Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

“கவுண்டமணி செந்தில் மாதிரி... ‘முல்லை - கோதண்டம்’னு பேர் வாங்கணும்!” - காமெடி இணையர்

முல்லை-கோதண்டம்

நகைச்சுவை என்பது போகிற போக்கில் சிரித்துவிட்டு செல்வது மட்டும் அல்ல. அதில் சிறிதளவு ஊசி ஏற்றுவதுபோல், சிந்திக்கவும் செய்துவிட்டு செல்வதுதான் ஒரு நகைச்சுவையின் உண்மையான பரிணாமம். சோகத்தில் தவழ்ந்து, துன்பத்தில் மூழ்கிக் கிடக்கும் எந்த ஒரு மனிதனும் 'முல்லை-கோதண்டம்' இரட்டையர், நகைச்சுவையைப் பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியாது. அந்த சிரிப்பிலிருந்து மீள்வதற்கே சிறிது நேரமாவது ஆகும்.   விஜய் டி.வி-யின் ‘கலக்கப் போவது யாரு?’ நிகழ்ச்சியின் மூலம் நகைச்சுவையாளர்களாக அடையாளம் காணப்பட்ட இரட்டையர்கள், தற்போது தமிழ் சினிமாவிலும் கால் பதித்து வருகிறார்கள். அவர்களுடன் ஒரு நேர்காணல். 

"நீங்கள் இரட்டையர்கள் ஆன கதை?" 

"எங்களைப் பற்றி நாங்களே பெருமையா பேசுனா, அவ்வளவு நல்லாவா இருக்கும்?" முல்லை சொல்லி முடிப்பதற்குள்... "பேட்டிக்கு, பேமெண்டெல்லாம் இல்லையாம், அதனால் பில்டப் இல்லாமல் சொல்லு" என்று கோதண்டம் கலாய்க்க, கலகலப்பாகத் தொடங்கியது நேர்காணல்.

"ராஜ் டி.வி.யில் செய்திவாசிப்பாளர்தான் என் மீடியா என்ட்ரி. அதன்பிறகு நானும் பல டி.வி.யில பலவிதமான நிகழ்ச்சிகள் பண்ணிட்டேன். அந்த நேரத்தில் கோதண்டம் வேறொரு டி.வி.யில காமெடி நிகழ்ச்சி தொகுத்து வழங்கிட்டு இருந்தார். ஒரு கட்டத்துல இரண்டுபேரும், ஒரு டி.வி.யில காமெடி ஷோ பண்ண ஆரம்பிச்சோம். அங்க, அவர் ஷோ முடிச்சிட்டு வெளியில வரும்போது, நான் அப்போதான் உள்ளே போவேன். அப்படித் தான் எங்களுக்குள்ள நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டுச்சு. அதன்பிறகு கடந்த 2002-ல் இருந்து இரண்டு பேரும் சேர்ந்து நிகழ்ச்சி பண்ண ஆரம்பிச்சோம். அந்த நிகழ்ச்சி எல்லாம் செம ஹிட். நிறையப் பேர் வெளியிலேயும், கோயில் திருவிழாவிலும் எங்களை நிகழ்ச்சி பண்ண கூப்பிட்டாங்க. இப்படித்தான் நாங்க தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் பண்ணினோம். இப்படித்தான் இந்த இரட்டையர்கள் உருவானார்கள்." 

முல்லை-கோதண்டம்

"ஒற்றுமை?" 

கோதண்டம்:  "நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். அதனாலேயே எனக்குக் கோபம் கொஞ்சம் அதிகமாகவே வரும். என்னைப் பற்றி சொல்ல வேற என்ன இருக்கு?" என்று நாயகன் கமல் பாணியில் வானத்தைப் பார்க்கிறார்.

கோதண்டத்தை மேலும் கீழும் பார்த்துவிட்டு முல்லை தொடர்கிறார்; "என்னுடைய இயற்பெயர் தனசேகரன். சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் கோணாமங்கலம். படிச்சது தமிழ் இலக்கியம். தமிழ் மேல் உள்ள ஒரு காதல். அதைத்தாண்டி, நறுக்குன்னு ஒரு பேரு தேவைப்பட்டதால முறுக்குனு வைக்காமல், 'முல்லை'னு, எனக்கு நானே வச்சுகிட்டேன். நான் அந்த அளவுக்குக் கோபக்காரன் எல்லாம் இல்ல. 

நாங்க இரண்டுபேரும், இரட்டையர் ஆனதும், இரண்டு விசயத்தை தெளிவா பேசிகிட்டோம். அதுல முதல் விசயம் 'பணம்'. எவ்வளவு பணம் கிடைத்தாலும் சரிபாதி. அப்பறம் 'ஈகோ'. இந்த இரண்டு விசயம் தொடர்பாக நம்மைச் சுற்றி நிறைய விசயம் நடக்கும். நம்மை சிலர் தூண்டிகூட விடலாம். எதையும் நீ காதில் வாங்கிக்காத, நானும் வாங்கிக்க மாட்டேன். உன்னையப் பற்றி என்னிடமும், என்னையப் பற்றி உன்னிடமும் பலபேர் பலவிதமா பேசுவாங்க. எதைப் பற்றியும் கண்டுக்காத. அந்த ஆளமட்டும் அடையாம் கண்டுக்கணும். அப்பத்தான், அவரிடம் நாம் இன்னும் கொஞ்சம் உசாரா இருக்க முடியும். என்று எங்களுக்குள் ஆரம்பத்திலேயே பேசிக்கொண்டோம். அதன்படி, விஜய் டி.வி.யில் நாங்க ஜெயிக்கத் தொடங்குகிறோம் என்ற நிலை வந்த பிறகு, எங்களை பிரிக்க பல வேலைகள் வெளியில் இருந்து நடந்தது. எதற்கும் நாங்கள் மசியவில்லை. 'போ.. போ.. நான் பார்த்த ஆயிரத்துல ஒருத்தன் நீ' அப்படினு இரண்டுபேருமே அந்தமாதிரி தருணங்கள ஈசியா கடந்து போயிட்டோம்." 

