வெளியிடப்பட்ட நேரம்: 07:56 (03/03/2017)

கடைசி தொடர்பு:07:56 (03/03/2017)

இளவரசி சந்திரகாந்தா... 20 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறாள்!

90களின் நடுவில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான பிரபல ஃபேன்டஸி தொடர் சந்திரகாந்தா. தேவகி நந்தன் காத்ரி எழுதிய ‘சந்திரகாந்தா’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட சீரியல் அப்போது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகர் சபாஷ் கான் நாவலின் நாயகன் ‘குன்வர் விரேந்திர விக்ரம் சிங்’ பாத்திரத்திலும், மிஸ். இந்தியா பட்டம் பெற்ற ஷிகா ஸ்வரூப் நாயகி சந்திரகாந்தா கதாபத்திரத்திலும் நடித்தனர். கிட்டதட்ட 20 வருடங்களுக்குப் பிறகு அதே நாவலைத் தழுவி மீண்டும் ஒரு தொடர் இந்தியில் ஒளிபரப்பாகவுள்ளது.

‘பிரேம் யா பஹேலி - சந்திரகாந்தா' எனப் பெயர் சூட்டபட்டிருக்கும் இந்தத் தொடர் நாளை முதல் ‘லைஃப் ஓகே’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் வீரேந்திர சிங் கதாபாத்திரத்தில் கவுரவ் கண்ணாவும், சந்திரகாந்தா கதாபாத்திரத்தில் க்ரித்திகா கம்ராவும் நடிக்கின்றனர். தொடர் சம்பந்தமாக க்ரித்திகா கம்ராவிடம் கேட்கபட்ட சுவாரஸ்யமான கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே...

ப்ரேம் யா பஹேலி சந்திரகாந்தா தொடரின் ஹீரோயின் க்ரித்திகா கம்ரா

சந்திரகாந்தா கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க ஒப்புக்கொண்ட காரணம்?

இதற்கு முன்னர் இப்படி ஒரு காஸ்ட்யூம் டிராமாவில் நான் நடித்தது இல்லை. இந்தத் தொடரின் கதையைக் கேட்ககேட்க சுவாரஸ்யமாய் இருந்தது. இந்தத் தொடரின் நாயகி வெறும் அழகி மட்டுமல்ல, அவர் ஒரு வீராங்கனை. அந்த பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்துப்போனது.

நீங்கள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான பழைய சந்திரகாந்தா தொடரைப் பார்த்திருக்கிறீர்களா?

சிறுவயதில் பார்த்தேன். ஆனால், இப்போது மீண்டும் அதை பார்க்க விரும்பவில்லை. பார்த்தால் நான் அதை ‘இமிடேட்’ செய்ய ஆரம்பித்துவிடுவேன். 90களின் கதையோ, திரைக்கதையோ இப்போது எடுபடாது. நடிப்பு, படமாக்கல், கதை சொல்லல் என எல்லாமே இப்போது மாறிவிட்டது. அதற்கேற்ப என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டேன்.

பழைய சந்திரகாந்தா தொடர் நிகழ்த்திய மேஜிக்கை இந்த தொடர் மீண்டும் நிகழ்த்துமா?

அது என் கையில் இல்லை. ஆனால், இந்த ‘பிரேம் யா பஹேலி - சந்திரகாந்தா’ தொடர் அதை விட பல மடங்கு பிரம்மாண்டாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என நம்புகிறேன். மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள் என நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்த தொடருக்காக நீங்கள் எடுத்துக்கொண்ட 'எக்ஸ்ட்ரா எஃபெக்ட்'?

என் கதாபாத்திரத்துக்கு நளினமான உடல் அமைப்பு வேண்டும் என்றார்கள். அதற்காக தினமும் சில மணிநேரம் யோகா செய்தேன். உடற்பயிற்சி செய்தால் உடல் கட்டுமஸ்தானதாக மாறிவிடும் என்பதால், யோகா மட்டும் செய்தேன்.

ப்ரேம் யா பஹேலி சந்திரகாந்தா தொடரின் நாயகி க்ரித்திகா கம்ரா

சந்திரகாந்தாவாக நடிப்பதில் உள்ள சிரமங்கள் என்ன?

இந்தி மற்றும் உருது மொழி உச்சரிப்புகள் சரியான விதத்தில் இருக்கவேண்டும். படப்பிடிப்பின்போது எனக்கு இந்தப் பிரச்னை இருந்தது இல்லை, ஆனால், வசனங்களைப் படித்து பார்க்கும்போது பயமாக இருக்கும். இந்தி, உருது மொழிகளில் உள்ள நீளமான வார்த்தைகள் பல வசனங்களில் இடம்பெற்றிருக்கும். அதை மனப்பாடம் செய்து, ஒத்திகை பார்க்க மட்டும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வேன்.

வேறு என்ன நிகழ்ச்சிகளில் பணியாற்றுகிறீர்கள்?

சந்திரகாந்தாவுக்கு மட்டும் நாளைக்கு 14 மணி நேரம் உழைக்கிறேன். வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்ற நேரம் இல்லை.

ரசிகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

எல்லோரும் ‘ப்ரேம் யா பஹேலி - சந்திரகாந்தா’ தொடரைக் கண்டிப்பாகப் பாருங்கள். இது மற்ற தொடர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தொடராக இருக்கும். உங்களைக் கண்டிப்பாக சந்தோஷப்படுத்தும்.

- டப்பாவாலா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்