தயாரிப்பாளரை மிரட்டுகிறதா தாவூத் தரப்பு?

அர்னாப் ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர். வெற்றிகரமான தொகுப்பாளராக அர்னாப் விளங்கினாலும் அவரது சேனல் டிஆர்பி ரேட்டிங் இறங்கு முகத்தில் உள்ளது. ஒன்று தொடர்ந்து நல்ல நிகழ்ச்சிகளாகக் கொடுத்து விழுந்த ரேட்டிங்கை உயர்த்தி நிறுத்துவது அல்லது சேனலை இழுத்து மூடுவது என்கிற முடிவுக்கு அதன் உரிமையாளர் வருகிறார். அர்னாபிற்கு ஒரு கர்ப்பிணி மனைவியும் இருக்கிறார். இந்த நிலையில் தன் வாழ்க்கையைக் காப்பாற்றவும்,வேலையைக் காப்பாற்றவும் ஒரு அதிரடியான முடிவு எடுக்கிறார் அர்னாப். அது பிரபல நிழல் உலக தாதாவான 'மிஸ்டர் டி'யை பாகிஸ்தானுக்குச் சென்று பேட்டி எடுப்பது. அதன் பின்னர் நடக்கும் பரபர சம்பவங்களே கதை.  

 

 

இப்படி ஒரு கதையை பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனும்,நடிகருமான சுனில் க்ரோவர் நடிப்பில் இயக்குநர் வினோத் ரமணி என்பவர் தயாரிக்க,விஷால் மிஸ்ரா இயக்கத்தில் "காபி வித் டி" என்கிற பெயரில் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் இதன் இயக்குநர் விஷால் மிஸ்ராவும் தயாரிப்பாளர் வினோத் ரமணியும் காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் தங்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாகப் பல்வேறு எண்களில் இருந்து மிரட்டல் அழைப்புகள் வருவதாகவும், மும்பை தாதா  தாவூத் இப்ராஹிம் பெயரைச் சொல்லி மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த அழைப்புகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் இருந்தும் விதவித எண்களில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தாவூத் 

நிலைமை இவ்வாறு இருக்க, படத்தில் 'அர்னாப்' கேரக்டரில் நடித்த நாயகன் சுனில் க்ரோவர் பட ப்ரோமோஷன் வேலைகளில் இருந்து திடீரென விலகிக்கொண்டார். படத்தின் ஆரம்ப கட்டத் தொடக்க விழாவின் போது விரைவில் தாவூத்தைக் கைது செய்யுமாறு பிரதமர் மோடிக்கு 'பகிரங்கக் கடிதம்' ஒன்றை எழுதி சென்சேஷனல் செய்தியாக்கினார் நாயகன் சுனில்.ஆனால் மற்றவர்களுக்கு வந்தது போல் அவருக்கும் மிரட்டல் போன்கள் வரத்தொடங்கவும் தன் நிலையை மாற்றிக்கொண்டார். பிரபல ஹிந்தி ஷோவான "கபில் சர்மா ஷோ"வில் கூட சுனில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் கடைசி நேரத்தில் வரமுடியாது எனத் தெரிவித்துவிட்டாராம்.

“இந்தப் படத்தில் நடிப்பதற்குத் துணிச்சலுடன் ஒப்புக்கொண்ட சுனில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வராமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. அவருக்கு நேரடியாக டி என்று குறிப்பிடப்படுகிற தாவூத்திடமிருந்து மிரட்டல் வந்திருக்கும் எனத் தெரிகிறது. அப்படி ஒன்று நடந்திருந்தால் உடனடியாக காவல்துறையில் அவர் புகார் அளித்திருக்க வேண்டும், இப்படி ஓடி ஒளியக்கூடாது" எனப் படத்தின் தயாரிப்பாளர் ரமணி தெரிவித்துள்ளார்.  

படத்தில் நடித்துள்ள மற்றவர்களான ஜாகிர் உசேன் மற்றும் தீப்பானிந்தா சர்மா ஆகியோர் தயக்கமின்றி புரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக டிவி மற்றும் எப்.எம் வானொலிகளுக்குச் சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று மாலை முதல் படம் நாளை ரிலீஸ் ஆகாது என்றும், அப்படியே ரிலீஸ் ஆனால் மும்பை தியேட்டர்கள் விபரீத விளைவுகளைச் சந்திக்கும் என்றும் வதந்திகள் கிளம்பத் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தின் நாயகனின் பெயரான 'அர்னாப்' குறித்தும் படத்தில் தனது நிகழ்ச்சியை வலுவாகக் கிண்டலடித்துள்ளது பற்றியும்  அர்னாப் கோஸ்வாமி இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

-வரவனை செந்தில் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!