Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு

பாத்திமா பாபு - அ.தி.மு.க-வின் நீண்டநாள் உறுப்பினர், நட்சத்திரப் பேச்சாளர், ஜெயா டிவியின் செய்திவாசிப்பாளர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சினிமா சார்ந்து மிக நெருக்கமானவராக அறியப்பட்டவர். அவர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று , ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் கை கோத்திருக்கிறார். ஓ.பி.எஸ் அணியில் இன்று இணைந்த 1000 மதிமுக தொண்டர்களுடன், பாத்திமாபாபுவும் அணி சேர்ந்துள்ளார். கிட்டதட்ட 10 ஆண்டு காலம் ஜெயா டிவியின் ஆஸ்தான செய்திவாசிப்பாளராகப் பணியாற்றியவர் பாத்திமா பாபு. இந்த திடீர் முடிவுக்கான காரணத்தை அவரிடமே கேட்டோம்.

பாத்திமா பாபு ஜெயா டிவி

‘‘எதனால் இந்த திடீர் முடிவு?”

‘‘அம்மாவால் வளர்க்கப்பட்ட அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கணும்ங்கறதுதான் என்னோட ஆசை. உண்மையான அ.தி.மு.க, பொருளாளராக இருந்த பன்னீர் செல்வம், அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் இவர்கள் கையில்தான் தற்போது இருக்கிறது. மக்கள் முதல்வராக இப்போதும் பன்னீர் செல்வம்தான் திகழ்ந்து கொண்டிருக்கிறார். அம்மா அவர்கள் காபந்து முதலமைச்சராக எப்போதும் பன்னீர்செல்வத்தைத்தான் கைகாட்டியுள்ளார். அம்மா மறைந்த பிறகு, அவர் முதல்வராக நியமிக்க விரும்பிய பன்னீர் செல்வம் அந்த இடத்துக்கு வந்தது இயல்பான ஒன்று. அதே நேரம், எதிர்த்தரப்பினரைப் பொறுத்தவரையில் அம்மா யாரையெல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கினாரோ அவர்கள்தான் பதவிக்கு வரத் துடிக்கின்றனர். 2007-ம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக இருந்த டி.டி.வி தினகரனை எந்த அவை நடவடிக்கைகளிலும் பங்கு கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார் அம்மா.  2011-ம் ஆண்டு வரையில் அம்மா அவரை எந்த அரசியல் நடவடிக்கையிலும் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால், மன்னிப்புக் கடிதம் கொடுத்த அரைமணி நேரத்தில் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்படுகின்றார் என்றால், அது எந்தவிதத்தில் நியாயம்? அம்மாவின் மறைவுக்குப் பிறகு, அவர் ஒதுக்கி வைத்த குடும்பத்தைச் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை. அது அவர்களது தனிப்பட்ட விஷயம். ஆனால், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எத்தனையோ தொண்டர்கள் வளர்த்த கட்சியைப் பங்குபோட்டுக் கொடுப்பது என்பதை எந்த அ.தி.மு.க தொண்டராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. நானும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.”

“ஜெயலலிதா இருந்த காலகட்டத்திலும், இப்போதும் அந்த குடும்பத்தின் ஆதிக்கம் எப்படி இருக்கிறது?”

