‘சிங்கப்பூர்’ தீபனின் சோக ஃபிளாஷ் பேக்! | Singapore Deepan's Flash Back!

வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (15/06/2015)

கடைசி தொடர்பு:17:50 (16/06/2015)

‘சிங்கப்பூர்’ தீபனின் சோக ஃபிளாஷ் பேக்!

‘‘நான் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட். எனக்கு கிட்டத்தட்ட 50 குரல்களில் பேசத் தெரியும். ஏழு வருஷத்துக்கு முன்னாடி, விஜய் டிவி ‘கலக்கப்போவது யாரு?’ நிகழ்ச்சி மூலமா தமிழ்நாட்டுக்கு என் முகம் பரவலா தெரிய ஆரம்பிக்க, ஜோரா தொடங்கிச்சு என் கெரியர்.

ஆனா கொஞ்ச நாள்லயே, ‘நீங்க இனிமே பேசக்கூடாது!’னு டாக்டர் அட்வைஸ் பண்ற அளவுக்கு என் தொண்டை பாதிக்கப்பட்டிருச்சு!’’ & ‘சிங்கப்பூர்’ தீபனிடம் கொஞ்சம் சாவகாசமாகப் பேசினோம். ‘‘நான் பக்கா சென்னைப் பையன். பிடிச்சதும், தெரிஞ்சதும் மிமிக்ரி. ஸ்கூல் படிப்பைத் தாண்டல.

என் அக்கா, தங்கையை கல்யாணம் செய்துகொடுக்க வேண்டிய பொறுப்புல, எங்கப்பாவுக்கு தோள் கொடுக்க, பேங்க்ல கிடைச்ச ஒரு வேலையைப் பார்த்துட்டு இருந்தேன். காலையில 6 மணிக்குத் தொடங்குற என் வேலை, காலையில 10 மணிக்கெல்லாம் முடிஞ்சிடும். மிச்ச நேரங்கள்ல முழுக்க முழுக்க வாய்ஸ் ஆர்டிஸ்ட் ஆவதற்கான பயிற்சிதான். வாய்ப்புக்காக அலைஞ்சபோ, பார்த்துட்டு இருந்த வேலையையும் விட வேண்டியா போச்சு. ஒரு கலைஞனை இந்த உலகுக்குக் காட்ட எவ்வளவு கஷ்டப்படணும்ங்கிறதை அனுபவப்பூர்வமா உணர்ந்தேன். ஆனாலும் தளரல.

விஜய் டி.வி ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி வாய்ப்பு, என்னை எல்லாருக்கும் தெரிஞ்ச முகமா மாற்றிச்சு. மிமிக்ரி பயிற்சியில சமயங்களில் தொண்டையை வருத்திப் பேச வேண்டியதிருக்கும். ஒருநாள் நிகழ்ச்சி முடிச்சப்போ, வாயில் இருந்து ரத்தம் வர ஆரம்பிச்சிருச்சு. அடிச்சிப் பிடிச்சுப் டாக்டரைப் போய் பார்த்தா, ‘உங்களுக்கு தொண்டையில் காயம் ஏற்பட்டு, பேச்சையே பாதிக்குற அளவுக்கு பரவியிருக்கு. நீங்க ரெண்டு மாசம் பேசாம ரெஸ்ட் எடுக்கணும்!’னு சொல்லிட்டார்.

பேச்சுதான் நம்ம பலம்னு நினைச்சோம்... இப்போ பேசவே முடியாத சூழ்நிலை வந்திருச்சேனு நொந்துக்கிட்டே, சில நாட்கள் ரெஸ்ட் எடுக்கலாம்னு நினச்சப்போதான் வந்துச்சு, சிங்கப்பூர்ல ஒரு நிகழ்ச்சி செய்யும் வாய்ப்பு. வெளிநாட்டு மேடையை விட மனசில்ல. டாக்டர்கிட்ட மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிட்டுட்டு, நிகழ்ச்சியை ஜோரா நடத்திட்டு வந்துட்டேன். தொண்டைப் புண் அதிகமாயிருச்சு. மறுபடியும் டாக்டர், மாத்திரை, கொஞ்சம் ஓய்வுனு ஓடிட்டே இருக்கேன்.

இன்னைக்கு வரைக்கும் இதுதான் என் நிலை. ஆனா, இப்போ நான் பேசுற ‘கரகர’ குரலே என்னோட அடையாளமா மாறிப்போச்சு. அது சரி, ‘சிங்கப்பூர்’ தீபன்னு ஏன்னா பேர் வந்துச்சுனு கேட்குறீங்களா?! உண்மையில எனக்கும் சிங்கப்பூருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைங்க. ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்சிக்காக, கொஞ்சம் ‘கேட்சி’யா இருக்கட்டுமே, எனக்கு நானே வெச்சுக்கிட்ட புனைப்பெயர் அது! கொஞ்சம் காண்டாகுறீங்களோ? ஃப்ரீயா விடுங்க... என்னோட திரை வாழ்க்கைப் பயணத்தைப் பத்தி கொஞ்சம் பேசலாமா? ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினரா வந்திருந்த இயக்குனர் சுந்தர். சி, ‘ஆம்பள’ படத்துல எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்தார்.

தொடர்ந்து, ‘காக்கிச்சட்டை’ படத்துல நடிக்க டைரக்டர் கூப்பிட்டதோட, தனிப்பட்ட முறையில சிவகார்த்திகேயனும் எங்கிட்ட பேசினார். அவரோட பண்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். விரைவில் ரிலீஸாகப் போற ‘ரீங்காரம்’ படம், சுந்தர் சி தயாரிப்புல ஒரு படம்னு, வெள்ளித்திரை வாய்ப்புகளை சந்தோஷமா பண்ணிட்டு இருக்கேன். என் குரல் சேதமடைஞ்சது பத்தின கவலை இப்போ குறைஞ்சிடுச்சு. நான் ஹெல்மெட் போட்டுக்கிட்டு பேசினாக்கூட, ‘ஏய்... ‘சிங்கப்பூர்’ தீபன்டா!’னு மக்கள் என்னை அடையாளம் கண்டுபிடிச்சிடுறாங்க. எத்தனையோ வாய்ஸில் பேசியிருந்தாலும், என்னோட வாய்ஸே இன்னைக்கு எனக்கு அடையாளமாகிப் போனதில் நெகிழ்ச்சியும், சந்தோஷமுமா இருக்கு!’’ & கரகர குரலில், படபடவென முடித்தார் ‘சிங்கப்பூர்’ தீபன்!

-வே.கிருஷ்ணவேணி மாரியப்பன்-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close