Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘முடிஞ்சா உயிரோட வா!’ காட்டுக்குள் ஒரு விபரீத ரியாலிட்டி ஷோ..! #Game2Winter

2007 -ஆம் ஆண்டு மல்யுத்த வீரர் `ஸ்டோன் கோல்டு' ஸ்டீவ் ஆஸ்டின் நடிப்பில் 'தி கண்டம்ன்' என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படத்தில், தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ தயாரிப்பாளர் ஒருவர் வெவ்வேறு நாட்டை சேர்ந்த சிறைக் கைதிகளை விலைக்கு வாங்கி, தென் பசிபிக் பெருங்கடலிலுள்ள தீவுக்குக் கடத்திவிடுவார். அவர்களுள் யார் ஒருவர் கடைசிவரை உயிருடன் இருக்கின்றாரோ அவரை விடுதலை செய்வதாக வாக்கும் கொடுப்பார். எனவே, சிறைக் கைதிகள் ஒருவரை ஒருவர் கொலை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அவற்றைப் படம்பிடித்து இணையத்தில் ஒளிபரப்பி லாபம் சம்பாதிப்பார் அந்தத் தொலைக்காட்சி தயாரிப்பாளர். கதையாக கேட்கும்போதே `பகீர்' என இருக்கும் இந்த கான்செப்ட் இப்போது நிஜத்திலும் நடக்கப்போகிறது.

சைபீரியன் காடுகளில் விபரீத ரியாலிட்டி ஷோ

ஹாலிவுட் படக்கதைகளை மிஞ்சும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ள இந்த கேம்ஷோ ரஷ்யாவிலுள்ள சைபீரியன் வனப்பகுதிகளில் நடக்கவிருக்கிறது. இந்த ரியாலிட்டி ஷோவிற்கு 'கேம் 2 : விண்டர் ஷோ ' என பெயர் சூட்டியிருக்கிறார் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர். விதிகள் இவைதான். 30 பேர்கள் அந்த வனப்பகுதியில் விடப்படுவார்கள். 9 மாதங்கள் காலம். யார், தைரியமாக உள்ளேயே இருந்து உயிரோடு வெளியே வருவார்களோ அவர்களுக்குப் பரிசுத்தொகை. முடியவில்லை என்றால்.. பாதியில் பை பை சொல்லிவிடலாம். அந்த 9 மாதகாலத்தில், சின்னச் சின்னப் போட்டிகளும் நடக்குமாம். 

ரஷ்யாவின் தொலைக்காட்சித் தயாரிப்பாளரான யெவ்கேனி பிட்டோவ்ஸ்கிதான் இதற்கும் மூளை.  15 பெண்கள் மற்றும் 15 ஆண்கள் கலந்துக் கொள்ளவிருக்கும் இந்த ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெறுபவருக்கு 1.7 மில்லியன் டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.மேலும், இது எடிட்டிங் எல்லாம் முடிந்து, எபிசோடுகளாக டிவியில் வரும் வரைக் காத்திருக்கப் பொறுமையில்லாத   பார்வையாளர்கள் இணையத்தில் பணம் கட்டி நேரலையாக இந்த நிகழ்ச்சியை பார்க்கலாம், நேரலையாகப் பார்க்காதவர்களுக்கு எடிட்டட் வெர்ஷன்தான் கிடைக்கும் எனவும் போட்டியாளர்களுக்கு பணம் கொடுத்தும் உதவலாம் எனவும் கூறியிருக்கிறார் யெவ்கேனி. 

மேலும் அவர் கூறுகையில், " சைபீரிய வனப்பகுதியிலுள்ள டாம்ஸ்க் பகுதியில் இந்த ஷோ நடத்த திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து ஒன்பது மாதங்கள் இரவுப்பகலாக ஒளிபரப்பாகவுள்ள இந்த ஷோ ஜூலை மாதம் முதல் துவங்குகிறது. வெறும் 3.5 சதுர கிலோ மீட்டர் அளவு கொண்ட டாம்ஸ் பகுதியில் கோடை காலத்தில் 35 டிகிரி வெயிலும், குளிர் காலத்தில் மைனஸ் 50 டிகிரி குளிரும் வாட்டி எடுக்கும். போட்டியாளர்களுக்கு இவை கடும் சவாலாக இருக்கும். அதேபோல், அங்கு வாழும் பழுப்பு நிறக்கரடி, ஓநாய் மற்ற வனவிலங்குகளும் பெறும் அச்சுறுத்தலாக இருக்கும். கரடிகளிடம் இருந்து தப்பிக்க போட்டி தொடங்கும் முன் போட்டியாளர்களுக்கு சில பயிற்சிகளும் வழங்குவோம்" என கிலி கிளப்புகிறார்.

"போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு கத்தி மட்டும் வழங்கப்படும். துப்பாக்கி உபயோகிக்க அனுமதி கிடையாது. குளிரை சமாளிக்க ஒரு செட் கம்பிளி ஆடை கொடுப்போம். அந்தப் பகுதியில் நாங்கள் பொருத்தவுள்ள 2,000 கேமராக்கள் அங்கு நடக்கும் ஒவ்வொரு சின்ன அசைவையும் கூட பதிவு செய்யும். போட்டியாளர்களுக்கு இடையே வன்முறை  ஏதும் நிகழ்ந்தால், நாங்கள் அதை தடுத்து நிறுத்த மாட்டோம். போட்டியாளர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டாலும், கொலையே செய்யபட்டாலும் நாங்கள் தடுக்க மாட்டோம். ஆனால், அவர்கள் சட்டத்தின் முன் பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்கிறார். அடப்பாவிங்களா...

இந்தப் போட்டியில் கலந்துக்கொள்ள வேண்டி வந்த பல்வேறு விண்ணப்பங்களில் இருந்து சிலரை மட்டும் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் குழு தேர்வு செய்துள்ளது. மாடல், நீச்சல் பயிற்சியாளர், நடிகை, ரியல் எஸ்டேட் தரகர், விமானி , ஆசிரியர், பாதுகாப்பு அதிகாரி, பொருளாதார நிபுணர் என பல துறையை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஷோ இணையத்தில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பாகவுள்ளதாம். இதைக் கேள்விபட்ட பலரும் கடுமையாக திட்டித் தீர்த்து, நிகழ்ச்சி நடத்துபவர்களை கழுவி ஊற்றி வருகிறார்கள். மறுபுறம் `ஷோ எப்போ சார் ஸ்டார்ட் பண்ணுவீங்க?' என சிலர் ஸ்டேட்டஸ் போட்டு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

- டப்பாவாலா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்