அட... நம்ம ஜாக்குலினோட நியூ இயர் ரெசல்யூஷன் என்ன தெரியுமா?

எப்போ பிறக்கும்...எப்போ பிறக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2017ம் ஆண்டு குட்டிக் குழந்தையாக பிறந்தே விட்டது. புத்தாண்டு என்றாலே பார்ட்டீஸ், கேக், கமல்ஹாசன் சாங் தாண்டி முதலிடம் பிடிப்பது ‘நியூ இயர் ரெசல்யூஷன்’. ஆளாளுக்கு வரிந்துகட்டிக் கொண்டு ‘நான் ஒழுங்கா படிக்கப்போறேன்...இந்த வருஷமாவது சிகரெட்டை விட்றணும்....கடவுளே இந்தவருஷமாவது சமையல் கத்துக்கணும்’ என விதவிதமாக புதுவருடத்திற்கான தீர்மானங்களை பட்டியலிட்டுக் கொள்வோம். அதே மாதிரி டிவி பிரபலங்களின் ‘நியூ இயர் ரெசல்யூஷன்’ என்ன என்று தெரிந்து கொள்ள ஒரு ரவுண்டு வந்தோம். என்னலாம் சொன்னாங்கனு நீங்களே படிச்சுப் பாருங்களேன்!


அமித் பார்கவ் (கல்யாணம் முதல் காதல் வரை):

’வாங்க....வாங்க யாருடா கேட்பாங்கனு வெய்ட் பண்ணினேன்... நீங்க சிக்கிட்டீங்க’ கேள்வியைக் கேட்டதுமே வேகமாக வரவேற்றார் அமித் பார்கவ். ‘நான் இப்போ ஜோடில ஆடிட்டு இருக்கறது உங்களுக்கு மட்டுமில்லாம மொத்த ஆடியன்ஸுக்கும் தெரியும். அதனால எனக்கு டான்ஸ் மேல பெரிய ஆர்வம் வர ஆரம்பிச்சுருக்கு, சோ, இந்த வருஷம் முறையா எல்லா வகையான டான்ஸும் கத்துக்கணும். பிரபுதேவா அளவுக்கு (இது கொஞ்சம் ஓவர் பாஸ்!) டான்ஸ் ஆடணும். கூடவே இந்த புது வருஷத்தில் சீரியல் மட்டுமில்லாமல் நிறைய படம் கமிட் ஆகணும். வித்தியாசமான ரோல்களில் நடிக்கணும். இதுதான் இந்த வருஷத்தில் என்னோட ரெசல்யூஷன்’ என்று அபிநயத்துடன் சொல்கிறார் அமித். 

நியூ இயர்


வாணி போஜன் (தெய்வமகள்):

 

’நியூ இயர் வந்தாலே என்ன ரெசல்யூஷன் எடுக்கறதுனு யோசிக்கறதை இந்த வருஷமாவது விட்றணும்னு முடிவு பண்ணியிருக்கேன்’ சிரித்துக் கொண்டே கண்சிமிட்டுகிறார் ‘தெய்வமகள்’ வாணி போஜன். ‘சரி...நீங்க இவ்ளோ ஆசைப்பட்டு கேட்கறதால சொல்றேன். போன வருஷம் இருந்த மனவருத்தம், சோகம், கவலை எல்லாம் இந்த புதுவருஷத்தில் என்னை விட்டு போய்டணும். ரொம்ப ஹேப்பியா இருக்கணும். இன்னும் அர்ப்பணிப்போட ரசிச்சு நடிக்கணும். இதுமட்டும்தாங்க’ என்று சின்னப்புன்னகை பூக்கிறார்.


ஜாக்குலின் (நிகழ்ச்சித் தொகுப்பாளினி):

’ஹலோ....யாரா இருந்தாலும் அடுத்த வருஷம் பேசுங்க’ என்று எடுத்தவுடனேயே ஜாலி எண்ட் கார்டு போட்ட ஜாக்குலின், ‘ஹையோ தூக்கத்தில் யாரு பேசுறாங்கனு தெரியாம கலாய்ச்சுட்டேன்’ என்று சரண்டர் ஆனார். ‘தொடர்ச்சியா ஷூட்...ஷூட்...ஷூட், அதான் இவ்ளோ தூக்கம். என்னோட புதுவருஷ ரெசல்யூஷனும் அதேதாங்க. இந்த புதுவருஷத்திலாவது நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கணும் கடவுளே!’ பதில் சொல்லிக்கொண்டே மீண்டும் ஸ்லீப்பிங் மோடுக்கு சென்றுவிட்டார் ஜாக்குலின். 

ரக்‌ஷன் (நிகழ்ச்சித் தொகுப்பாளர்):

‘அட நீங்க வேற... நியூ இயர் ரெசல்யூஷனாவது ஒண்ணாவது....அப்படிலாம் எந்த கமிட்மெண்ட்டும் வச்சுகிறதில்லை. இருந்தாலும் இந்த வருஷமும் எல்லாரும் நல்லாருக்கணும்...அது மட்டும்தான் எப்பவும் மனசில் தோண்ற புதுவருஷ வேண்டுதல்!’  என்று உருக்கமாக சொல்லி நெத்தியடி அடித்தார் ரக்‌ஷன்.

கார்த்திக் (கல்யாணம் முதல் காதல் வரை):

’இந்த வருஷம் சீரியலிலிருந்து தாவி ஃபுல் டைம் பெரிய திரைக்கு போகணும். நிறைய படங்கள் கமிட் ஆகணும்...அதுதான் என்னோட புதுவருட தீர்மானம். வார்த்தை மாறாம எழுதிடுவீங்கதானே?’ என்று சொல்லிக்கொண்டே போட்டோவிற்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தார் கார்த்திக்.

கடைசியில் இவர்களுடைய நியூ இயர் ரெசல்யூஷன்களையெல்லாம் கேட்டு மண்டை கிறுகிறுத்துப் போய், ‘இனி வாழ்க்கையில் யார்கிட்டையும் உங்க நியூ இயர் ரெசல்யூஷன் என்ன?’ என்று கேட்கக்கூடாது என்பதுதான் என்னோட நியூ இயர் ரெசல்யூஷன்!

-பா.விஜயலட்சுமி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!