற நயன்தாரா மேடையில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர்... என ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டு நன்றி சொல்லிக்கொண்டிருந்தபோது, கீழே அமர்ந்திருந்த ஆர்யா 'தன் பெயரைச் சொல்லுமாறு’ கைகளை ஆட்டி ஆட்டி சிக்னல் கொடுத்துக்கொண்டே இருந்தார். அதைக் கண்டும் காணாததுபோல 'நடித்துக்’ கொண்டிருந்த நயன், ஒருகட்டத்தில் ஆர்யாவின் பதற்ற ரியாக்ஷன்கள் தாங்காமல், 'படத்தின் ராஜாவான ஆர்யாவுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்’ என்று சொல்ல... மொத்த அரங்கமும் அதிர்ந்தது. 'ஆர்யாவுக்கு அவார்டு எதுவும் கொடுக்கலை. யாருக்கும் அவார்டு கொடுக்கவும் அவரைக் கூப்பிடலை. ஆனாலும், மனுஷன் வந்து உக்காந்து கலகலனு ஜாலி பண்றார் பாரு. ஈகோ இல்லாத இந்தக் குணம்தான் ஆர்யா ப்ளஸ்!’ - சீனியர் ஹீரோ ஒருவர் விழாவுக்குப் பிறகான பார்ட்டியில் சொன்னது இது!

துணிச்சல் துள்ளல்!

சினிமா நட்சத்திரங்கள் மோதும் சி.சி.எல் நட்சத்திரக் கிரிக்கெட்போல சின்னத்திரை நட்சத்திரங்களும் விளையாடவிருக்கிறார்கள். சென்னை அணியின் பெயர் 'சென்னை ப்ரேவ் பவுன்சர்ஸ்’. 16 உறுப்பினர்களை உள்ளடக்கிய அணியின் கேப்டன் பரத். ''ரெண்டு மாசமா கடுமையா பிராக்டீஸ் ஓடிட்டு இருக்கு. ஒவ்வொரு ஊர்லயும் நடக்கும் கிரிக்கெட் டோர்னமென்ட் ஃபைனல்ல எங்க டீம் களம் இறங்கும். அதுபோக துபாய் போன்ற வெளிநாடுகள்லயும் விளையாடுற ஐடியா இருக்கு. கேரளா, ஆந்திரா, கர்நாடகா சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு ஏற்கெனவே டீம் இருக்கு. நாங்க இப்போதான் ஆரம்பிச்சிருக்கோம். லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா இருப்போம்!'' -உற்சாகமாகச் சொல்கிறார் டீம் ஒருங்கிணைப்பாளர் 'மொக்கை’ மகி.  

நாங்க சொல்லலை... நீங்க கேட்கலை!

சின்னத்திரையின் பாட்ஷா அவர். தொழில் போட்டி காரணமாக ஏதோ பிரச்னை போல... கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் காசு வெட்டிப் போட்டு வந்திருக்கிறாராம். ஆத்தாடி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close