Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எம்.எல்.ஏக்களைக் கேள்வி கேட்கற உரிமை நமக்கு இருக்கு! - சொர்ணமால்யா பேட்டி #VikatanExclusive

பூர்ணியை நினைவிருக்கிறதா உங்களுக்கு? சன் டிவியின் ‘இளமை புதுமை’ நிகழ்ச்சியில் நமக்குப் பரிச்சயமானவர். ‘அலைபாயுதே’ பூர்ணியாக மனதில் நின்றவர். வீ.ஜே, சினிமா என செம பிஸியில் இருந்தவர் சொர்ணமால்யா. இப்பொழுது என்ன செய்கிறார் என்று தெரிந்துக்கொள்ள அவரை சந்தித்தோம். ‘ஹாய் பூர்ணி, எப்படி இருக்கீங்க’ என்று கேட்கவும் வெட்கச்சிரிப்புடன் பேசத்தொடங்குகிறார்.  

சொர்ணமால்யா

“இப்போ என்ன பண்றீங்க?”

“இந்தியாவுல தொடங்கி அமெரிக்கா வரையிலும் பரதநாட்டியம் சொல்லித்தருவதும், கற்றுக்கொடுப்பதும் தான் என்னுடைய முக்கியமான வேலை. அதுமட்டுமில்லாம பாரம்பரியகலைஞர்களின் வாழ்வாதாரத்துக்கும், வளர்ச்சிக்குமாக முறையான தளம் ஏற்படுத்துவதற்காக முனைப்பா செயல்படுறேன்.”

“அலைபாயுதே ரிலீஸாகி 17 வருசம் ஆச்சு, இப்போ எப்படி ஃபீல் பண்ணுறீங்க?”

“அலைபாயுதே நடிக்கும் போது, காலேஜ் படிச்சுட்டு இருந்தேன். ரொம்ப சுதந்திரமா ஜாலியா சுத்திட்டு இருந்தேன். நடிக்கணும்னு நினைச்சதே காலேஜ் கட் பண்ணிட்டு ஜாலியா சுத்தலாம்னுதான். அந்த நேரத்தில் மணிசார் படத்தில் நடிக்கிறோம், இவ்வளவு பெரிய ஹிட் கொடுக்கும்னு எதுவுமே யோசிச்சதில்லை. அப்படி இருந்ததுனால தான் இப்பவும் மணிசாரோட நல்ல நட்போடு இருக்கமுடியுது. வருஷத்துக்கு இரண்டு முறையாவது மணிரத்னம் சாரையும் சுஹாசினி மேமையும் சந்திச்சிடுவேன். என்னோட நடிச்சவங்க கூட இப்பவும் நட்பாதான் இருக்கேன்.”

“வீ.ஜே, சினிமானு கலக்கிட்டு இருந்தீங்க... திடீர்னு காணாம போய்ட்டீங்களே?”

“வாழ்க்கையில நிறைய விஷயங்களைக் கடந்துபோய்தான் ஆகணும். அப்படி கடந்தா தான் அடுத்தவிஷயத்தை அடையமுடியும். நம்முடைய பார்வை எப்பொழுதுமே எதிர்நோக்கித்தான் இருக்கணுமே தவிர, கடந்தக் காலத்தை நினைச்சு வருத்தப்படக்கூடாது. சினிமாவில் நடிச்சதுக்கு சமமா, இப்போ பரதத்தில் அழகான மேஜிக் உருவாக்கிட்டு இருக்கேன். உலகக் கலைஞர்களுடன் வேலை செய்யறதுக்கான வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதையெல்லாம் விட்டுட்டு, ஒரே விஷயத்தை 10 வருஷமா பண்ணிட்டு இருந்தா அலுப்புதான் தட்டும். அதுமட்டுமில்லாம நிறைய நல்லவிஷயம் செய்யவேண்டி இருக்கு. இதற்கு நடுவில் தேவையில்லாமல் நேரத்தை எதிலும் விரயம் செய்துவிடவும் கூடாது”.

“வீ.ஜே​​​​​​​-வா இருந்த அனுபவம்?”

