வெளியிடப்பட்ட நேரம்: 08:12 (01/02/2017)

கடைசி தொடர்பு:08:16 (01/02/2017)

'நான் யங் மாமியாராக்கும்' - ‘தெய்வம் தந்த வீடு’ ரூபா ஸ்ரீ

ருபஶ்ரீ,தெய்வம் தந்த வீடு

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் 'தெய்வம் தந்த வீடு' தொடரில் மறக்க முடியாத ஒருவர் ரூபா ஶ்ரீ. இளமையான மாமியாராக, சீதாவுக்கு எப்போதும் சப்போர்ட் செய்யும் மாமியாராக நடித்து வருகிறார். இதற்கு முன்பு சுதா சந்திரன் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷூட்டிங் ஸ்பாட்டில் பிஸியாக இருந்த ரூபா ஶ்ரீயிடம் பேசினோம், 

80 களில் ஹீரோயினாக அசத்தியவர் எப்படி சீரியல் உலகில்  நுழைந்தீர்கள்? 

தமிழ், கன்னடம், மலையாளம் என 20 க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினா நடிச்சிருக்கேன். அப்படி நடிச்சிட்டு இருக்கும் போதே சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. எந்த மீடியமா இருந்தாலும் நடிப்பு என்பது ஒன்றுதானே, அதனால் ஒத்துக்கிட்டேன். மெகா டி.வியில் 'மங்கை', சன் டி.வி யில் சில தொடர்கள் அதைத் தொடர்ந்து தற்போது விஜய் டி.வி யில் ஒளிபரப்பாகிவரும் 'தெய்வம் தந்த வீடு' சீரியலின் மலையாள வெர்ஷனான 'சந்தனமழா' வில் மாமியாராக ஆரம்பத்தில் இருந்து நடிச்சிட்டு இருக்கிறேன். இப்போது தமிழிலும் அதே ரோலில் நடிக்கிறேன். 

சீரியலுக்கு வந்தப் பிறகு உங்களைப் படங்களில் பார்க்க முடியவில்லையே? 

சந்தனமழா இப்போது வரைக்கும் 500 க்கும் மேற்பட்ட எபிசோடைத் தாண்டியும் ஒளிபரப்பாகிட்டு இருக்கு. தமிழ், மலையாளம் என பிரேக் இல்லாமல் ஷூட்டிங் போயிட்டு இருக்கிறேன். இதற்கு இடையில் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. நிறையப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திட்டுத்தான் இருக்கு. ஆனா, எனக்கு அதுக்கான நேரம் இன்னும் கிடைக்கவில்லை. நேரம் கிடைச்சா கண்டிப்பா நடிப்பேன். 

உங்களுக்கு எப்படி நடிப்பு மேல் ஆர்வம் வந்தது? 

என் அப்பா, பெரியப்பா எல்லாருமே சினிமாவுல நிறைய வருஷமா வேலைப் பார்த்தவர்கள். நான் பள்ளி முடிஞ்ச அப்பபோ ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போவேன். அங்க நடிக்கிறவங்களப் பார்த்து, எனக்கும் நடிப்பு வந்திடுச்சு. அப்படித்தான் நடிப்பு மேல ஆர்வம் வந்ததென்று நினைக்கிறேன். இப்போது வரைக்கும் அது மேல அப்படி ஒரு ஈர்ப்பு. கடைசி மூச்சு வரை நடிக்கவேண்டும். அதுதான் என் ஆசை. 

பொதுவாகவே இப்படித்தான் ஜூவல்லரி போடுவீர்களா? 

அப்படியெல்லாம் இல்லீங்க. வீட்டில் இருக்கும் போது எந்த ஜூவல்லரியும் போட மாட்டேன். சிம்பிளாத்தான் இருப்பேன். சந்தனமழா தொடரில் கமிட் ஆனபோது, அந்த தொடரின் இயக்குநரும், தயாரிப்பாளரும் பொதுவாக சீரியல், சினிமாவில் நடிக்கக் கூடிய மாமியார் போல அல்லாமல் வித்தியாசம் காண்பிக்கவேண்டும். எப்படி வந்தா நல்லா இருக்கும்னு யோசிங்கன்னு என் விருப்பத்துக்கு விட்டுட்டார். அப்படி நான் யோசிச்ச போதுதான் இந்த மாதிரி வித்தியாசமான ரிச்சான ஜூவல்லரி, புடவைகள் கட்டலாம் என்கிற ஐடியா வந்தது. இதை அவங்கக்கிட்ட சொன்னதும் ரொம்ப பிடித்துப் போச்சு. உடனே, ஓ.கே சொல்லிட்டாங்க. நாங்கள் நினைத்த மாதிரியே கேரளாவில் நல்ல பிரபலம் ஆச்சு. சிறந்த மாமியாருக்கான ஏஷியன் நெட் விருது எனக்குக் கொடுத்தாங்க. 

