நான் ராமர் ஆன கதை இதுதான்! - கல்யாணம் முதல் காதல் வரை அமித் பார்கவ்

 
விஜய் டி.வியின் 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் அமித் பார்கவ் பல படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். 
 
'பெங்களூரைச் சேர்ந்த எனக்கு வழக்கறிஞர் ஆகவேண்டும் என்பதே எனது சிறு வயது முதல் மனதில் உள்ள கனவு. சிறு வயதிலேயே அப்பா, அம்மா மற்றும் உறவினர்களிடம்  அதிகமாக வாதாடுவேன். இதுதான் எனக்கு வழக்கறிஞர் ஆகும் ஆசையை ஏற்படுத்தியிருக்கும் போல. இதற்குப் பிறகு சட்டக்கல்லூரியில் சேர்ந்தேன். ஏனோ, சேர்ந்தபின் எனக்கு அதில் பெரிய அளவில் ஆர்வம் வரவில்லை. என்னுடைய ஆர்வம் முழுக்க நடிப்பதில் இருந்தது. Sadarame என்ற கன்னட படத்தில் நடித்தேன். அப்போதான் எனக்கு முழுமையாகத் தெரிந்தது எனக்கான இடம் இதுதான் என்று. அதற்குப் பிறகு நடிப்புத்துறை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டேன்.
 
பிறகு நண்பர்கள் துணையோடு ஒரு தியேட்டர் ஆரம்பித்தோம். அதில் நிறைய கற்றுக் கொண்டோம். கர்நாடகத்தில், நடைபெற்ற 'சீதா ராம கதா ஹிருதயம்' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்திற்கு ஆட்களைத்  தேர்வு செய்து கொண்டிருந்தார்கள். ஏராளமான பேர் அந்த மாடல் தேர்வில் கலந்துகொண்டார்கள். அப்போது ராமர் வேடத்திற்கு நான் தேர்வு செய்யப்பட்டேன். அப்போது எனக்கு வயது 18. 
 
என்னைத்  தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் என்னுடைய சகோதரர். பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்தேன். வந்த பிறகு 'என்னமோ ஏதோ', 'விழி மூடி யோசித்தால்' மற்றும் கெளதம் மேனன் படத்திலும் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்து நடித்தேன்.  இதுமட்டுமல்லாமல் பாலிவுட் படமான '2 ஸ்டேட்ஸ்' படத்திலும் நடித்தேன். அதுதான் என்னுடைய முதல் ஹிந்தி படம். 2014 ம் ஆண்டுகளில் தலைவா போன்ற படங்களுக்கு 'வாய்ஸ்' கொடுக்கவும் செய்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் குறும்படங்களிலும் நடித்திருக்கிறேன். நடிப்பில் இன்னும் நிறைய கத்துக்கணும், கத்துக்கிட்டே இருக்கேன்' என்கிறார் பார்கவ் ஆர்வம் மிளிர. 
 
-வே.கிருஷ்ணவேணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!