அப்படி என்ன பேசினார் சிந்து...தகாத முறையில் வந்த 2000 போன் கால்கள்!

சிந்து சூர்யகுமார் என்னும் மலையாள டிவி விஜேவுக்கு நிமிடத்திற்கு ஒரு அழைப்பு என 2000க்கும் மேற்பட்ட அழைப்புகள் அவரின் தூக்கத்தைக் கெடுத்துள்ளன. வெள்ளியன்று  மகிஷாசுர ஜெயந்திக்கான சிறப்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார் சிந்து, இந்த நிகழ்ச்சியில் துர்க்கையை தவறாக பேசியதாகக் கூறி அவருக்கு பல இந்து அமைப்புகளிலிருந்து ஆயிரக்கணக்கில் போன் கால்கள் வந்துள்ளன.

சிந்து பிரபல ஏசியாநெட் செய்திச் சேனலின் சீனியர் எடிட்டராகவும் பணிபுரிகிறார். இந்நிலையில் அவருக்கு போன் செய்து, விலைமாது, எனவும், பாலியல் தொழிலாளி எனவும் கொச்சையான வார்த்தைகளைப் பிரயோகித்து திட்டியுள்ளனர். இதனையடுத்து கேரளா போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ள நிலையில் இது சம்மந்தமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனவரும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் என போலீஸார்  தெரிவித்துள்ளனர். மேலும் ஆர்.எஸ்.எஸ்.இந்து அமைப்பினர் மற்றும் ஸ்ரீ ராம சேனா அமைப்பையும் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. எனினும் பாஜக கட்சியைச் சேர்ந்த கேரள சீனியர் உறுப்பினர் கும்மனம் ராஜசேகரன் பாஜக எப்போதும் மீடியாக்களின் சுதந்திரத்தை ஆதரிக்கும் என அறிவித்துள்ளார்.

ஆயினும் அவர் சிந்துவுக்கு வரும் பிரச்னை குறித்து எதுவும் பேசவில்லை எனவும் சொல்லப்படுகிறது. எனினும் ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு பெண் மீடியா நபரை இப்படித் தரக்குறைவாக பேசி இடையூறு கொடுப்பது எப்படி நியாயமாகும் என பலரும் ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் அவருக்கு ஆதரவுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சம்மந்தப்பட்டவர்கள் தரப்பில் அந்த விஜே நிகழ்ச்சியில் வெறும் மகிஷாசுர ஜெயந்தி குறித்த உரையாடல்களில் எந்த இடத்திலும் இந்துக் கடவுள்களை இழிவாகப் பேசவில்லை எனவும் உறுதியாகச் சொல்லப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!