இந்த மாதிரி ரோலை மக்கள் ஏற்றுக் கொள்வாங்கனு எதிர்பார்த்தீங்களா? 

''இவ்வளவு இளமையான மாமியாரை மக்கள் அக்சப்ட் பண்ணுவார்களா என்கிற பயம் ஆரம்பத்தில் இருந்தது. இரண்டு, மூன்று எபிசோட் பண்ணின பிறகு மக்கள் ரசித்துப் பார்க்கிறதை தெரிந்துகொண்டேன். பொதுவா நார்மல் ஷூட்டிங்கா இருந்தால் அரை மணி நேரம் போதும். இந்த கேரக்டருக்கு மட்டும் தயாராகரத்துக்கு இரண்டு மணி நேரத்துக்கும் மேல ஆகும். நான் ஷூட்டிங் தவிர மற்ற நேரங்களில் சிம்பிளாகத்தான் இருப்பேன். அதனால வெளியில் போனாக் கூட என்னை கண்டுபிடிக்க ரொம்ப நேரம் ஆகும். 

ஒரே சீரியலுக்கு ரெண்டு மொழிகள்ல டப்பிங் பேசற அனுபவம் எப்படி இருக்கு?  

தமிழில் பேசுறது ரொம்ப ஈஸியா இருக்கும். ஆனா, மலையாளத்துல அந்த டயலாக் நீளமா இருக்கும். அதுக்குத் தகுந்த மாதிரி நம்ம முக பாவனைகள் கொண்டு வரணும். டப்பிங்கிலும் அந்த ஃபீல் இருக்கணும். என்னைப் பொருத்தவரை தமிழில் பேசுவது, நடிப்பு ரொம்ப ஈஸி. என்னுடைய தாய்மொழி என்பதால் இன்னும் சுலபமாக இருக்கும். 

தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கிறீர்களே அலுக்கவில்லையா? 

நான் இந்தத் துறைக்கு வந்து பதினெட்டு வருடத்திற்கும் மேல் ஆகுகிறது. ஆரம்பத்தில் எப்படி நடிக்க ஆரம்பித்தேனோ, அதே போலத்தான் இப்போதும் சீக்கிரம் எழுந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போகிறேன். முழுக்க முழுக்க என்னோட தொழில் மேல் கொண்டுள்ள பக்தி இப்போதும் அதிகமாகத்தான் இருக்கிறதே தவிர குறையவே இல்லை. யாராக இருந்தாலும் சரி, அந்த வேலையை நேசித்துச் செய்ய ஆரம்பித்தால் போதும் உங்களுடைய உயரமும், மனதிருப்தியும் கிடைக்கும். குடும்பம் விஷயங்கள், உடல் நலக் கோளாறு என எத்தனையோ பிரச்சினைகள் வந்த போதும் அதைப் பொருட்படுத்தாமல் என் வேலையைச் செய்திருக்கிறேன். என்னதான் பணம், செல்வாக்கு இருந்தாலும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்றுச் செய்யும் பொழுது இருக்கிற மன திருப்தி வேறு எதிலும் இல்லை. 

நீங்க அணியும் நகைகளை எங்க வாங்குறீங்க? 

இங்கதான் வாங்கணும்னு நான் யோசிக்கிறது இல்ல. எனக்குப் பிடித்தமான பொருள் எங்க இருந்தாலும் வாங்கிடுவேன். அது எப்படியும் சீரியலுக்குப் பயன்படும். அதே போல வெளிநாடுகளுக்குப் போகும் பொழுது வித்தியாசமான ஜூவல்லரிகள் எதுவாக இருந்தாலும் உடனே காரை நிறுத்தி வாங்கிடுவேன். பெரும்பாலான பொருட்களை சென்னை, கொச்சின், திருவனந்தபுரம் போன்ற இடங்களிலும், வெளிநாடுகளிலும் வாங்கியிருக்கேன். நம்மளோட கலெக்‌ஷன் எப்பவும் வித்தியாசமா இருக்கணும் அவ்வளவுதான்.

 

-வே.கிருஷ்ணவேணி 

நீங்க எப்படி பீல் பண்றீங்க