”மனைவியின் இனிஷியலை மகளுக்கு வைத்தேன்” அசத்தப் போவது யாரு வெங்கடேஷ் ஆறுமுகம்

சன் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு பிரபலமாக ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியின் போட்டியாளராக களமிறங்கியவரும் பிரபல விளம்பர நிறுவனம் ரைஸ் அட்வர்டைஸ்மெண்ட்டின் பங்குதாரருமான வெங்கடேஷ் ஆறுமுகம் தனது பெண்ணுக்கு மனைவியின் இனிஷியலை வைத்துள்ளார்...

இதுகுறித்து அவர் கூறுகையில், 1997 இல் என் மகள் பிறந்தாள்.. பிறப்பு சான்றிதழ் வாங்கிட்டு பிறகு பெயர் வைத்ததும் மாற்றிக் கொள்ளலாம் என்றார்கள்.. மகள் பிறந்து 15 தினங்கள் கழித்து தான் பெயர் வைக்க வேண்டும். வீட்டுப் பெரியவர்கள் பேர் வைக்க குறித்து தந்த தேதி ஆகஸ்ட் 15..! மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தான் பெயர் சூட்டினோம்..

ஆகஸ்ட் 15 என்பதால் வந்தே மாதரம் பாடலில் இருந்து மகளுக்கு பிரதிமா என்ற பெயரை தேர்வு செய்திருந்தார் என் மனைவி. நல்லபடியாக அவ்விழா நிறைவடைந்து மீண்டும் சான்றிதழில் பெயர் மாற்றச் சென்றேன். பாப்பா பேரு என்னங்க என கேட்ட பெண் அலுவலர் நான் சொன்னதும் எழுதிக்கொண்டு உங்க பேரு வெங்கடேஷா அப்ப இனிஷியல் V தானே என்றார்.. சட்டென எனக்கு அப்போது மனதில் தோன்றியது இல்ல சார் B.Vன்னு போடுங்க என்றேன்.. சற்று வியப்புடன் அது என்ன சார் B.V. என்றார். என் பேரு வெங்கடேஷ் என் மனைவி பேரு பானுமதி அதான் B.V. அதிலும் அவங்க இனிஷியலுக்கு அப்புறம் என் இனிஷியல் வந்தால் போதும் என்றேன்.. அவரும் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த பிற பெண் ஊழியர்களும் வந்து எனக்குக் கை கொடுத்து வாழ்த்துச் சொல்லி சென்றார்கள். அப்போது நான் செய்தது பிறகு தமிழகத்தில் சட்டமாகவும் போடப்பட்டு விட்டது. குழந்தைகளுக்கு தாயின் இனிஷியலும் போடலாம் என்று..

இன்னிக்கு ஏன் இதை சொல்லுறேன்னா வாய்ப்பு கிடைக்கும் போது அங்கீகாரங்களை பெண்களுக்கு தந்துடணும்.. அதை என்னிக்கு செஞ்சாலும் அது தான் உண்மையான மகளிர் தினமாகும்..! சரி தானுங்களே..

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!