"நகைச்சுவையில் மயங்கி யாரும் 'காதல்.. கீதல்..' என்று?" 

கோதண்டம்: . "நீங்கள் கேப்பிங்கனு தெரியும்.. ஏனா, நான் அந்த அளவுக்கு பெர்சனாலிட்டி இருக்கேன்ல. என்ன பண்றது சார், விஜய் டி.வி.யில வர்றதுக்கு முன்னாடியே, எங்கள் வாழ்க்கையில விதி வந்து கும்மியடிச்சிட்டு போயிருச்சு. எங்களுக்கெல்லாம் எப்போவே, திருமணம் ஆகி, குழந்தைகள் பொறந்து எம்புட்டு வருசம் ஆச்சு தெரியுமா சார்?" சார், வருத்தப்படுரிங்களா..? "சும்மா சொன்னேன். நாங்க பேசுற நகைச்சுவையை ரசிக்கரவுங்க எல்லாருமே குடும்ப ஆடியன்ஸ்தான். அவுங்கள சிரிக்க வைக்குறதுதான் கஷ்டம். அதுனால, அந்த மாதிரியான அனுபவங்கள் எல்லாம் நடக்கல சார். ஆனால், இந்த கேள்வியதான் எங்கப் போனாலும் கேக்குறாங்க." "வருத்தப்படுறியா நீ? இரு இரு வீட்டுல கோத்துவிடுறேன்" என்று முல்லை சொல்லி முடிப்பதற்குள், "..அப்படினு முல்லை மனசுக்குள்ள நினைச்சாருனு சொல்ல வந்தேன்" என்று கோதண்டம் சமாளித்தார். 

"நீங்கள் எப்போதுமே இப்படித்தானா?, இந்த கான்செப்டெல்லாம் எங்கிருந்து எடுக்குறீங்க??" 

கோதண்டம்:  "அப்படிச் சொல்ல முடியாது, இப்படிதான் எப்போதுமே. நாங்க எதற்குமே ரூம் போட்டெல்லாம் யோசிச்சது கிடையாது. அப்படியே வெட்டியா பேசிப் பேசியே.. ஒரு கான்செப்ட்ட டெவலப் பண்ணியிருவோம்." முல்லை:  "பொதுவா, கோதண்டம்தான் கான்செப்ட் உருவாக்குவார். அதை இரண்டுபேரும் சேர்ந்து மெருகேற்றுவோம். அதே நேரத்துல பாதி ஸ்கிரிப்ட், ஆன் தி ஸ்பாட்ல அடிச்சிவிடுவோம். அதுக்கு ஏத்த மாதிரி ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கவுண்டர் கொடுத்துக்குவோம். 

முல்லை கோதண்டம்

"சினிமா வாய்ப்புகள் பற்றி?" 

முல்லை:  "ஆரம்பத்தில் சினிமா வாய்ப்புகள் இருவருக்கும் தனித் தனியாகத்தான் வந்தது. சூட்டிங் ஸ்பாட் போனதும், இரண்டுபேரும் சேர்ந்தே நடிங்கனு பலரும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அதனால,  'சரவணன் இருக்க பயமேன்' உள்ளிட்ட பல படங்கள்ல ஜோடி போட்டு இப்ப நடிக்க ஆரம்பிச்சுட்டோம். இப்ப இசையமைப்பாளர் பரணி இயக்கும் 'ஒண்டிக்கட்ட' படத்தில் எங்க நடிப்பை பார்த்துட்டு, 'கவுண்டமணி - செந்தில் மாதிரி காமெடியில் கலக்கிட்டீங்கனு' பரணி சாரே சொன்னார். அதுதான் எங்களுக்கு கிடைச்சா அங்கீகாரமா நாங்க நினைக்கிறோம்." கோதண்டம்: தமிழ் சினிமாவில் 'கவுண்டமணி - செந்தில்' இல்லாத வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அப்படி இருந்தும், அந்த பெயரைச் சொல்லி எங்களை அழைக்கும்போது, அதுதான் எங்களுக்கான அங்கீகாரமா நாங்கள் நினைக்கிறோம். இனிமேல், நாங்க அப்படித்தான் நடிக்காலாம்னு முடிவு பண்ணியிருக்கிறோம். கான்செப்ட்டுக்குள்ளேயே.. கான்செப்ட்ட பிடிச்சோம் பாத்தீங்களா!?" என்று சொல்லிக்கொண்டே சிரிக்கிறார் கோதண்டம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement