தாரக் மேஹ்தா - 2000 எபிஸோடுகளைக் கடந்த சீரியலின் நதிமூலம்!

தாரக் மேஹ்தா, இந்தியாவின் மிகப் பிரபலமான நகைச்சுவை எழுத்தாளர். 'சித்ரலேகா' எனும் குஜராத்திய மொழி வார இதழில் 'துனியா நே ஊந்தா சஸ்மா' என்ற பெயரில் அவர் எழுதிய பத்திகள் அங்கே பட்டிதொட்டியெங்கும் பிரபலம். குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் நகரத்தில் 1929-ம் ஆண்டு பிறந்த தாரக் நேற்று காலமானார்.

எழுத்தாளர் தாரக் மேஹ்தா புகைப்படங்கள்

அவரது மறைவுக்கு நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் தலைவர்களும், எழுத்தாளர்களும், திரை பிரபலங்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.  'தாரக்கின் நகைச்சுவைக்கு ரசிகன் நான். அவரை சந்திக்க பலமுறை எனக்கு வாய்ப்பு கிட்டியது. அவர் பத்மஶ்ரீ விருது வாங்கும்போதும் சந்தித்தேன். அவரது எழுத்துகள் இந்தியாவின் 'வேற்றுமையில் ஒற்றுமை'யைப் பிரதிபலிப்பது' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி 'அவர் மறைந்த செய்தி கேட்டு துயரமடைந்தேன். நம் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர் அவர்' என வருத்தம் தெரிவித்துள்ளார்.

'சித்ரலேகா' வார இதழில் தாரக் எழுதிய 'துனியா நே ஊந்தா சஸ்மா' பத்திகளில் வந்த நகைச்சுவைகளை தழுவி ‘சப்’ தொலைக்காட்சியில் 'தார்க் மேஹ்தா கா உல்டா சஸ்மாஹ்' எனும் மெகா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 2008-ல் ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்த நெடுந்தொடர் கிட்டத்தட்ட இரண்டாயிரம் எபிஸோடுகளைக் கடந்து இன்றும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மும்பையில் கோகுல்தாம் எனும் பகுதியில் மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் மத்தியில் நடக்கும் காமெடி கலாட்டாதான் தொடரின் மையக்கதை. எல்லா பாத்திரங்களும் கலாசார வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக சகோதர உணர்வோடு வாழ்ந்துவருவதாக, எல்லாப் பண்டிகளையும் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட, நம் ஊர் 'பாரத விலாஸ்' படத்தின் நகைச்சுவை சீரியல் வெர்ஷன்தான் இந்த 'தாரக் மேஹ்தா கா உல்டா கா சஸ்மாஹ்'. அதனால் தான் மோடி 'அவர் எழுத்து வேற்றுமையில் ஒற்றுமையை பிரதிபலிப்பது' எனக் குறிப்பிட்டார். அந்த நாடகத்தில் அவர் பெயரிலேயே ஒரு கதாபாத்திரமும் இருக்கிறது. ‘உல்டா கா சஸ்மாஹ்’ என்றால் தமிழில் தாரக் மேஹ்தாவின் ‘தலைகீழ் மூக்குக்கண்ணாடி’ என்று அர்த்தம்.

2011 ஆம் ஆண்டு ‘சாகித்ய அகாடமி’ இவருக்கு ‘சாகித்ய கௌரவ் புரஸ்கார்’ என்ற விருதை வழங்கி கௌரவித்தது. 2015-ல் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஶ்ரீ' விருது வென்றார். துனியா நே ஊந்தா சஸ்மா, ஆ துனியா பஞ்சரப்போல், ஆக்‌ஷன் ரிப்ளை ஒன் பை டூ, அல்பெலுன் அமெரிக்கா வந்தெலுன் அமெரிக்கா, சம்பக்லால் டபுனி ஜுகல்பந்தி, பேடஜ் படாலி பாஜ் போபட்லால் டாரஜ் ஆகிய புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். எப்போதும் தன் செயல்களால் மக்கள் முகத்தில் புன்னகையையே பூக்கச் செய்த தாரக், முதல்முறையாக தனது இறப்பால் கண்ணீரை வரவழைத்திருக்கிறார்.

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!