'சீரியல் ஈஸி... சினிமா கஷ்டம்'!- தீபக் ஃபீலிங்ஸ்

 
'தென்றல்' சீரியலின் ஆஸ்தான நாயகனாகக் கொண்டாடப்பட்டவர் நாயகன் தீபக். இவர் ஹீரோவாக நடித்த 'இவனுக்கு தண்ணியில கண்டம்' படம்  கடந்த வருடம் ரிலீஸானது. இப்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் 'Mr&Mrs கில்லாடிகள்' என்கிற நிகழ்ச்சியைத்  தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
 
அவரின் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை அனுபவம் பற்றி கேட்டோம்,
 

சீரியல்கள் பலவற்றில் நடித்திருக்கிறீர்கள் எப்படி இந்த வாய்ப்பு?
 
நான் இந்தத்  துறைக்கு வந்தது விபத்து. இந்தத்  துறைக்கு வருவதற்கு முன்பு விளம்பரப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன். அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அங்கேதான் தயாரிப்பு, டயலாக், ஸ்கிரிப்ட் என பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைக்கும்போது இந்த அனுபவம் உதவியது. அதனால்தான் என்னுடைய நடிப்பை முழுமையாகக்  காட்ட முடிந்தது என்று நினைக்கிறேன்.

வெள்ளித்திரை அனுபவம்?
 
சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை.. கனவு. அதை 'இவனுக்கு தண்ணியில கண்டம்' படத்தில் வாய்ப்புக் கிடைத்ததும் வெளிப்படுத்தினேன். இனி முழுக்க வெள்ளித்திரையில் தொடர வேண்டும் என்கிற ஆசையில் நடனம் கற்றுக் கொண்டேன். இப்போதும் அது தொடர்கிறது. அடுத்து என்ன படம் என்று யோசனையில் இருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் வாய்ப்புக்காகக்  காத்திருக்கிறேன்.

வெள்ளித்திரை, சின்னத்திரை என்ன வித்தியாசம்?
 
நிறைய பேர் இதை யோசிப்பார்கள். சின்னத்திரை... அதாவது சீரியலில் நடிப்பது என்பது என்னைப் பொறுத்தவரை தினமும் அலுவலகம் சென்று வருவது போல. அன்று நாம் நடிக்க வேண்டிய சீன் என்னென்ன, வசனம் என்ன என்பதெல்லாம் தயாராக இருக்கும். மேலும், சீரியலைப் பொறுத்தவரை வசனங்களில்தான் அதிக கவனம் இருக்கும். ஒரு எபிசோட் முடிந்துவிட்டால் அதற்கான வேல்யூ அவ்வளவுதான். ஆனால், வெள்ளித்திரையைப் பொறுத்தவரை ஆக்‌ஷன் மிக மிக அவசியம். எல்லாவற்றிற்குமே முக்கியத்துவம் இருக்கும். 

உங்களுடைய வாய்ஸ் நிறைய சீரியல்களில், படங்களில் கேட்ட மாதிரி இருக்கே?
 
சீரியலுக்குள் வருவதற்கு முன்னாடியே, பல ஹீரோக்களுக்கு வாய்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தேன். இப்போதும் என்னுடைய குரலைக் கேட்டால் இவர் 'தீபக்' என்பதை சரியாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். அந்த அளவுக்கு என்னுடைய குரல் பலரிடம் பரிச்சயமாகிவிட்டது. உண்மையிலேயே நான் லக்கி மேன். இப்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் 'Mr&Mrs கில்லாடிகள்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன். மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அடுத்தடுத்துப்  போகணும்.. அதற்கான முயற்சியை மேற்கொண்டுவருகிறேன். 
 

-வே. கிருஷ்ணவேணி 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!