‘காதல்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு?’ | ‘காதல்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு?’ ,நீலிமா ராணி, லட்சுமி ராமகிருஷ்ணன், நாகா, நிகில் மேத்யூ, அஜீஷ், கேப்ரியலா, ஜாக்லின்

வெளியிடப்பட்ட நேரம்: 14:58 (30/10/2014)

கடைசி தொடர்பு:14:58 (30/10/2014)

‘காதல்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு?’

நீலிமா ராணியின் நியூ அவதார்... எழுத்தாளர்! ''என் அப்பா விஷ்வமோகன் தெலுங்கில் 300-க்கும் அதிகமான நாவல்கள் எழுதியிருக்கார். அப்பாவைப் பத்தி தெரிஞ்சவங்க, என்னை எழுதக் கேட்டப்ப, உடனே சம்மதிச்சேன்'' என்ற நீலிமாவுக்கு, சினிமா ஹீரோயின் ஆவதே கனவு. '' 'பளிச்னு சினிமாவில் வாய்ப்பு வர்ற வரைக்கும் ஏன் சும்மா இருக்கணும்?’னு டி.வி தொடர்களில் நடிச்சிட்டு இருக்கேன். இப்ப சந்தானத்தோடு 'வாலிப ராஜா' படத்தில் நடிச்சிருக்கேன். விசாகா, சேதுனு 'கண்ணா லட்டு தின்ன ஆசையா!’ டீம்தான் இதிலும். அதனால் ஸ்பாட்ல தினம் ஒருத்தரையொருத்தர் கலாய்ச்சு கிண்டலடிச்சுட்டு இருப்போம். ஜாலியான சினிமாவில் நடிக்கிறது அதைவிட ஜாலியா இருக்கு!'' என்கிறார்.

சின்னத்திரையில் த்ரில் திகில் அத்தியாயங்கள் படைத்த நாகா, 'ஆனந்தபுரத்து வீடு' மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். இப்போது த்ரில்லர் கதை ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறார். மீண்டும் டி.வி பக்கம் வரும் ஐடியா இல்லையாம். ''சினிமா வேலைகளே நேரத்தை எடுத்துக்குது. இதில் மெகா சீரியல் பத்தி யோசிக்க  முடியலை. சும்மா இருக்கிற நேரத்தில்கூட எந்த சீரியலும் பார்க்கிறது இல்லை!'' என்கிறார். 'சீரியல் பார்க்கவே கூடாத அளவுக்கு அப்படி என்ன விரதம்?’ எனக் கேட்டால், ''ஒருமுறை என் அத்தைங்க ரெண்டு பேரு சீரியல் சம்பந்தமா சீரியஸா ஏதோ பேசிட்டு இருந்தாங்க. காது கொடுத்துக் கேட்டா, 'அவனோட பையனைக் கடத்திட்டுப் போனாங்கள்ல... அப்புறம் அவன் பொண்டாட்டிகூட அவனைவிட்டுட்டு ஓடிப்போயிட்டாளே'னு சொல்லிட்டு, டக்குன்னு 'இல்லல்ல... பொண்டாட்டி ஓடிப்போனது வேற நாடகம்'னு பேசிட்டு இருந்தாங்க. இப்படி எந்தக் குழப்பமும் இல்லாம நிம்மதியா இருக்கலாம்னுதான் சீரியல், ஷோ எதுவும் பார்க்கிறது இல்லை!'' என்கிறார் சிரித்துக்கொண்டே.

