வெளியிடப்பட்ட நேரம்: 22:03 (17/02/2017)

கடைசி தொடர்பு:22:02 (17/02/2017)

ஆபத்தில் கில்லாடிகள்... கறார் சிநேகா... என்ன நடக்கும்?

‘வெற்றிக்காக ஓடும் வேகத்தை விட, அந்த வெற்றியைத் தக்கவைக்க அதைவிட பலமடங்கு வேகமாக ஓடவேண்டியது கட்டாயம்’ என்பதை ஒவ்வொரு முறையும் நிகழ்த்திக் காட்டுகிறது  ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சி. இந்தியில் பிரபலமான ‘ஜீ’ நிறுவனத்திலிருந்து தமிழில் சேனல் தொடங்கப்பட்டு, குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் ஹிட் லிஸ்ட்டில் இடம்பிடித்தது ‘ஜீ தமிழ்’. வித்தியாசமான டிவி நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் என்று அசத்தல் நிகழ்ச்சிகளால் டி.ஆர்.பி-யிலும் கொடிகட்டிப் பறக்கிறது.

ஜீ தமிழ், சினேகா, டான்ஸிங் கில்லாடிஸ்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் ‘லட்சுமி வந்தாச்சு’, ‘டார்லிங் டார்லிங்’, ‘இருமலர்கள்’, ‘நாகராணி’, ரோஜா தொகுத்து வழங்கும் ‘ஜீன்ஸ்’, ‘மிஸ்டர் அண்ட் மிசஸ் கில்லாடி’ மற்றும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ போன்றவை ரசிகர்களின் விருப்பமான நிகழ்ச்சிகள். தற்பொழுது புதிதாக ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை அறிமுகப்படுத்தவிருக்கிறது ‘ஜீ தமிழ்’. 

எல்லா சேனல்களிலுமே டான்ஸ் நிகழ்ச்சிகளையும், ரியாலிட்டி ஷோக்களையும் பார்த்து ரசித்திருப்போம். இரண்டுமே சேர்ந்து ஒரே நிகழ்ச்சியாக இருந்தால் எப்படியிருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்த்தது மட்டுமில்லாமல், நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்ப இருக்கிறது ஜீ. நடனம் மட்டுமின்றி நடனத்தோடு சேர்ந்த சாகச நிகழ்ச்சியாக உருவாகியிருப்பதுதான் 'டான்ஸிங் கில்லாடிஸ்' நிகழ்ச்சியின் ஸ்பெஷல்.

இந்த நிகழ்ச்சிகள் நடன அரங்குகளில் நடக்கப்போவதில்லை. உயரமான கட்டடமும், கரடுமுரடான ஆஃப்ரோடு ஏரியாவும்தான் நடன மேடை என்றால் நம்புவீர்களா? அதாவது நிலம், நீர், தீ போன்ற பஞ்சபூதங்களிலும், அந்தரத்திலும்கூட நடனக் கலைஞர்கள் நடனமாடுகின்றனர். அந்த நேரத்தில் எதிர்பாராத சவால்களை எதிர்கொண்டாலும் நிலைகுலையாமல் தொடர்ச்சியாக நடனமாடுவதுதான் சவால். பரபரப்பும், விறுவிறுப்புமான இந்த நிகழ்ச்சி நாளைமுதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாக இருக்கிறது. 

முன்னணி சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல நடனக் கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகப் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு எபிசோடுமே புதிதாக ஏதாவது கான்செப்டுடன் வந்து அசரடிக்கப் போகிறது.

இந்த நிகழ்ச்சியை 'ஜீ தமிழின்' பிரதானத் தொகுப்பாளரான தீபக் ஜாலியாகவும் விறுவிறுப்பாகவும் தொகுத்து வழங்குகிறார். ரியாலிட்டி ஷோ என்றாலே நடிகைகள் யாராவது நடுவராக வருவது வழக்கம். விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘ஜோடி - ரீல் Vs ரியல்’ நிகழ்ச்சியில் டி.ராஜேந்தருடன், சதா மற்றும் தேவயானி நடுவராகப் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல இந்த ‘டான்ஸிங் கில்லாடிஸ்’ நிகழ்ச்சிக்கு சிநேகா நடுவராக வந்து கலக்குகிறார். அவருடன் இணை நடுவராக, நடிகையும் நடனக் கலைஞருமான சுதா சந்திரன் பங்கேற்கிறார். 

சமீபத்தில் விஜய் டிவி புதிதாக பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனுக்காக `க்விஸ்’ போட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியது. அந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷலே போட்டியின் நடுவராகவும் தொகுப்பாளராகவும் இருப்பது ஜீனியஸ் என்ற குட்டி ரோபோதான். கடந்த பிப்ரவரி 12 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பகல் 12 மணிக்கு  ‘லிட்டில் ஜீனியஸ்’ நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. 

ஒவ்வொரு தொலைக்காட்சியுமே கற்பனைக்குதிரையைப் பறக்கவிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தவும், ஆச்சரியத்தில் ஆழ்த்தவும் புதிது புதிதாக பல நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 'டான்ஸிங் கில்லாடிஸ்'  நிகழ்ச்சியும் ரசிக்க வைக்கும் என்று நம்பலாம்.

அசரடிக்கும்  ‘டான்ஸிங் கில்லாடிஸ்’ புரொமோ வீடியோ:

 

-‘சீரியல்’ கில்லர்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்