“எதையுமே சீரியஸா எடுத்துக்காக இளமையான காலம் அது. நிச்சயம் என் வாழ்வில் மறக்கமுடியாத கோல்டன் டைம்ஸ். ஆனா, அறிவை வளர்த்துக்க ஆரம்பிக்கவும், உலகைப் புரிஞ்சுக்கத் தொடங்கிடுறோம். உலகப் பிரச்னைகளைப் பேச ஆரம்பிக்கவும், அதற்கான தீர்வில் நமக்கான பங்களிப்பும் இருக்கணும்னு நினைக்க ஆரம்பிச்சிடுறோம். அதற்குப் பிறகு பழைய சந்தோஷம் கிடைக்காமப் போனாலும் பொக்கிஷமா மனதில் அப்படியே இருக்கும். சின்ன வயசுல சிரிச்சதுக்குப் பிறகு தான் சிந்திப்போம். ஆனா இப்போ சிந்திச்சிட்டு தான் சிரிக்கவே செய்யறோம். அப்படி மாறிட்டாலும் என்னுடைய வீ.ஜே லைஃப் மறக்கவே முடியாது. ஆனா, எனக்கான பாராட்டுகள், நாட்டிய நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் என எல்லாரையும் சம்பாதிச்சு கொடுத்தது என்னுடைய வீ.ஜே-லைஃபும், சினிமாவும் தான்.”

சொர்ணமால்யா

“சினிமாவில் மீண்டும் நடிப்பீங்களா?”

“இப்பவும் நடிக்க கேட்டுட்டுத்தான் இருக்காங்க. எந்த இயக்குநர் படம்னாலும் நடிக்க நான் ரெடி. அலைபாயுதே, மொழி மாதிரி எனக்குப் பிடிச்ச கதையா இருக்கணும். குறிப்பா கிராமத்துக் கதையெல்லாம், இப்போ வரதே இல்லை. முழுக்க முழுக்க நகரக்கதைகள் தான் வருது. மறுபடியும் கிராமத்து சப்ஜெட்டில் நடிக்கணும்னு ஆசையா இருக்கு. ஆனா கலை சார்ந்து வேலை செய்திட்டு இருக்கும் போது, நடிப்புக்கு நேரம் ஒதுக்குவது சாத்தியமில்லை. ஆனா நல்ல கதையா இருந்தா நிச்சயம் நடிப்பேன்.”

“சினிமா, கலைன்னு உங்களுக்கான இலக்கை அடைஞ்சுட்டீங்களா?”

“கலையும், கலைஞரா இருக்குறதும் தான் என்னுடைய அடையாளம். கலையில் அவ்வளவு எளிதில் நமக்கான இலக்கை அடைஞ்சிடமுடியாது. ஏன்னா, கலையையும் தாண்டி மக்களின் பிரச்னையையும் பார்க்கணும். மறுக்கப்பட்ட பாரம்பரிய கலைகள் சார்ந்தும், ஆதிவாசிகளின் வாழ்வாதாரம் பற்றியும் நிறைய பணியாற்றவேண்டியது நம்ம கடமை. ‘இளமை புதுமை’ நிகழ்ச்சி ஏழு வருசமா செம ஹிட். 7 வருஷம் பண்ண விஷயங்களையே 70 வருஷமும் பண்ணணும்னு இலக்கு வச்சிக்க முடியாது. ஒவ்வொரு நாளையும் நமக்கா வாழணும்.”
 
“கலை அனைவருக்கும் கிடைக்கணும்னா, அதுசார்ந்த விஷயங்களில் உங்க பணி என்னவா இருக்கு?”
 
“எல்லா கலைகளையுமே கடவுளோட ஒப்பிட்டு தான் பார்க்கிறோம். அதையும் தாண்டி மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போய்டுச்சி. அதற்கான வேர்களை தேடிப்போகவேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கு.இப்போ நாம சொல்ற பரதநாட்டியங்குற கலை 17ம் நூற்றாண்டுகளில் எல்லோருக்குமானதாக தான் இருந்தது. ஒரு தரப்பு மக்கள் ஆடுவாங்க, மற்ற எல்லோரும் பார்ப்பாங்கங்குற விஷயம் இனி வேண்டாம். எல்லா தரப்பு மக்களுக்குமான கலாச்சாரத்தையும் உட்படுத்திய கலைகள் தான் இருக்கணும். நாம மறந்த, மறுத்த கலாச்சாரக் கூறுகளை மறுபடியும் கண்டெடுத்து அதை நிகழ்ச்சிகளா கொண்டுவந்துட்டு இருக்கோம். “

“தஞ்சாவூர்ல செட்டில் ஆகணுங்குறது உங்க ஆசை, ஆனா சென்னையில் செட்டில் ஆகிட்டீங்களே?”

