வெளியிடப்பட்ட நேரம்: 18:52 (29/03/2017)

கடைசி தொடர்பு:18:50 (29/03/2017)

சிவகார்த்திகேயன் மட்டுமல்ல, இவங்களும் `VJ டு நடிகர்' ஆனவங்கதான்!

சின்னத்திரையில் தொகுப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கி இன்று வெள்ளித்திரையில் ஹீரோக்களாக வளர்ந்திருக்கும் `வீஜே டு ஆக்டர்' கள் சிலரின் பட்டியல்  இது...

வீஜே டு ஆக்டர் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் :

`கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞனாக வாழ்க்கையை தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் `மோஸ்ட் வான்டட்' நாயகனாக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன். 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆன பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் ஆரம்பித்தார்.  தொகுப்பாளராக ரைமிங், டைமிங் காமெடிகளால் ரசிகர்களை ஈர்த்த சிவா, 2011 ஆம் ஆண்டு சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விகடன் விருதையும் வென்றார். டிவி நிகழ்ச்சிகள் மூலமாகவே பட்டித்தொட்டியெங்கும் பிரபலமடைந்திருந்தவர் `மெரினா' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் எட்டே படங்களில் ஹீரோவாய் நடித்து எட்ட முடியாத அளவு உயர்ந்து நிற்கிறார்.

வீஜே டூ ஆக்டர் ப்ரஜின்

ப்ரஜின் :

சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார் ப்ரஜின். அதன் பிறகு சில தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துக்கொண்டிருந்த ப்ரஜினுக்கு  `காதலிக்க நேரமில்லை' நாடகம் பெரும் திருப்புமுனையாய் அமைந்தது. அது கொடுத்த வெளிச்சம் வெள்ளித்திரை வரை அவரை கூட்டி சென்றது. ஆரம்பத்தில் சில தமிழ் மற்றும் மலையாள படங்களில் சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தவர் `தீக்குளிக்கும் பச்சைமரம்' படத்தின் மூலம் நாயகன் ஆனார். இவர் ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பழைய வண்ணாரப்பேட்டை'.

நடிகர் மாகாபா

மாகாபா ஆனந்த் :

`ரேடியோ மிர்ச்சி'யில் பல ஆண்டுகள் பண்பலைத் தொகுப்பாளராக பணியாற்றிய மாகாபா ஆனந்த், அதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். ஆரம்பத்தில் `சினிமா காரம் காப்பி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அதைத்தொடர்ந்து ‘சூப்பர் சிங்கர்’, ‘அது இது எது’ நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். பின்னர் 2014 ஆம் ஆண்டு `வானவராயன் வல்லவராயன்' படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்த மாகாபா `நவரசதிலகம்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து கடலை,அட்டி,பஞ்சுமிட்டாய் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார்

நடிகர் முரளி ராம்

முரளி ராம் :

சன் மியூசிக், இசையருவி என இரண்டு சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி பட்டையை கிளப்பியவர். சினிமா நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்து, தொகுத்து வழங்கியபோது சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் இவரை தேடி வந்தது. 'மதுரை சம்பவம்' படத்தின் இயக்குநர் யுரேகா இயக்கிய `தொப்பி' படத்தில் நாயகனாக நடித்தார்.

சுரேஷ் ரவி

சுரேஷ் ரவி :

இவரும் சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக பணியாற்றிவர். `கால் மேல காசு', `காஃபே டீ ஏரியா' ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்தார். இவர் சமீபத்தில் வெளியான `மோ' எனும் திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். இப்போது 'அதிமேதாவிகள்' எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

அசார்

அசார் :

சூரியன் எஃப் எம் ஆர்ஜே, ஆதித்யா டிவி விஜே, மிமிக்ரி கலைஞர், நடிகர் என பலமுகம் கொண்டவர் அசார். இவர் ஹீரோவாக நடித்திருக்கும் `ஏன்டா தலையில எண்ண வெக்கல' விரைவில் வெளியாகவுள்ளது. அந்த திரைப்படத்தின் இயக்குநரும் விக்னேஷ் கார்த்திக் எனும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் தான்.

-ப.சூரியராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்