சின்னத்திரை முன்பு போல இல்லை!- 'தெய்வமகள்' பிரகாஷ் ராஜன்!

 
சன் டி.வி தெய்வ மகள் சீரியலில் காயத்ரி கதாபாத்திரத்தின்  கணவராக வருபவர் பிரகாஷ் ராஜன். தற்போது வெள்ளித்திரையிலும் தன்னுடைய நடிப்பைத் தொடர்கிறார். விக்ரம் நயன்தாரா இணைந்து நடித்துவரும் 'இருமுகன்', 'ஜெயம்' ரவி நடித்துவரும் 'போகன்' போன்ற படங்களில் பிஸியாக நடித்துவருகிறார் பிரகாஷ் ராஜன். 
 
''ஆரம்பத்தில் சீரியலில் அதிகப்படியான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அதோடு சீரியல்களில் நடிக்கும்போது குறைவான சம்பளமே கிடைத்தது. ஆனால், கடந்த சில வருடங்களாகத்  தொலைக்காட்சித் துறை மிகவும் மாறியுள்ளது. வாய்ப்புகளும், அங்கீகாரமும் எதிர்பார்த்ததற்கும் மேலேயே கிடைக்கின்றன. இந்த சீரியல்கள் மூலம் பல நடிகர்களுக்கு தங்களுடைய திறமைகளை வெளியில் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் கிடைத்திதுள்ளது என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமே. நடிகர் அதர்வா நடித்த, 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', ஜெயம் ரவி நடித்த, 'தில்லாலங்கடி', ஜீவா நடித்த 'கோ', 'முகமூடி போன்ற படங்களிலும் சின்னச் சின்ன ரோல்களில் நடித்திருந்தேன். எனக்கு இப்படி சின்ன சின்ன ரோல்களே கிடைக்கிறதே என்று நான் சோர்ந்துவிடவில்லை. அந்த கதாபாத்திரங்களை ஏற்று சந்தோஷமாகவே நடித்தேன்.
 
''நடிகனாக வருவதற்கு முன்பு, டிப்ளமோ முடித்துவிட்டு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நான் நடிப்பின் மீது இருந்த ஆசையால் அந்த வேலையை விட்டேன். அதற்குப் பிறகு, 'பூவும் பொட்டும்' எனும் சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சன் டிவி முந்தானை முடிச்சு' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தேன். அதனை அடுத்து 'தெய்வமகள்' சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய மனைவியாக நடித்துவரும் ரேகா குமாருக்கு நான் நன்றி சொல்லியே தீரணும். என்னுடைய நடிப்பை, சின்ன சின்ன டிப்ஸாக சொல்லி மெருகேற்றினார். 'தெய்வமகள்' சீரியல் தவிர்த்து பிறவற்றில் நெகட்டிவ் ரோல்களில்தான் நடித்து வருகிறேன். இதேபோல நிறைய வித்தியாசமான கதாபாத்திரம் சினிமாவில் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கிறேன்' என்று சொல்லி புன்னகைக்கிறார் பிரகாஷ் ராஜன்.
 
இவர் சின்னத்திரை குறித்து ஆரோக்யமாக சொல்வதைக் கேட்கும்போது,  நடிகை நிலானி வெளியிட்ட வாட்ஸ் அப் கோரிக்கை கொஞ்சம் கொஞ்சமாக செவிசாய்க்கப்படுகிறது எனலாமா?
 
-வே. கிருஷ்ணவேணி   
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!