ஹாலிவுட் சினிமாவிலிருந்து டி.வி சீரியலாக மாறியவற்றில் என்ன விசேஷம்? | These Hollywood Movies have been made as Television Series

வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (03/04/2017)

கடைசி தொடர்பு:17:58 (03/04/2017)

ஹாலிவுட் சினிமாவிலிருந்து டி.வி சீரியலாக மாறியவற்றில் என்ன விசேஷம்?

ஹாலிவுட்டில் வெளியாகி தாறுமாறு ஹிட் அடித்த சில திரைப்படங்களின் சீக்வல் தொலைக்காட்சி சீரியலாக உருவாக்கப்பட்டு ஒளிபரப்பாகியிருக்கின்றன. அவற்றில் சில சீரியல்கள் பற்றி...

ரஷ் ஹவர்  - சினிமா டூ சீரியல்

ஜாக்கி சான் மற்றும் க்றிஸ் டக்கர் நடிப்பில் 1998 ஆம் ஆண்டு வெளியான ஆக்‌ஷன் காமெடி திரைப்படம் `ரஷ் ஹவர்'. படத்தில் ஜாக்கிசானும் க்றிஸ் டக்கரும் இணைந்து கொளுத்திப்போட்ட காமெடி பட்டாசுகளால் படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. 33 கோடி டாலர் பட்ஜெட்டில் உருவான முதல் பாகம் 245 கோடி டாலர் வசூலை வாரிக்குவித்தது. அதன் இமாலய வெற்றியைத் தொடர்ந்து `ரஷ் ஹவர்' படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களும் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றியடைந்தன. இதேபோல், இந்தப் படத்தின் அடுத்த சீக்வல் தொலைக்காட்சி சீரியலாக 2016 ஆம் ஆண்டு ஓளிபரப்பானது.  படத்தில் ஜாக்கிசான் ஏற்று நடித்த `டிடெக்டிவ் ஜோனதன் லீ' கதாபாத்திரத்தில் நடிகர் ஜோன் ஃபூவும், க்றிஸ் டக்கர் ஏற்று நடித்த `டிடெக்டிவ் ஜேம்ஸ் ஸ்டீவன் கார்டர்' கதாபாத்திரத்தில் நடிகர் ஜஸ்டின் ஹைர்ஸும் நடித்திருந்தார்கள். ஆனாலும், `ரஷ் ஹவர்' திரைப்படத்தின் வெறித்தன ரசிகர்களுக்கு இந்த சீரிஸ் பிடிக்கவில்லை. 

மைனாரிட்டி ரிப்போர்ட் சினிமா டூ சீரியல்

ஸ்டீவன் ஸ்பில்பெர்க் இயக்கத்தில் டாம் க்ரூஸ் நடித்து வெளியான திரைப்படம் `மைனாரிட்டி ரிப்போர்ட்'. 2002 ஆம் ஆண்டு வெளியான இந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் சீக்வல் 2015 ஆம் ஆண்டின் இறுதியில் தொலைக்காட்சி சீரிஸாக ஒளிபரப்பானது. இதில் ஸ்டார்க் சான்ட்ஸ், மேகன் குட், நிக் சானோ மற்றும் டேனியல் லன்டன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தனர். இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பெர்க் நிர்வாக தயாரிப்பைக் பார்த்துக்கொண்டார். இந்த சீரிஸும் ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை.

பிளேட்

வெஸ்லி ஸ்னைப்ஸ் நடிப்பில் 1998 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சூப்பர் ஹீரோ திரைப்படம் `பிளேட்'. இந்தப் படத்தை விமர்சகர்கள் `சுமார்' என விமர்சித்தும், ரசிகர்கள் `சூப்பர்' என குஷியானார்கள். அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாகம் பாகங்களும் வெளியாகி நல்ல லாபத்தை பெற்றுத்தந்தது. இந்த படத்தின் அடுத்த சீக்வலும் தொலைக்காட்சி சீரிஸாக ஒளிபரப்பானது. `பிளேட்' கதாபாத்திரத்தில் நடிகர் கிர்க் ஜோன்ஸ் நடித்திருந்தார்.

டேக்கன் - சினிமா டூ சீரியல்

2008 ஆம் ஆண்டில் வெளியாகி தாறுமாறு ஹிட் அடித்த திரைப்படம் `டேக்கன்'. ஓய்வு பெற்ற சிஐஏ அதிகாரி பிரயன் மில்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார் நடிகர் லியம் நீஸன். இந்தப் படத்தை தான் தமிழில் `விருதகிரி' என்ற பெயரில் ரீமேக்கி நடித்திருந்தார் விஜயகாந்த். `டேக்கன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் மற்றும் மூன்றாகம் பாகங்களும் வெளியாகி அதே அளவு வெற்றியை பெற்றுத்தந்தன. இந்நிலையில், இந்த படத்தின் அடுத்த சீக்வல் தொலைக்காட்சி சீரிஸாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கதையின் நாயகன் பிரயன் மில்ஸ் கதாபாத்திரத்தில் தொலைக்காட்சி நடிகர் க்ளைவ் ஸ்டான்டன் நடித்து வருகிறார்.

லிமிட் லெஸ் - சினிமா டூ சீரியல்

பிராட்லி கூப்பர், ராபர்ட் டி நீரோ ஆகியோரின் நடிப்பில் வெளியான த்ரில்லர் திரைப்படம் `லிமிட்லெஸ்'. 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றியடைந்தது. இந்தத் திரைப்படத்தைத் தழுவி இதே பெயரில் தொலைக்காட்சி சீரிஸ் ஒன்றும் 2015 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக துவங்கியது. `லிமிட்லெஸ்' படத்தின் சீக்வலாக இல்லாமல் ஸ்பின்  ஆஃபாக இந்தத் தொலைக்காட்சித் தொடர் உருவாக்கப்பட்டிருந்தும் ரசிகர்களிடம் ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதேபோல், அவெஞ்சர்ஸ் திரைப்பட சீரிஸ்களிலிருந்து  மார்வெல்ஸ் ஏஜென்ட்ஸ் ஆஃப் ஷீல்ட், டேர் டெவில், ஜெஸிகா ஜோன்ஸ் போன்ற பல தொலைக்காட்சி சீரிஸ்கள் உருவாக்கப்பட்டன. `மென் இன் பிளாக்', `தி மாஸ்க்' , 'தி மம்மி'  போன்ற சில திரைப்படங்களும், பல அனிமேஷன் திரைப்படங்களும்  தொலைக்காட்சியில் அனிமேஷன் சீரிஸ்களாவும் ஒளிபரப்பாகின. 


-ப.சூரியராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close