"ஆம், நான் ஒரு gay!" - சின்னத்திரை நடிகர் கடிதம்

Gay

தமது பாலியல் தேர்வுகளை வெளிப்படையாகத் தெரிவிப்பது ஹாலிவுட்டிலும்,மேற்கு நாட்டுத் தொலைக்காட்சி நடிகர்கள் மத்தியிலும் சாதாரண ஒன்றாகிக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தியாவிலும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக எழுத்தாளர்களும்,கலைஞர்களும் தங்கள் பாலியல் அடையாளத்தைப் பொது இடத்தில் சொல்லத் தயங்காத நிலை ஏற்பட்டு வருகிறது. நடிகர்,இயக்குநர், தயாரிப்பாளர்,தொலைக்காட்சி பிரபலம் எனப் பன்முக ஆளுமை கொண்ட கரண் ஜோகர் தம்மைத் 'தன்பால் விருப்பு உள்ளவன்' என்று அறிவித்திருந்தார். இருந்தாலும் அவரது சுயசரிதையில் தமது பாலியல் விருப்பு குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றும் அதன் ஆதரவு மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில் சின்னத்திரை நடிகரும் நடனம் மற்றும் தபேலா கலைஞரான நடிகர் சாத்விக் 'தான் ஒரு Gay' என வெளிப்படையாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியதின் விபரம். 

"பக்கம் பக்கமாய்க் கரண் ஜோகரின் 'பொருந்தாத பையன்' என்கிற சுயசரிதை பற்றிப் பத்திரிக்கைகளும் இணையத்தளங்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.பலர் அவரின் முந்தைய அறிவிப்பைப் பெரிய துணிச்சலான செயல் போலவும் பேசி வருகிறார்கள். சில தன்பால் உறவு ஆதரவாளர்கள் இன்னும் வெளிப்படையாகக் கரண் ஜோகர் தம்மை ஒரு Gay என ஏன் அறிவித்துக்கொள்ளவில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். 

கரண் ஜோகர் மிகப்பெரிய தொழிலதிபர், அப்படி அறிவிப்பதன் மூலம் அவரின் தொழில் வாய்ப்புகளை அவர் இழக்க வேண்டியிருக்கும். "எல்லோருக்கும் என்னைப் பற்றித் தெரியும். எனவே நான் அது குறித்து மேஜை மீது ஏறி கத்திச் சொல்லத்தேவையில்லை. சொல்லவும் மாட்டேன் காரணம், அப்படி வெளிப்படையாகச் சொன்னால் அதற்காகச் சிறைக்குப்போகும் வாய்ப்பும் உள்ள நாடு இது எனவும் கரண் சொல்லியிருக்கிறார். உண்மையில் இந்தியாவில் மனித உரிமைகள் ஒன்றும் அவ்வளவு மோசமாக இல்லை. நான் அவரின் இடத்தில் இவ்வளவு வசதியுடனும் புகழுடன் இருந்தாலும் இப்படித்தான் சொல்லியிருப்பேனா என உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் இந்திய திரை உலகில் தனக்கு மாற்றுப் பாலுறவு விருப்பு உள்ளது என பட்டும் படாமல் சொன்னதற்காவது அவரைப் பாராட்டவேண்டும். அதே போல் இந்தக் கடிதத்தின் மூலம் 'நான் ஒரு கே' என அறிவிப்பதற்கு அவர்தான் ஊக்கமாக இருந்தார். 

நான் லண்டனில் 2012-ல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை படித்துக்கொண்டிருந்தேன். அந்தப் பல்கலைக்கழகத்தில் முழுமையான சுதந்திரம் உள்ளது.அங்கு நான் வெளிப்படையாக கே என சொல்லிக்கொண்டிருந்தேன்.  டெல்லியில் இளங்கலை படிக்கும் போதே என்னைப்பற்றி என் குடும்பத்தாரிடம் தெரிவித்து இருந்தேன். அவர்களும் இதை மிகச்சாதாரணமாக எடுத்துக்கொண்டனர். இது எல்லோருக்கும் நடக்காது என்றும் தெரிந்தே இருந்தேன். ஆனாலும் நான் எப்படிப் பஞ்சாபியோ,இசைக்கலைஞனோ,வெஜிடேரியனோ அது போல இதுவும் மிகச்சாதாரணமானது என என் பெற்றோர் புரிந்துகொண்டனர். 

லண்டனில் படிக்கும் போதுதான் நான் இதை வெளிப்படையாகத் தெரிவித்து அதற்கு ஆதரவான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருந்தேன். நான் படித்துள்ள முதுகலை பொருளாதாரப் படிப்புக்கு அங்கு உடனே வேலைக் கிடைத்தது. ஆனாலும் இசை மற்றும் அரங்க நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் இந்தியாவுக்கு வந்தேன். அங்குப் போல் இங்கு வெளிப்படையாக என்னை ஒரு கே எனச் சொல்லிக்கொண்டால் எந்த வித வாய்ப்புகள் வராமல் போய்விடும் என நெருக்கமான நண்பர்களால் அறிவுறுத்தப்பட்டேன். டிவி நாடகங்களில் பெண்கள் நடிப்பதை கே என்று சொன்னவர்கள் நடிப்பதை ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்றும் பயமுறுத்தப்பட்டேன். ஆனால் இந்த நாட்டில் எல்ஜிபிடி சமூகம்தான் இருப்பதிலேயே சின்னஞ்சிறு சமூகம்.இவர்களுக்கு உதவவும் யாருமில்லை. நான் ஜெய்ப்பூர் கலைவிழாவுக்கு நிகழ்ச்சி நடத்தச் சென்று இருந்த போது எனக்கு உதவியாக வந்திருந்த பையன் ஒரு கே எனக் கண்டு கொண்டேன்.. அது குறித்து அவனிடம் கேட்கையில் இந்தியாவின் சின்னஞ்சிறு நகரத்தில் இருந்து ஒரு தன்பால் ஈர்ப்பு கொண்டவனாக அவன் படும் கஷ்டங்களைச் சொல்லி அழுதான். அந்தச் சம்பவம்தான் என்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தூண்டியது. இதைப்படிக்கும் தன்னைத் தன்பால் ஈர்ப்பாக உணர்ந்தவர்கள் முடிந்தவரை தம்மை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும். நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் மிகவும் நெகிழ்ந்து  தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!