Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"இஸ்லாமிய பெண் கிருஷ்ணனைப் பாடுவதில் தவறில்லை" - ஆதரிக்கும் தமிழ் இசையுலகம்! #VikatanExclusive

பெண் பாடகி

துங்கா நதி செழிக்க வைக்கும் பூமியான ஷிமோகா மாவட்டத்தில் இருந்து 'ஜீ கன்னடா' சேனலில்  "ச ரி க ம" என்கிற பாட்டுப்போட்டிக்கு வந்திருந்த சுஹானா சையத் என்கிற பாடகியின் வயது 22. கடந்த பெண்கள் தினத்தன்று மேற்படி நிகழ்ச்சியில் அவர் பாடிய 'ஶ்ரீகரனே ஶ்ரீனிவாசனே' என்கிற பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அவர் பாடிய வீடியோ யூடியூப் சேனலில் வைரலாகிக் கொண்டிருந்த வேளையில் மற்றொரு பக்கம் தீவிர இஸ்லாமிய சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பும்,மிரட்டலும் கிளம்பியது

"சுஹானா, ஆண்களுக்கு முன் நீ பாட்டுப்பாடி இஸ்லாத்துக்கு பெரும் களங்கத்தை விளைவித்து விட்டாய். நீ ஏதோ பெரிய சாதனையைச் செய்து விட்டதாகக் கருதாதே, 6 மாதங்களுக்கு முன்னர் குரானை ஏற்றுக்கொண்டு படிக்க துவங்கியவர்கள் கூட மதத்திற்கு மதிப்பு அளித்துக்கொண்டிருக்கும் போது பிறவி முஸ்லிமான நீ இப்படிச் செய்திருப்பது பெரிய குற்றம். இதற்கு உன்னைத் தூண்டிய பெற்றோர்கள் நிச்சயமாகச் சொர்க்கத்தை அடைய மாட்டார்கள். நீயும் உடனடியாக பர்தாவை விலக்க வேண்டும். அதை அணிந்து கொண்டு பிற மதக் கடவுளை பாடி அவமதிக்க வேண்டாம்"  என 'மங்களூர் முஸ்லிம்ஸ்' என்கிற முகநூல் குழுவில் தெரிவித்திருந்தனர். பல தனிப்பட்ட பயனர்கள் நேரடியாகவே சுஹானாவை மிரட்டி ஸ்டேடஸ் எழுதியுள்ளனர். சுஹானாவும் இவர்களின் மிரட்டலுக்கு அஞ்சி 'நாட் ரீச்சபிள்' நிலைக்குப் போய்விட்டார். இது பற்றித் தமிழ் தொலைக்காட்சிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் தமிழ் இசையுலகை சார்ந்த முக்கியமான மூவரிடம் கருத்துக்கள் கேட்டோம்.  

கங்கை அமரன்

கங்கை அமரன்"அந்தப் பெண்ணுக்கு எதிரான கருத்துகளுக்கு அவரின் பெற்றோர்கள்தான் பதில் சொல்லவேண்டும். கர்நாடக சங்கீதம் உள்ளிட்ட சாஸ்திரீய சங்கீதங்களில் இருப்பவை அனைத்தும் கடவுளைப் பற்றிய பாடல்கள்தான். எனவே அந்த இசையைப் படிக்க வைத்த பெற்றோர்தான் பதில் சொல்லவேண்டுமே தவிர அந்தப் பெண் அல்ல. அவர் எந்தவகையிலும் இதற்குப் பொறுப்பு ஆகமாட்டார். க்ளாசிக்கல் பாடல்கள் அனைத்துமே தெய்வங்களை பற்றிய பாடல்தான். தியாகராஜர் கீர்த்தனையைப் பாடாமல் இந்தியன் க்ளாசிக்கல் முழுமை பெறாது. அப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ளும் யாராக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும் இந்தக் கீர்த்தனைகளை பாடித்தான் ஆகவேண்டும். 