'சூப்பர் சிங்கர்’, 'ஜோடி நம்பர்  1’ போட்டிகளின் வெவ்வேறு சீசன்களில் ஜொலித்த நிகில் மேத்யூ, அஜீஷ், கேப்ரியலா, ஜாக்லின்...  நால்வரும் இப்போ நண்பர்கள்.  இவர்களில் நிகில் மேத்யூ,  பெங்களூரு பார்ட்டி. மற்ற மூவரும்  கேரளவாசிகள். டி.வி நிகழ்ச்சிகளுக்காக சென்னையில் தங்கியபோது ஃப்ரெண்ட்ஸ் ஆனவர்கள், இப்போது கிட்டத்தட்ட ஒரே குடும்பம் ஆகிவிட்டார்கள். '3' படத்தில் ஸ்ருதியின் சுட்டித் தங்கையாக நடித்த கேப்ரியலா, இப்போது ஹீரோயின் மோல்டில் ஜொலிக்கிறார். ''நிறைய சினிமா வாய்ப்புகள் வருது. டென்த் முடிச்சுட்டு பார்க்கலாம்'' என்கிறார். '''சூப்பர் சிங்கர்’ல ஜெயிச்சதால் 'பீமா', 'என்றென்றும்' படங்களில்  பாடினேன். தெலுங்கிலும் பாட வாய்ப்பு கிடைச்சிருக்கு!'' என்றார் நிகில் மேத்யூ. 'டெய்சி’ எனும் படத்தில் நடித்திருக்கும் ஜாக்லின், அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறார். 'கோவா’ படத்தின் 'இதுவரை இல்லாத உணர்விது...' பாடலில் பளிச் முத்திரை பதித்த அஜீஷ் மலையாளத்திலும் பாடியிருக்கிறார். சின்னத்திரை நண்பர்கள் சில்வர் ஸ்க்ரீனின் வெளிச்சத்துக்காக வெயிட்டிங்!

ம்மாடி.... 780 அத்தியாயங்களைக் கடந்துவிட்டது 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி! ''ஆரம்பத்தில் 'இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி பண்ணப் போறேன்’னு சொன்னப்ப வீட்ல, சினிமாவில் எல்லாரும் 'ஏன் இந்த வேண்டாத வேலை?’னுதான் கேட்டாங்க. ஆனா, பெண்களுக்கு என்னால் முடிஞ்ச ஒரு சேவைனு நினைச்சுதான் வாய்ப்பை ஏத்துக்கிட்டேன். ஒரு தடவை குடிசைப் பகுதிகளுக்குப் போயிருந்தப்ப அங்கே இருந்த பெண்கள் எல்லாம் என்னைச் சூழ்ந்துக்கிட்டாங்க. 'உங்க நிகழ்ச்சியைத் தவறாமப் பார்க்கிறோம். நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிறோம்’னு சொன்னாங்க. கோவை போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்குப் போயிருந்தப்ப ஒரு போலீஸ், 'என் சம்சாரம் சண்டை போட்டா, 'லட்சுமி மேடம்கிட்ட அழைச்சிட்டுப் போயிடுவேன்’னு சொல்லித்தான் சமாளிக்கிறேன்’னு சொல்லிச் சிரிச்சார்'' என்று பூரிப்பாகச் சிரிக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். 'இத்தனை அத்தியாயங்களின்போது ஒரு மிரட்டல்கூட வந்ததில்லையா?’ என்று கேட்டபோது கலகலவெனச் சிரித்தார். ''நிகழ்ச்சிக்கு ஒரு காதல் ஜோடி வந்திருந்தாங்க. 'வீட்ல எங்க காதலை எதிர்க்கிறாங்க. எங்களைச் சேர்த்துவைங்க’னு சொன்னாங்க. பையன், கால் டாக்ஸி டிரைவர்; பொண்ணு, மெடிக்கல் படிக்கிறா. பையன்கிட்ட பேசிப் பேசி விஷயம் கறந்தா, ரெண்டு வருஷமா அந்தப் பொண்ணோட நகைகளைக் கொஞ்சம் கொஞ்சமா வாங்கிட்டான். அவளுக்குத் தெரியாம அவ ஏ.டி.எம் கார்டில் இருந்து பணமும் எடுத்திருக்கான். அவன் சுயரூபம் தெரிஞ்சதும், 'நான் என் அப்பாவோடு போறேன்’னு சொல்லிட்டுப் போயிட்டா அந்தப் பொண்ணு. பையனுக்கு வந்துச்சே கோபமும் ஆத்திரமும்! 'காதல¢னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு? எங்களைப் பிரிச்சுட்டீங்க... உங்களைக் கொன்னுடுவேன்'னு மிரட்டினான். அதையும் சமாளிச்சோம்!''


- ஜியா உல் ஹக், படம்: ஜெ.வேங்கடராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close