வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (10/02/2017)

கடைசி தொடர்பு:14:41 (10/02/2017)

விஜய் டி.வி வி.ஜேக்களுக்கு சவால் விடும் இந்த ஜீனியஸ் ரோபோ யார்?

புதிதுபுதிதாக கலர்ஃபுல் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவது விஜய் டிவி ஸ்டைல். இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக விஜய் டிவியில் ஒரு ப்ரோமோ வெளியாகி ஆச்சரியப்படுத்தி வருகிறது. கலக்கல் விஜேயும், குட்டி ஜீனியஸ் ரோபோவும் திரையில் வந்து மிரட்டுகிறார்கள். விஜே பார்கவ் கேட்கும் கேள்விக்கு ரோபோ இப்படி பதிலளிக்கிறது...

லிட்டில் ஜீனியஸ், ரோபோ, ஜீனியஸ் ரோபோ

பிரிக்க முடியாதது? ஸ்கூலையும் டீச்சர்ஸையும்
பிரிக்க கூடாதது? எக்ஸாமையும் மார்க்ஸையும் 
சேர்ந்தே இருப்பது? பசங்களும் வால்தனமும் 
சேராமல் இருப்பது? ஃபர்ஸ்ட் பெஞ்சும் லாஸ்ட் பெஞ்சும்
பார்க்கக்கூடாது ? ப்ராக்ரஸ் ரிப்போர்ட்
பார்த்து ரசிப்பது? நம்ம ஷோ
ஆசைக்கு ? நீ
அறிவுக்கு ? நான்..! 

- என்று ஜாலியாக கலாய்க்கிறது அந்த குட்டி ஜீனியஸ் ரோபோ. எப்படி சாத்தியமானது என்பது தான் அனைவரின் கேள்வியும். ரோபோவும், விஜே பார்கவும் தொகுத்து வழங்கும் புதிய கேம் ஷோ ‘லிட்டில் ஜீனியஸ்’. 

பள்ளி மாணவர்களுக்காக விஜய் டிவி வழங்கிய ‘ஒருவார்த்தை ஒரு லட்சம்’ நிகழ்ச்சி செம ஹிட். கேம் ஷோவாகவும் இருக்கவேண்டும், அதே நேரத்தில் அறிவு சார்ந்த போட்டியாகவும் இருக்கவேண்டும் என்பதால் மீண்டும் ஒரு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது விஜய் டிவி. 

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஆடிஷன் நடத்தி சிறந்த பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பல குழுக்களாக பிரித்து அவர்களிடையே நடக்கும் குவிஸ் போட்டிதான் லிட்டில் ஜீனியஸ். இந்தப் போட்டியை நடத்தப்போவதும், போட்டியின் நடுவரும் இந்த லிட்டில் ஜீனியஸ் ரோபோ தான். இந்த ரோபோவை தன் பக்கம் தக்கவைக்கும் அணிதான் வெற்றிபெறும். 

ரோபோ, விஜய் டிவி, லிட்டில் ஜீனியஸ்

இந்தப் புதிய நிகழ்ச்சி பிப்ரவரி 12 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பகல் 12 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். ஒவ்வொரு வாரம் இரண்டு அணிகள் போட்டியிடுவார்கள். ஒவ்வொரு அணியிலும் ஐந்து மாணவர்கள். இவர்களுக்கு....  

டாட் தமிழோடு விளையாடு
டாட் ஹூ இஸ் தி ஹீரோ? 
டாட் ஆல் இன்  ஆல் அறிவாளி 
டாட் ட்ரு ஆர் ஃபால்ஸ்

- என மொத்தம் நான்கு சுற்றுகள். பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், மாணவர்களின் திறமையையும், அறிவையும் வெளிப்படுத்தும் ஸ்பெஷல் தளம்தான் இந்நிகழ்ச்சி.  

இந்த நிகழ்ச்சியை பார்கவ் ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். இவர் 200க்கும் மேற்பட்ட லைவ் நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்கியவர். அல்ப்ரெட் ஹிட்ச்காக் திரைப்படத்தை தழுவி ‘தி 39 ஸ்பெட்ப்ஸ்’ என்ற நிகழ்ச்சியை இயக்கி பிரபலமானவர். 

இவருடன் கலக்கவரும் இந்த லிட்டில் ஜீனியஸ் ரோபோட்டை கிடோபோட்டிக்ஸ் என்னும் கல்வி நிறுவனம் உருவாக்கியுள்ளது. ரோபோவின் அசைவுகளை இரண்டு நபர்கள் தொழில்நுட்ப உதவியுடன் இயக்குவார்கள். மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக விஜேக்களுக்குப் போட்டியாக ரகளையான கவுன்டர்களையும் விளாசுமாம் இந்த ரோபோ. இந்த ரோபோவுக்கு, விஜய் டிவியின் ஆஸ்தான டப்பிங் ஆர்ட்டிஸ்ட் கோபி நாயர் தான் குரல் கொடுத்திருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.

சமீபத்தில் விஜய் சூப்பர் என்ற புதிய சேனலை தொடங்கியது விஜய் டிவி.  அதில், பழைய நாஸ்டால்ஜிக் நிகழ்ச்சிகளையும் சீரியலையும் மறுஒளிபரப்பு செய்துவருகிறது. அடுத்ததாக இந்த புது க்விஸ் ஷோவை தொடங்கவிருக்கிறது. இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே ரோபோ நிகழ்சியை தொகுத்துவழங்கி, நடுவராக வருவது இதுவே முதன்முறை என்பதால் எதிர்பார்ப்பும், ஆச்சரியமும் கண்விரியவைக்கிறது. ஆல் தி பெஸ்ட் சிட்டி ரோபோ 2.0.  

-’சீரியல்’ கில்லர்-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்