“பல்வேறு விஷயங்கள் இருந்தாலும், அதற்கு உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். அம்மா உயிருடன் இருந்தவரைக்கும் அவரை அடைமொழியிட்டு ‘புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா’ என்றெல்லாம் செய்தியில் சொல்லியதே இல்லை. அது தலைப்புச் செய்தியோ, விரிவான செய்தியோ அவரை செல்வி.ஜெ.ஜெயலலிதா என்றே சொல்லியிருக்கிறோம். குறிப்பிட்டிருக்கிறோம். அதனாலேயே கட்சி மீட்டிங்கில் பேசும்போது அவரை அம்மா என்றோ, புரட்சித்தலைவி என்றோ குறிப்பிடவே, நிதானித்துத்தான் பேசுவேன். காரணம், செய்தியில் நான் அவரைப் பெயர் சொல்லி வாசித்துப் பழகி இருந்தது. பொதுவெளியில் அவருடைய பெயரைச் சொல்லிப் பேசிவிடக்கூடாது என்று மெனக்கெடுவேன். அந்தளவுக்கு செய்திகளில் அவரது பெயர்தான் குறிப்பிடப்படும். இது அவர்களுடைய உத்தரவு. ஆனால், சசிகலா கட்சிக்கு வந்தவுடன், பொதுச்செயலாளராக பதவியேற்றவுடன் அவரை எப்படிக் குறிப்பிட வேண்டும்? ஜெயலலிதாவை எப்படிப் பெயர் சொல்லி செய்திகளில் குறிப்பிட்டோமோ அதேபோன்று திருமதி.வி.கே.சசிகலா என்றுதானே வாசிக்கப்பட வேண்டும்? ஆனால், அவர் பதவியேற்ற உடனேயே அவரை மட்டும் சின்னம்மா என்று அழைக்கச் சொல்லியது நெருடலை ஏற்படுத்தியது. அப்படி என்றால் ஜெயா டிவி அம்மாவுடையது இல்லையா? இவ்வளவு நாளாக யார் கையில் ஜெயா டிவி இருந்தது என்றெல்லாம் ஆதங்கம் எழுந்தது. அதனாலேயே மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவளிப்பதே எனக்குச் சரியாகத் தோன்றியது.”

”அ.தி.மு.க தலைமையின் பெரும்பான்மையைத் தாண்டி ஓ.பி.எஸ்ஸால் ஜெயிக்க முடியுமா?”

“மக்களுக்காக இறங்கி வந்து பணியாற்றும் பண்பும், மக்களோடு மக்களாகப் பழகும் தன்மையும், பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் குணமும் பன்னீர் செல்வத்திடம்தான் இருக்கிறது. தற்போதைய கட்சித் தலைமை வேண்டுமானால் மக்கள் பிரதிநிதிகள் 122 பேரைக் கொண்ட கட்சியாக இப்போதைக்கு இருக்கலாம். ஆனால், ஒன்றரைக் கோடி கட்சித் தொண்டர்களும், ஏழு கோடிக்கும் மேலான தமிழக மக்களும் அம்மா வழி நடக்கும் பன்னீர் செல்வத்தின் பக்கம்தான் இருக்கிறார்கள். அதனால் மக்கள் செல்வாக்கும், உண்மையான அ.தி.மு.க கட்சியும் ஓ.பி.எஸ் வசம்தான் இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.”

“ஜெயா டிவி உங்களுக்கு ஒரு தாய்வீடு மாதிரி இருந்தது. இனி அது இல்லை. அந்த உணர்வு எப்படி இருக்கிறது?”

“உண்மைதான். ஆனால், எல்லா சமயத்திலும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் எனக்கு மாதம்தோறும் வந்துகொண்டிருந்த கணிசமான சம்பளம் இனிமேல் வராது. அதற்காகப் பணத்தை மட்டுமே நோக்கமாக வைத்து நம்முடைய உணர்வுகளை எடைபோட முடியாதே. அவங்களா, இவங்களா என்று ஒத்தையா, இரட்டையா பார்க்கும் கும்பலில் நம்மால் இருக்க முடியாது. அப்படித்தான் அமைச்சராக இருந்த மா.பா.பாண்டியராஜன் பதவியைத் துச்சமாக நினைத்து வெளியில் வந்து ஓ.பி.எஸ்-க்குத் தோள் கொடுத்தார். ஜெயா டி.வி.யில் செய்தி வாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்காக மக்கள் முடிவு செய்த முதல்வரான பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு கொடுக்காமல் இருந்தது எனக்கு உறுத்தலாக இருந்தது. அதனால் எடுக்கப்பட்டதுதான் இந்த முடிவு. இதற்காக நான் கலங்கவுமில்லை. ஏனெனில், நான் மக்கள் பக்கம்தான் இருக்கிறேன்.” என்று ஆவேசமாகத் தன்னுடைய உணர்வுகளைக் கொட்டி முடித்தார் பாத்திமா பாபு.

- பா.விஜயலட்சுமி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்