“உலகத்தில் எந்த நாட்டுல இருந்தாலும், தஞ்சாவூர் தான் என் ஃபேவரைட். பெரிய கோயில் பிரமாண்டத்துக்குப் பக்கத்துல எதுவுமே வரமுடியாது. இப்போ இருக்குற பணிகளை விட்டுட்டு தஞ்சாவூர்ல செட்டில் ஆகமுடியாது. ஆனா என்னுடைய கடைசி காலம் தஞ்சாவூர்ல தான்.“

“சோதனையான  காலத்தை கடந்துவருவதற்கு நீங்க சொல்லுற அட்வைஸ்?”

“வாழ்க்கைய வாழ ஆரம்பிக்கும் போதே சோதனைகளும் வர தொடங்கிடும். எந்த பிரச்னை வந்தாலுமே அதை எதிர்க்கிற ஒரே வழி ‘தைரியம்’ மட்டும் தான். நமக்கான பகுத்தறிவு வரும் போது தான் தைரியமும் பிறக்குது. அறிவு சார்ந்த தற்கார்ப்பை நாம வளர்த்துக்கணும்.

“ஜல்லிக்கட்டு பிரச்னையில் போது மெரினா வந்தீங்களா?”சொர்ணமால்யா

“இளைஞர்களின் போராட்டம் நிச்சயமாவே ரொம்ப பெருமையா இருந்தது. அந்த நேரத்தில் வெளியூரில் இருந்ததுனால வரமுடியலை. ஆனாலும் ட்விட்டரில் என்னோட ஆதரவை கொடுத்துட்டு தான் இருந்தேன். மெரினாவுக்கு  வந்து ஆதரவு கொடுக்கணும்னு நினைச்சா அது, பப்ளிசிட்டி தேடுறமாதிரி ஆகிடும். எங்க இருந்தாலும் நமக்கான கருத்துகளை பதிவுசெய்தாலே போதும்.”

“இன்றைய அரசியல் சூழல் எந்த நிலையில் இருக்கு? ”

“துரதிருஷ்டவசமான அரசியல் நிலைமை தான் தமிழ்நாட்டுல நிலவுது. பெரிய தலைவர்கள் இறக்கும் போது, ஒரு வெற்றிடம் வரும்ங்கிறது எல்லாருக்குமே தெரியும். ஆனா இப்போ நடக்கும் விஷயங்களை யாருமே எதிர்பார்க்கலை. குடும்ப அரசியலோ, ஒருதலைப்பட்ச அரசியலோ இருந்தால் அது தமிழகத்திற்கு ஆரோக்கியமான விஷயம் கிடையாது. இந்த விஷயத்தை சாதாரண மனிதராநம்மால் மாற்றமுடியாது. ஆனால் நம்முடைய எம்.எல்.ஏ-க்களை கேள்விகேட்குற உரிமை நமக்கு இருக்கு. நமக்கான உரிமையை நிச்சயம் நாம கேட்கணும்.”

“ இந்த பிரச்னையை எப்படி சரிபடுத்தலாம்? ”

“ இது அரசியல். அவ்வளவு சீக்கிரத்தில் சரிப்படுத்திவிடமுடியாது. ஆனா நமக்கான விழிப்பு உணர்வு இப்போ கிடைச்சிருக்கு. அரசியல் சாக்கடைனு ஒதுங்கிட முடியாது. மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் போது அதற்கான விழிப்பு உணர்வு இருந்தாலே போதும். இப்போ மட்டும் பேசிட்டு விடாம, பிரபலங்கள் தொடர்ந்து இது சார்ந்து குரல் கொடுக்கவேண்டியதும் கடமை. சமூகம் மீது அக்கறையும், ஆர்வமும், பொறுப்புணர்ச்சியும் இருக்கவேண்டியது அவசியம்.”

-முத்து பகவத்-

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்