கடந்த 'சன் சிங்கர்' சீசன் 5  நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ரிஹானாவும் ஆறாவது இடத்தில் வந்த ரியாஸும் இதே சுஹானா சையத் சார்ந்திருக்கும் மதத்தைச் சேர்ந்தவர்கள்தான். ரிஹானா தன் குரலால் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவோடு வெற்றி பெறவில்லையா? அவரும் தற்போது சாஸ்திரிய சங்கீதம் கற்றுத்தானே வருகிறார்.  சுஹானா சையத் பாடியதில் எந்தத்தவறுமே இல்லை என்பது என் கருத்து. தயவு செய்து இசையில் மதம் பார்க்காதீர்கள் என்று வேண்டிக்கொள்கிறேன்" என்றார். 

ஜேம்ஸ் வசந்தன் 

ஜேம்ஸ் வசந்தன்"கர்நாடக சங்கீதத்தில் இப்படியான பாடல்கள் மட்டுமே இருப்பதால், தமிழ்நாட்டிலும் முஸ்லிம்களும், கிறித்தவர்களும்  பாடல் கற்றுக் கொள்ளும் சதவிகிதம் மிக மிகக் குறைவு. இதனால்தான் என் இசைப்பள்ளியில் பாடம் படிக்க வரும் பிற மதத்தினருக்காக அவர்களின் மதம் சார்ந்த பாடல்களை உருவாக்கி வைத்துள்ளேன்.  கர்நாடக சங்கீதத்தில் வரும் முதல் பாடலான 'லம்போதர' என்கிற பிள்ளையார் பாடலின் ராகத்தில் குரானிலிருந்தும், பைபிளிலிருந்து பாடல்கள் பாடச் சொல்லிக்கொடுக்கிறோம். கர்நாடக சங்கீதத்தில் உள்ள இந்துக் கடவுள் பாடல்களைக் காரணம் சொல்லிப் பிற மதத்துப் பிள்ளைகள் விலகிப்போய் விடக்கூடாது என்பதற்காக இப்படிக் கற்றுக்கொடுக்கிறேன்.  

கிறிஸ்தவத்திலும் இதே போன்ற பிரச்னைகள் உண்டு. என்ன ஒன்று, இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதைப் பிடிக்காத முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவித்து விமர்சனத்துக்கு உள்ளாவார்கள். ஆனால் தீவிர கிறித்தவர்கள் வெளியில் தெரியாமல் பாடியவரை அழைத்து அறைக்குள் வைத்து அன்பாகச் சொல்வது போல் இதே கருத்தை திணிக்க முயல்வார்கள். சி.எஸ்.ஐ மற்றும் கத்தோலிக்கர்களிடையே இல்லாவிட்டாலும் வேறு சில கிறிஸ்தவ அமைப்புகளிடம் அத்தகைய பழக்கம் உண்டு. 

இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போதே பார்த்தேன். 'இந்தப் பெண் இவ்வளவு அழகாகப் பாடுகிறார். ஆனால் எப்படி இந்தப்பாடலைப் பாடும் துணிச்சல் வந்தது, நிச்சயம் இது பிரச்னையாகும்' என்று அப்போதே நினைத்தேன். இசையை மதம் கொண்டு தனிமைப் படுத்த முடியாது" என்றார். 

பாடகர் மனோ

மனோ

"இசையே கடவுள் ரூபம்தான். மனிதன் கடவுளை அடையும் வழிகளில் ஒன்றுதான் இசை என்பது என் கருத்து. அது அல்லா என்றாலும் இயேசு என்றாலும், கிருஷ்ணர் என்றாலும் இசையால் துதிப்பதை தடுக்கக்கூடாது.  யாரும் எதை வேண்டுமானாலும் பாடலாம் அதை மதத்தின் பெயரால் தடுக்கக்கூடாது. முடிந்தால் அந்தப் பெண்ணுக்கு இத்தனை அழகான குரலை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்"  என்றார். 

-வரவனை செந்தில்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்